2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஆர்டிசி மீடியா
இயக்கம் - கண்ணன்
இசை - ஜெர்ரி சில்வஸ்டர் வின்சென்ட்
நடிப்பு - ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன்
வெளியான தேதி - 3 பிப்ரவரி 2023
நேரம் - 1 மணி நேரம் 36 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

மலையாளத்தில் வெளிவந்த 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை அப்படியே தமிழுக்கு ரீமேக் செய்துள்ளார்கள். கொரானோ காரணமாக மலையாளத்தில் ஓடிடியில் இப்படத்தை வெளியிட்டார்கள். அவர்களே ஓடிடியில் வெளியிட்ட படத்தை தமிழில் வெறும் 1 மணி நேரம் 36 நிமிடங்கள் மட்டுமே படமாக்கி தியேட்டர்களில் வெளியிட்டிருப்பது ஆச்சரியம்தான். ஓடிடிக்கு உண்டான 'கன்டென்ட்', தியேட்டர்களில் எப்படி வரவேற்பு கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஒரு ரீமேக் படத்தில் இயக்குனருக்கு பெரிய வேலையில்லை. ஒரிஜனல் படத்தைக் கெடுக்காமல் அதே உணர்வுடன் கொடுப்பதே பெரிய விஷயம்தான். தமிழுக்காக சில மாற்றங்களைச் செய்துள்ளார் இயக்குனர் கண்ணன். குறிப்பாக கதாநாயகனின் குடும்பப் பின்னணி. அது தமிழில் ஒட்டவேயில்லை.

ஆசிரியராக இருக்கும் ராகுல் ரவீந்திரன், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. புகுந்த வீட்டிற்கு வந்ததும் மாமியார் அவரது மகள் டெலிவரிக்காக ஊருக்குச் சென்றுவிடுகிறார். இதனால் வீட்டு பொறுப்புகளை ஐஸ்வர்யா பார்க்க ஆரம்பிக்கிறார். கணவருக்கு ஒரு விதமான சமையல், மாமனாருக்கு வேறு விதமான சமையல் என அவரது வாழ்க்கை சமையல் அறைக்குள்ளேயே நகர்கிறது. பெண் என்பவள் வீட்டை மட்டுமே நிர்வகிக்க வேண்டும் என்கிறார்கள் மாமனாரும் கணவரும். ஒரு கட்டத்தில் அது ஐஸ்வர்யாவுக்கு கடும் வெறுப்பைத் தருகிறது. அப்போது அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

மலையாளத்தில் நாயகன், நாயகி ஆகியோரது குடும்பங்களை ஒரு சராசரி நடுத்தரக் குடும்பமாகவே காட்டியிருப்பார்கள். ஆனால், தமிழில் இருவரது குடும்பத்தையும் பணக்காரக் குடும்பமாகக் காட்டியிருக்கிறார்கள். அதே போலத்தான் கதாபாத்திரங்களும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்வு மட்டும்தான் பொருத்தமாக இருக்கிறது. மற்றபடி ராகுல் ரவீந்திரன் உள்ளிட்ட மற்றவர்களின் தேர்வு பொருத்தமாக அமையவில்லை. ஒரே ஒரு காட்சியில் எதற்காக யோகி பாபு வந்து போகிறார் என்றே தெரியவில்லை.

மலையாளத்தில் இருந்த அந்த உணர்வு, தமிழில் கொஞ்சம் கூட வரவில்லை. அதில் கதாநாயகனாக நடித்த சூரஜ் வெஞ்சாரமூடு மீது கடும் வெறுப்பும், கதாநாயகியாக நடித்த நிமிஷா சஜயன் மீது ஒரு பரிதாபமும் வரும். இதில் அனைத்துமே மிஸ்ஸிங். இம்மாதிரியான கதையெல்லாம் டிப்பிக்கல் மலையாள சினிமாக்களுக்கு மட்டுமே பொருந்தும்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் - கிச்சன் மட்டுமே…

 

தி கிரேட் இந்தியன் கிச்சன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தி கிரேட் இந்தியன் கிச்சன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓