குருதி ஆட்டம்
விமர்சனம்
தயாரிப்பு - ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - ஸ்ரீகணேஷ்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - அதர்வா, பிரியா பவானி சங்கர்
வெளியான தேதி - 5 ஆகஸ்ட் 2022
நேரம் - 2 மணி நேரம் 27 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
படத்திற்கு 'குருதி ஆட்டம்' என சரியான தலைப்பைத்தான் வைத்திருக்கிறார்கள். எப்படியும் 200 கொலைகள் படத்தில் விழுந்திருக்கலாம். கத்தி எடுத்து மாற்றி மாற்றி வெட்டிக் கொள்கிறார்கள். மதுரை என்றாலே கத்தி, கொலை, ரத்தம் என தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் ஒரு தவறான அடையாளத்தை ஏற்படுத்திவிட்டார்கள். அதை இளம் இயக்குனரான ஸ்ரீகணேஷ் போன்றவர்கள் தொடர்வது ஆச்சரியம். '8 தோட்டாக்கள்' என்ற படத்தின் மூலம் தனி கவனத்தை ஈர்த்தவர், இப்படி ஒரு சாதாரண கமர்ஷியல் படம் பக்கம் சாய்ந்து அதைச் சரியாகவும் சொல்லாதது அதிர்ச்சிதான்.
மதுரையில் மருத்துவமனையில் வார்டு பாய் ஆக வேலை பார்ப்பவர் அதர்வா. கபடி விளையாட்டில் அவர்களது அணி சிறந்து விளங்கும் ஒரு அணி. அவருக்கும் மதுரையையே ஆட்டிப் படைக்கும் பெண் தாதாவான ராதிகாவின் மகன் கண்ணா ரவிக்கும் இடையே கபடி விளையாட்டில் எப்போதும் போட்டிதான். கண்ணா ரவியின் நெருங்கிய நண்பன் பிரகாஷ் ராகவன், இவரது அப்பா ராதாரவி, இவரும் மதுரையில் ஒரு தாதா தான். ஒரு தியேட்டர் தகராறில் கண்ணா ரவி நண்பர்களுக்கும், அதர்வாவுக்கும் கடுமையான சண்டை நடக்கிறது. அதர்வாவைப் பழி வாங்க அவரது வீட்டில் கஞ்சாவை வைத்து கைது செய்ய வைக்கிறார் பிரகாஷ். இருந்தாலும் கண்ணா ரவி தனது நண்பன் பிரகாஷுக்குத் தெரியாமல் அதர்வாவை ஜாமீனில் எடுக்கிறார். இதனால், கண்ணாவுடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார் அதர்வா. இருப்பினும் ராதிகாவையும், அவரது மகன் கண்ணாவையும் கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார் பிரகாஷ். அப்போதுதான் தானும் தாதாவாக முடியும் என நினைக்கிறார். கண்ணாவையும் போட்டுத் தள்ளுகிறார். நண்பனைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறார் அதர்வா. இது மட்டுமே படத்தில் கதை அல்ல, இன்னும் நிறைய கிளைக் கதைகள் இருக்கிறது.
இயக்குனர் ஸ்ரீகணேஷ் என்ன சொல்ல வந்தார் என்பது அவருக்காவது புரிந்திருக்கும் என்று நினைப்போம். ஒரு மெயின் கதையை வைத்து மட்டும் கதையை நகர்த்தாமல் பல கிளைக் கதைகளை இணைத்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனியாக ஒரு கதையைச் சேர்க்கிறார். கடைசியில் அதர்வாவின் பெற்றோர் சாவுக்கு ராதிகா தான் காரணம் என்ற ஒரு டுவிஸ்ட்டையும் வைக்கிறார். கிளைமாக்சில் கூட ஏதோ ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைப்பதெல்லாம் ரொம்பவே ஓவர். படம் முடிந்து வெளியில் வந்து யோசித்தால் குழம்பிப் போவதுதான் மிச்சம். தெளிவான திரைக்கதை இல்லாததே இப்படத்தின் மிகப் பெரும் மைனஸ் பாயின்ட்.
நான்கைந்து படங்களில் நடித்து வளர்வதற்குள்ளாகவே ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என ஆசைப்படும் நடிகர்களில் அதர்வாவும் ஒருவர் போலிருக்கிறது. அவரது வயதுக்கும் தோற்றத்திற்கும் அழகான காதல் கதைகளில் நடிக்கலாம். கோபக்கார இளைஞன் கதாபாத்திரம் எல்லாம் ஓகே. அதற்குள் அருவா தூக்கி ஐம்பது பேரை சாகடித்து ஆக்ஷன் ஹீரேவாக வேண்டும் என நினைப்பதற்கு நிறைய காலம் உள்ளது.
படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர். நன்றாக வீணடிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கான அழுத்தமான காட்சிகள் எதுவும் இல்லை. பல காட்சிகளில் துணை நடிகை போல கூட்டத்தில் ஒருவராக நிற்பதுடன் அவரது வேலை முடிந்து போகிறது.
ராதிகாவின் மகனாக நடித்திருக்கும் கண்ணா ரவி, ராதாரவியின் மகனாக நடித்திருக்கும் பிரகாஷ் ராகவன், கூலிக்குக் கொலை செய்பவராக வத்சன் இவர்களுக்கும் படத்தில் முக்கிய பங்குண்டு. ஒரு படத்தில் இரண்டாம் நிலை கதாபாத்திரங்களுக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த படமாக இதுதான் இருக்கும்.
பெண் தாதாவாக ராதிகா சரத்குமார், உருட்டல் மிரட்டலில் அனுபவம் பேசுகிறது. சில காட்சிகளில் மட்டுமே வருகிறார் ராதாரவி. மகனுடன் காரில் பேசும் காட்சியில் டபுள் மீனிங் பேசி அதிர்ச்சியடைய வைக்கிறார், ஆனாலும் தியேட்டரே சிரிக்கிறது.
யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடலும், பின்னணி இசையும் பரவாயில்லை ரகம் மட்டுமே. படத்தில் ஸ்டன்ட் மாஸ்டருக்குத்தான் அதிக வேலையே. படத்திற்காக வாங்கிய கத்திகளுக்கு தனி பட்ஜெட்டே போட்டிருப்பார்கள்.
படத்தில் எத்தனை கொலைகள் விழுந்தது என ஒரு போட்டியே வைக்கலாம். 'குருதி ஆட்டம்' எனப் பெயர் வைத்ததற்குப் பதிலாக 'கொலை ஆட்டம்' எனப் பெயர் வைத்திருக்கலாம்.
குருதி ஆட்டம் - குழப்ப ஆட்டம்