ருத்ர தாண்டவம்,Rudra Thandavam

ருத்ர தாண்டவம் - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன், 7 ஜி பிலிம்ஸ்
இயக்கம் - மோகன் ஜி
இசை - ஜுபின்
நடிப்பு - ரிச்சர்ட், தர்ஷா குப்தா, கௌதம் மேனன்
வெளியான தேதி - 1 அக்டோபர் 2021
நேரம் - 2 மணி நேரம் 49 நிமிடம்
ரேட்டிங் - 3/5

திரௌபதி படம் மூலம் கவனத்தை ஈர்த்த மோகன் ஜி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அடுத்த படம். இந்தப் படத்திற்கும் வெளியீட்டிற்கு முன்பே ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். ஆனால், படத்தில் பரபரப்பான, சர்ச்சையான விஷயங்கள் எதுவுமில்லை. அதே சமயம் நாட்டில் நடக்கும் மதமாற்றம், சாதிய பிரச்சினை ஆகியவற்றை வைத்து நடக்கும் சில அத்துமீறல்களைப் பற்றி துணிச்சலாகக் கொடுத்திருக்கிறார். அவை நியாயமான கருத்துக்களாகவே படத்தில் இடம் பெற்றுள்ளன.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நேர்மையான இன்ஸ்பெக்டரான ரிச்சர்ட், சென்னை துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்படுகிறார். போதைப் பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்காக அவரை அந்த வேலையில் நியமிக்கிறார் மேலதிகாரி. 200 கோடி ரூபாய் போதைப் பொருளைத் தடுக்கும் ரிச்சர்ட் அடுத்ததாக கஞ்சா கடத்தியதாக இரண்டு இளைஞர்களைப் பிடிக்கிறார். ஸ்கூட்டரில் தப்பிச் செல்லும் அவர்களைப் பிடிக்கும் போது விபத்தில் சிக்கி அந்த இரண்டு இளைஞர்களுக்கும் காயம் ஏற்படுகிறது. அதில் ஒரு இளைஞர் மரணமடைந்துவிடுகிறார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த அந்த இளைஞரை வேண்டுமென்றே விரட்டிப் பிடித்து அவரது சாவுக்கு ரிச்சர்ட் காரணமாகிவிட்டதாக சர்ச்சை எழுகிறது. அந்த இளைஞரின் குடும்பத்தினர் நடத்திய போராட்டம் காரணமாக வேலையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படும் ரிச்சர்ட் கைது செய்யப்படுகிறார். பின்னர் பெயிலில் வரும் ரிச்சர்ட் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

போதைப் பொருள் கடத்தல், போலி அரசியல்வாதிகளின் சுயரூபம், இந்துக்களாக இருப்பவர்களை மதம் மாற்றுதல், மதம் மாறினாலும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி சர்ச்சையை ஏற்படுத்துதல் என போலி மனிதர்களை, ஏமாற்றுக்காரர்களை, வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.

அம்பேத்கார் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் சொந்தமல்ல, நாட்டுக்காக சட்டத்தை இயற்றிய அவர் அனைத்து மக்களுக்கும் சொந்தமானவர்தான். அவரது பெயரைச் சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளையும் நேரடியாகவே தாக்குகிறார் இயக்குனர்.

நேர்மையான இன்ஸ்பெக்டராக ரிச்சர்ட். கஞ்சா விற்ற இளைஞர்களின் வாழ்க்கை பாழகிவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவர்கள் மீது சாதாரண வழக்கைப் பதிவு செய்து, அதற்கான அபராதக் கட்டணத்தையும் அவரே செலுத்தி, அந்த இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பும் அளவிற்கு நல்லவர். அந்த நல்ல எண்ணமே அவருக்கு எதிராக வர, வேலையை இழந்து, கர்ப்பமான மனைவியைப் பிரிந்து சிறைக்குச் செல்ல நேரிடுகிறது. இடைவேளை வேரை அதிரடி ஆக்ஷனிலும், அதன்பின் எமோஷனல் ஆக்ஷனிலும் நிறைவாக நடித்திருக்கிறார் ரிச்சர்ட்.

ரிச்சர்ட்டின் கர்ப்பமான மனைவியாக தர்ஷா குப்தா. கணவன் மீது மாமா, மாமா என்று சொல்லி அதிக அன்பைச் செலுத்துபவர். தனது கணவன் தன் பேச்சைக் கேட்கவில்லை என்றதும் அவரைப் பிரிந்து வாழ்ந்து தன் கோபத்தைக் காட்டும் கதாபாத்திரம்.

படத்தின் மெயின் வில்லனாக கவுதம் மேனன். சாதி, மதம், ஈழம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி போதைப் பொருளைக் கடத்தும் ஒரு அரசியல் கட்சித் தலைவர். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் கவுதமைப் பார்ப்பது ஆச்சரியம்தான். முடிந்த அளவிற்கு தனது வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார்.

ரிச்சர்ட் ஸ்டேஷனில் ஏட்டாக இருக்கும் ஜோசப் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா. இவரும் ஏறக்குறைய படம் முழுவதும் வருகிறார். வக்கீலாக நடித்திருக்கும் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், நீதிபதியாக நடித்திருக்கும் மாளவிகா அவினாஸ், ரேஞ்சர் ரவியாக நடித்திருக்கும் ராம்ஸ், போதைப் பொருளால் மரணமடையும் இளைஞராக காக்கா முட்டை விக்னேஷ், அவரது அம்மாவாக தீபா, போலீஸ் அதிகாரியாக ஜேஎஸ்கே கோபி என படத்தில் பல நட்சத்திரங்கள். ஒவ்வொருவருக்கும் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம். அனைவருமே நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

ஜுபின் இசையில் இரண்டே பாடல்கள்தான். பின்னணி இசையைக் கொஞ்சம் ஓவராகவே வாசித்திருக்கிறார். கிளைமாக்ஸுக்கு முன்பாகவும், கிளைமாக்சிலும் வசனங்கள் காதில் விழாத அளவிற்கு பின்னணி இசை அமைந்துள்ளது. சண்டைக் காட்சிகளில் மிரட்டல் காட்டியிருக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர். வட சென்னை பகுதியை அப்படியே யதார்த்தமாய் தனது காமிராவில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பரூக் பாஷா.

படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம். படம் நகர்வது தெரியவில்லை என்றாலும் அடிக்கடி யாராவது வசனம் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். வசனமில்லாத காட்சிகளே இல்லை என்று சொல்லலாம்.

போதைப் பொருளின் பாதிப்புகள், அது இளம் தலைமுறையினரை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்ற மையக் கருத்துடன் இன்றைய போலியான சில சாதிப் பிரச்சினைகளை சொல்லிய விதத்தால் மக்களுக்குத் தேவையான படமாக இப்படம் அமைந்திருக்கிறது.

ருத்ர தாண்டவம் - தீய சக்திகளுக்கெதிரான தேவையான தாண்டவம்.

 

ருத்ர தாண்டவம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ருத்ர தாண்டவம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓