கிக்
விமர்சனம்
தயாரிப்பு - போர்ச்சூன் பிலிம்ஸ்
இயக்கம் - பிரஷாந்த் ராஜ்
இசை - அர்ஜுன் ஜன்யா
நடிப்பு - சந்தானம், தன்யா ஹோப், ராகினி திவேதி
வெளியான தேதி - 1 செப்டம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 5 நிமிடம்
ரேட்டிங் - 0.5/5
சில படங்களை எதற்காக இத்தனை கோடி செலவு செய்து எடுக்கிறார்கள் என்று தோன்றும். அப்படி எண்ண வைத்த படம் தான் இது. இதையெல்லாம் ஒரு கதையா என தயாரிப்பாளர் எப்படி தேர்வு செய்தார், படத்தின் நாயகன் எப்படி தேர்வு செய்தார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
படம் ஆரம்பித்ததிலிருந்து கிளைமாக்ஸ் வரை இரண்டு மணி நேரமும் இடைவிடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்… சாரி… சத்தமாகக் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். இயக்குனர் பிரஷாந்த் ராஜ் இதற்கு முன்பு சில கன்னடப் படங்களை இயக்கியிருக்கிறாராம். அந்தப் படங்களும் இப்படித்தான் இருந்திருக்குமோ ?.
சந்தானம் ஒரு விளம்பர ஏஜன்சியின் இயக்குனர். பிரபல கம்பெனி ஒன்றின் விளம்பர கான்டிராக்டைப் பெற ஒரு மாடலிங் பெண்ணான ராகினி திவேதியை வைத்து குறுக்கு வழியில் பெறுகிறார். அதுபற்றி தெரிந்த ராகினி, சண்டைக்கு வர, அவரைத் திருப்திப்படுத்த பொய்யாக 'பிளாக்பஸ்டர்' என்ற பிராண்ட் ஒன்றிற்கு விளம்பரப் படம் எடுத்து சமாளிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த 'பிளாக்பஸ்டர்' அவருக்கே பிரச்சினையாக வர, அந்தப் பெயரில் ஒரு 'எனர்ஜி மருந்தை' வெளியிட முடிவெடுக்கிறார். அதற்காகத் தாய்லந்து செல்கிறார். அங்கு ஆராய்ச்சியாளர் பிரம்மானந்தத்தை சந்தித்து அந்த 'எனர்ஜி மருந்தை' தயாரிக்கச் சொல்லி கேட்கிறார். அதில் சில சிக்கல்கள் இருக்கிறது. அதையெல்லாம் மீறி அந்த 'எனர்ஜி மருந்தை' உருவாக்கி பிரச்சினையிலிருந்து சந்தானம் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
காமெடிப் படம் என்று அவர்களாகச் சொன்னால்தான் உண்டு. எந்த ஒரு இடத்திலும் மருந்திற்குக் கூட காமெடிக் காட்சி என நினைத்து எதற்குமே சிரிக்க முடியவில்லை.
கதையைத் தேர்வு செய்யும் ஞானம் சந்தானத்திற்கு இவ்வளவுதான் இருக்கிறதா என்பது ஆச்சரியமே. அவராவது ஏதோ ஒரு காட்சியிலாவது சிரிக்க வைப்பார் என்று எதிர்பார்த்தால் பழைய தேய்ந்து போன 'ரெக்கார்ட்' போல சில வசனங்களைப் பேசி நோக வைக்கிறார்.
தம்பி ராமையாவை இதைவிட கோமாளி ஆகக் காட்டியிருக்க முடியாது. கோவை சரளா அவர் பங்கிற்கு கத்தி, கூப்பாடு போடுகிறார். சந்தானத்திற்கு ஜோடியாக தன்யா ஹோப். படத்தில் கதாநாயகி ஒருவர் வேண்டுமென சேர்த்திருக்கிறார்கள். ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார் ராகினி திவேதி.
பாடல்கள், பின்னணி இசை என இதர விஷயங்கள் எல்லாம் இந்தப் படத்தை மேலும் மோசமாகத்தான் ஆக்கியிருக்கின்றன.
கதாநாயகனாக தொடர்ந்து வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பது சந்தானத்திற்கு ஏற்கெனவே புரிந்திருக்கும். தொடர்ந்து சறுக்கினால் அவருக்கு நல்லதல்ல, அவ்வளவுதான் சொல்ல முடியும்.
கிக் - ரசிகர்களிடமிருந்து….
கிக் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கிக்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்