பகாசூரன்,Bakasuran
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன்
இயக்கம் - மோகன்ஜி
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - செல்வராகவன், நட்ராஜ்
வெளியான தேதி - 17 பிப்ரவரி 2023
நேரம் - 2 மணி நேரம் 36 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5


தமிழ் சினிமாவில் எத்தனையோ பழி வாங்கும் கதைகள் வந்திருக்கிறது. இதுவும் ஒரு பழி வாங்கும் கதைதான். ஒரு சாதாரண கிராமத்து பாசமான அப்பாவின் பழி வாங்கும் படலம்தான் இந்த 'பகாசூரன்'.

கடலூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து சேலத்திற்கு வந்து கோயிலில் சேவகம் செய்து ஒரு பரதேசி போல வாழ்ந்து வருபவர் செல்வராகவன். அவர் அடுத்தடுத்து மூன்று கொலைகளை செய்கிறார். ஒரு அப்பாவி மனிதர் எதற்காக அந்தக் கொலைகளைச் செய்கிறார் என்பது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் தன் அண்ணன் மகளின் தற்கொலைக்குக் காரணமான பின்னணியைக் கண்டுபிடிக்க முயல்கிறார் முன்னாள் ராணுவ மேஜரான நடராஜ். செல்வராகவன் ஏன் சிலரைக் கொலைச் செய்கிறார், நடராஜ் அண்ணன் மகளின் தற்கொலைப் பின்னணியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இதற்கு முன்பு தான் இயக்கிய 'திரௌபதி, ருத்ரதாண்டவம்' ஆகிய இரண்டு படங்களிலும் சாதிய பிரச்னையை மையக்கருவாக வைத்திருந்த இயக்குனர் மோகன்ஜி, இந்தப் படத்தில் அப்படி எந்த சாதி பிரச்னையையும் கையாளவில்லை. ஆனால், கல்வி நிலையங்களில் நடக்கும் பாலியல் கொடுமை, இளம் பெண்களுக்கு மொபைல் போன்கள் மூலமாக நடக்கும் பாலியல் தொல்லை ஆகியவற்றை மையப்படுத்தி இருக்கிறார். கடைசியில் 'மொபைல்' போன்கள்தான் 'பகாசூரன்' என முடிக்கிறார்.

ஒரு அப்பாவி கிராமத்து அப்பா கதாபாத்திரத்திற்கு செல்வராகவன் பொருத்தமாகவே இருக்கிறார். சில காட்சிகளில் எமோஷனலாகவும், சில காட்சிகளில் என்ன செய்வது என்று தவித்தும் இருக்கிறார். ஆனால், அவர் செய்யும் கொலைகளை காவல் துறை கூட கண்டும் காணாமல் இருப்பது நம்பும்படியாக இல்லை.

முன்னாள் மேஜர் நடராஜ், நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய குற்றங்களைப் பற்றிய க்ரைம் வீடியோக்களைப் பதிவிடும் இந்நாள் யுடியூபராக நடத்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் மூலம் அப்பாவி பெண்கள் எப்படி பாலியல் வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதை ஒரு பாடமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். பெற்றோர்கள் அவர்களது மகன்கள், மகள்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்பது பலருக்குமான ஒரு எச்சரிக்கை மணி.

செல்வராகவனின் அப்பாவாக தயாரிப்பாளர் கே.ராஜன், கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஆக ராதாரவி, செல்வராகவனின் மகளாக ரிச்சா, புரோக்கராக கூல் ஜெயந்த், ஹாஸ்டல் வார்டனாக சசி லயா ஆகியோர் குறிப்பிட வேண்டிய மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.


சாம் சிஎஸ் பின்னணி இசை சில காட்சிகளுக்கு பலத்தைக் கொடுக்கிறது. 'சிவ சிவாயம்' பாடல் தெய்வீகமாய் ஒலிக்கிறது. முந்தைய இரண்டு படங்களிலும் மேக்கிங்கை சிறப்பாகச் செய்திருந்தார் மோகன் ஜி. இந்தப் படத்தில் அந்தப் படங்களின் தரத்திலிருந்து கீழிறங்கி இருக்கிறார்.


படம் மிக மிக மெதுவாக நகர்கிறது. இடைவேளைக்குப் பின் செல்வராகவன், அவரது மகள் ரிச்சா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளை சுருக்கமாக முடித்திருக்கலாம். மூன்று கொலைகள், ஒரு அப்பாவி பெண்ணின் தற்கொலை என பரபரப்பான த்ரில்லருக்குரிய விஷயம் படத்தில் இருக்கிறது. ஆனால், திரைக்கதையில் அதற்குரிய விறுவிறுப்பை ஏற்படுத்தவில்லை.

அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாவற்றிலுமே நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. அவற்றை நல்ல முறையில் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது. ஆனால், 'மொபைல்' போன்கள் எல்லாம் நமது வாழ்க்கையை அழிக்க வந்த 'பகாசூரன்' என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

பகாசூரன் - பாதிசூரன்

 

பகாசூரன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பகாசூரன்

  • நடிகர்
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓