பிஸ்கோத்,Biscoth

பிஸ்கோத் - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சந்தானம், தாரா அலிஷா, ஸ்வாதி முப்பலா
தயாரிப்பு - மசாலா பிக்ஸ்
இயக்கம் - ஆர்.கண்ணன்
இசை - ரதன்
வெளியான தேதி - 14 நவம்பர் 2020
நேரம் - 1 மணி நேரம் 46 நிமிடங்கள்
ரேட்டிங் - 2/5

2020ல் இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் என பலவும் பெரும் வளர்ச்சியைக் கண்டு நிற்கிறது. இப்படிப்பட்ட காலத்தில் சினிமாவில் ஏதோ ஒரு காட்சி காப்பியடிக்கப்பட்டு எடுத்தால் கூட அது எந்த உலக மொழிப் படத்திலிருந்து வந்தது என ரசிகர்கள் உடனடியாக சொல்லிவிடுகிறார்கள்.

இந்த மாதிரியான உலக மாற்றத்தில் இன்னமும் ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்தோ தழுவியோ முழு படத்தையும் எடுத்தால் என்னவென்று சொல்வது ?.

2008ல் ஹாலிவுட்டில் வெளிவந்த பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற படத்தை சிலபல மாற்றங்களுடன் தமிழ் சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றி கொஞ்சம் ஸ்பூப் சமாச்சாரங்களையும் சேர்த்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார் இயக்குனர் கண்ணன்.

சந்தானத்தின் அப்பா ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். சிறிய பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்கள். கடினமாக உழைத்து பேக்கரியை முன்னேற்றி வரும் சமயத்தில் நரேன் இறந்துவிடுகிறார். பெரிய பிஸ்கட் கம்பெனியாக வளர்ந்து நிற்கும் கம்பெனியை சந்தானத்திடம் இருந்து உருவிவிடுகிறார் ஆனந்தராஜ். கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறார் சந்தானம். சிறு வயதிலிருந்தே முதியோர் இல்லத்திற்கு உதவி செய்ய அடிக்கடி போவார் சந்தானம். அந்த இல்லத்தில் வந்து தங்கும் வயதான பாட்டி சௌகார் ஜானகி அடிக்கடி கதை சொல்லும் பழக்கம் உடையவர். அவர் சொல்லும் கதைகள் சந்தானம் வாழ்வில் நிஜமாக நடக்கிறது. இதனிடையே, கம்பெனியின் அடுத்த ஜி.எம் ஆக யார் வர வேண்டும் என ஒரு டாஸ்க் வைக்கிறார் ஆனந்தராஜ். அந்த டாஸ்க்கை சரியாகச் செய்து சந்தானம் ஜி.எம் ஆகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சந்தானத்தின் ஒரு வார்த்தை கவுன்ட்டர்களை நம்பி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். அவரும் ராஜேந்திரன், மனோகர் என இரண்டு அஸிஸ்டன்ட்களை வைத்துக் கொண்டு அவர்களையும் கலாய்த்து, அவரிடம் பேச வருபவர்களையும் கலாய்த்து வழக்கமாக என்ன செய்வாரோ அதையே செய்திருக்கிறார்.

சௌகார் ஜானகி சொல்லும் கதைகளை ஸ்பூப் வகையில் மாற்றி பாகுபலி, 80களின் படங்கள், 300 (ஹாலிவுட் படம்) ஆகியவற்றைக் கொஞ்சம் கிண்டலடித்து நகர்த்துகிறார்கள். அந்த ஸ்பூப் வகைக் காட்சிகளில் சிரிப்பே வரவில்லை. பாகுபலி, 80களின் ஹீரோ, ரோமாபுரி தளபதி என சந்தானத்தைப் பார்ப்பதே ஒரு காமெடிதான். தனக்கு எது பொருத்தமோ அப்படியான கதாபாத்திரங்களில் தொடர்வதுதான் நாயகனாகவும் வெற்றி பெற முடியும் என்பதை சந்தானம் உணர வேண்டும்.

படத்தில் இரண்டு கதாநாயகிகள் தாரா அலிஷா, ஸ்வாதி முப்பலா. ஒருவர் பிரண்டாம் மற்றொருவர்தான் காதலியாம். கன்னத்தில் முத்தம் கொடுத்தால் பிரண்ட், உதட்டில் முத்தம் கொடுத்தால் பாய் பிரன்ட் என புது விளக்கம் கொடுக்கிறார் ஸ்வாதி. இரண்டு ஹீரோயின்களுக்குமே படத்தில் அதிக வேலையில்லை.

சந்தானத்தின் அசிஸ்டென்ட்டுகளாக ராஜேந்திரன், மனோகர். சந்தானத்தின் ஒரு வரி கமெண்ட்டுகளுக்குத் துணை நிற்கிறார்கள். நண்பனையே ஏமாற்றி கம்பெனியின் ஓனரான ஆனந்தராஜ், பெயருக்குத்தான் வில்லன், ஆனால் வில்லத்தனம் எதுவும் செய்யவில்லை. இத்தனை வயதிலும் தமிழை அழகாக உச்சரித்து தெளிவாக கதை சொல்கிறார் சௌகார் ஜானகி.

படத்தில் பாராட்டுக்குரிய விஷயமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு, ஒரே ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு காட்சியில் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பற்றிப் பேசி, அந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருட்களை வைத்து பிஸ்கோத் தயாரிக்கலாம் என ஐடியா கொடுக்கிறார் சந்தானம்.

மற்றபடி இரண்டு மணி நேரப் படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊசிப்பட்டாசு போல அவ்வப்போது மட்டுமே காமெடி வசனம் மூலம் சிரிக்க வைக்கிறார் சந்தானம். நகைச்சுவை நடிகராக அவ்வளவு சிரிக்க வைத்த சந்தானம் நாயகனாக பின் அதில் பாதியைக் கூடச் செய்ய முடியாமல் தடுமாறுவது ஏனோ?. இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றில் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.

பிஸ்கோத் - ஓல்டு ஸ்டாக்

 

பிஸ்கோத் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பிஸ்கோத்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓