புதுமுகங்கள் வெற்றி, அபர்ணா பாலமுரளி ஜோடியுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி, சார்லஸ் வினோத், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் நடிக்க வெற்றிவேல் சரவணா சினிமாஸ் பேனரில் ஸ்ரீ கணேஷின் எழுத்து இயக்கத்தில் முழு நீள க்ரைம், த்ரில்லராக வந்திருக்கும் படம் தான் "8 தோட்டாக்கள்".
புதிதாக வேலைக்கு சேரும் இளம் போலீஸ் எஸ்.ஐயிடம் ஸ்பெஷல் கேஸ் ஒன்றிற்காக 8 குண்டுகள் நிரப்பப்பட்ட கைதுப்பாக்கி ஒன்றை ஸ்டேஷன் இன்ஸ் வழங்குகிறார். அதை தன் கவனக்குறைவால் தொலைக்கும் எஸ்.ஐ படும் பாடும், அந்த துப்பாக்கியில் உள்ள எட்டு தோட்டாக்களின் பயன்பாடும் தான் "8 தோட்டாக்கள்" படத்தின் கரு, கதை, களம்... எல்லாம் இந்தக் கதையோடு துப்பாக்கியை தொலைத்த இளம் எஸ்.ஐ.யின் டி.வி.சேனல் பெண் நிருபருடனான காதலையும் கலந்து கட்டி, காட்சிப்படுத்தி ரசிகனை வசியப்படுத்தி, வசப்படுத்திடமுயற்சித்திருக்கின்றனர் படக் குழுவினர்.
துப்பாக்கியை தொலைத்த எஸ்.ஐ. சத்யாவாக, கதையின் நாயகராக புதுமுகம் வெற்றி, பெரிதாக நடிக்கவில்லை இயக்குனர் சொன்னதை அழகாக, யதார்த்தமாக செய்ய முற்பட்டிருக்கிறார். அது ரசிகனின் பொறுமையை சோதித்தாலும் அவரது கேரக்டருக்கு பலமே சேர்த்திருக்கிறது.
தன் வேலைக்கு பங்கம் என்றதும் காதலன் வெற்றி தூப்பாக்கி தொலைத்த கதையையே நியூசாக போட்டுத் தாக்கி வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் தனியார் டி.வி.சேனல் பெண் நிருபராக கதையின் நாயகி மீரா வாசுதேவனாக அபர்ணா பாலமுரளி அபாரம்னா.
துப்பாக்கி கொலைந்த கதையை கண்டுபிடிக்க களம் இறங்கும் ஸ்பெஷல் டீம் போலீஸ் அதிகாரியாக நாசர், எஸ்.ஐயிடம் தொலைந்த துப்பாக்கியை விலைக்கு வாங்கி வங்கி கொள்ளையில் தொடங்கி கூட்டாளிகளை கொலைவரை... செய்யும் சஸ்பென்டட் போலீஸாக, சுழ்நிலைக் கைதியாக எம்.எஸ்.பாஸ்கர், மிகவும் கெட்ட இன்ஸ்பெக்டராக மைம் கோபி, மனைவியையும், கூட்டாளியையும் ஒருசேர ஒரேயடியாக நம்பும் பிளேடு பாண்டியாக சார்லஸ் வினோத், தன்னை கெட்ட வார்த்தையில் ஒருத்தன் திட்டிவிட்டதாக போலீஸ் கம்பளையின்ட் கொடுக்க வந்து கண்டபடி திட்டும் வாங்கும் டைப்ரைட்டர் அப்துல்லாக ஆர்.எஸ்.சிவாஜி, மணியாக தேனி முருகன், ஜெய் - மணிகண்டன், கதிர் - லல்லு, மஹா-மீரா மிதுன் உள்ளிட்டவர்களில் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பால் ஜொலிக்கின்றனர். அதிலும் எம்.எஸ்.பாஸ்கருக்கு ஏதாவது பெரிய விருது நிச்சயம்.
நாகூரானின் படத்தொகுப்பு, நச் - நங்கூர பலே, பலே தொகுப்பு. தினேஷ்பாபுவின் ஒளிப்பதிவில் பெரிய குறையொன்றுமில்லை. சுந்தரமூர்த்தி கே.எஸ்ஸின் "இது போல் இது போல் இனிமேல் வாராதா...", "நீ இல்லை என்றால் என்னிடம் வா அன்பே...", உள்ளிட்ட பாடல்கள் இசையும், பின்னணி இசையும் "8 தோட்டக்கள்" கதைக்கும், களத்திற்கு ஏற்ற மிரட்டல்.
ஸ்ரீ கணேஷின் எழுத்து, இயக்கத்தில், "வாழ்க்கையில், எல்லார்கிட்டேயும் எல்லாத்தையும் சொல்லணும்னு தோணாதுல....", "புது பணக்காரன் பண்ற சேட்டை எல்லாம் பண்ணக் கூடாது...", "மனுஷன் வார்த்தையில் ஈஸியா ரொம்ப நல்லவனா இருப்பான்... காயமும் வலியும் தான் மனுஷன மாத்தும்'', ஆறுதல் தேடியே பாதி வாழ்க்கை போயிடுது... யாரையாவது இவங்க கடைசி வரைக்கும் நம்ம கூட இருப்பாங்கன்னு நம்புவோம்.... ஆனா , அவங்க தான் நம்பளை நட்டாத்துல விட்டுட்டு போயிடுவாங்க..." என்பது உள்ளிட்ட வல்லிய அர்த்தம் பொதிந்த வசனங்கள் ரொம்பவே யோசிக்க வைக்கும் வசீகரம். அதேமாதிரி பெரிய அளவில் லாஜிக் குறைகள் இல்லாத ஸ்ரீ கணேஷின் இயக்கமும் நிச்சயம் சில, ரசிகர்களையாவது கவரும்.
ஆக மொத்தத்தில் "8 தோட்டாக்கள் - குண்டு மழை, வசூல் மழையா? பொறுத்திருந்து பார்க்கலாம்!"