நடிகர்கள் : மோகன்லால், அர்பாஸ்கான், சித்திக், அனூப் மேனன், ஹனிரோஸ், அதிதி மேனன்(மிர்ணா), ஜான்விஜய், ஷர்ஜனோ காலித், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் மற்றும் பலர்
டைரக்சன் : சித்திக்
ரேட்டிங் : 2.5/5
தமிழில் பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் ஆகிய படங்களை இயக்கிய சித்திக் டைரக்சனில் உருவாகியுள்ள படம் இது. ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து சித்திக் இயக்கியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு கட்டியதா..?
சிறுவயதில் குடும்பத்தை காப்பாற்ற செய்த குற்றத்திற்காக சிறுவர் ஜெயிலில் அடைக்கப்படும் மோகன்லால், அங்கே சிறை அதிகாரி ஒருவரை கொன்றதற்காக மேலும் 24 வருடங்கள் சிறையிலேயே காலத்தை கழித்து விட்டு வெளியே வருகிறார். அவரது தம்பிகளு,ம் தந்தையும் அவரை உள்ளன்போடு வரவேற்று உபசரிக்கிறார்கள். இந்த நிலையில் திடீரென அவரது இரண்டாவது தம்பி கடத்தப்படுகிறார்.. அவரது காதலி தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.. தனது தம்பியை கடத்தியது மிகப் பெரிய கோடீஸ்வரரான சித்திக் என்பது பெங்களூரில் உள்ள தனது நண்பர்கள் மூலமாக தெரியவர, பதிலுக்கு அவரது மகள் அதிதி மேனனை கடத்தி தம்பியை மீட்கிறார் மோகன்லால்.
இன்னொரு பக்கம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியான அர்பாஸ் கான், மோகன்லாலிடம் போதைப்பொருளை கண்டுபிடித்து, அதை தடுக்கும் முயற்சியில் உதவி கேட்கிறார். ஆனால் மோகன்லால் மறுத்துவிடுகிறார்.. அதைத்தொடர்ந்து மோகன்லால் குடும்பத்திற்கும் அவரது தம்பியை கடத்திய சித்திக்கிற்கும் கூட அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதற்கெல்லாம் காரணகர்த்தா யார் என ஆராயும் மோகன்லாலுக்கு அதிர்ச்சியான சில உண்மைகள் தெரிய வருகின்றன.. அவை என்ன..? மோகன்லாலின் குடும்பத்திற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தியவர்கள் யார்..? ஒரு சிறைக் கைதியான மோகன்லாலை போதைப்பொருள் தடுப்பதற்காக போலீஸ் அதிகாரியே உதவிக்கு அழைப்பது ஏன் என பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது கிளைமாக்ஸ்.
மோகன்லாலை பொறுத்தவரை இந்தப்படத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கும் ஒரு நபராக காட்சியளிக்கிறார். குறிப்பாக அவருக்கு இருட்டிலும் பார்க்க முடியும் என்கிற விஷயமும், அதை போலீஸ் அதிகாரிகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்கிற விஷயமும் கொஞ்சம் புதுசுதான். ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம்போல பின்னி பெடலெடுக்கும் மோகன்லால், படத்தில் பேசும் வசனங்களை நான்கு பக்கங்களுக்குள் முடித்து விடலாம். பல வருடங்களாக சிறையில் இருந்து வெளியே வருபவர்கள் எப்படி மற்றவர்களுடன் ஒன்ற முடியாமல் தவிக்கிறார்கள் என்பதை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் மோகன்லால்.
போலீஸ் அதிகாரியான இந்தி நடிகர் அர்பாஸ்கான் (சல்மான் கானின் தம்பி) நல்லவரா, கெட்டவரா என கடைசி வரை நம்மை சஸ்பென்ஸிலேயே தவிக்க விடுகிறார். மிகைப்படுத்தப்படாத அவரது நடிப்பு இந்த படத்திற்கு பிளஸ்.
சீனியர் கதாநாயகியான ஹனிரோஸ் மோகன்லாலின் தம்பி மனைவியாக வி.ஆர்.எஸ் கொடுத்து ஒதுக்கப்பட, தமிழில் பட்டதாரி படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதி மேனனுக்கு மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்கவும், அவருடன் டூயட் பாடவும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஓரளவு அதை பயன்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.
மோகன்லாலின் கூட்டாளிகளாக கூடவே வரும் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், டினி டாம், இர்ஷாத் உள்ளிட்ட மூவரும் அட்மாஸ்பியரை நிரப்புவதற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.. மோகன்லாலின் மூத்த தம்பியாக வரும் அனூப் மேனனை விட இளைய தம்பியாக வரும் ஷர்ஜனோ காலித்துக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். வழக்கம்போல குணச்சித்திர நடிகர் சித்திக்கும் சமையலுக்கு பயன்படும் கறிவேப்பிலை போல தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். சில காட்சிகளில் வெறும் அடியாளாகவே வந்து வீணடிக்கப்பட்டு இருக்கிறார் நடிகர் ஜான் விஜய்.
இயக்குனர் சித்திக்கின் படங்கள் எப்போதுமே குடும்ப, சென்டிமென்ட்டை மையப்படுத்திய ஆக்ஷன் படங்களாகவே இருக்கும். இந்தப் படமும் அதில் விதிவிலக்கல்ல.. ஆனால் கதைதான் பலவீனமாக இருக்கிறது. படம் முழுவதும் மோகன்லாலை கிட்டத்தட்ட அமைதியான மனிதராகவே உபயோகப்படுத்தி இருப்பது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். வழக்கமாக இயக்குனர் சித்திக்கின் படங்களில் இருக்கும் எமோசனல் இந்த படத்தில் அப்படியே மிஸ்ஸிங் ஆகியிருக்கிறது. மொத்த படத்தையும் பார்க்கும்போது இது சித்திக்கின் படம் தானா என்கிற சந்தேகத்தையே எழுப்புகிறது.
தன் தம்பியை மீட்பதற்காக எதிரியின் மகளை கடத்தும் மோகன்லால் உடனே அதிரடியாக தம்பியை மீட்காமல் எதிரியின் மகளுடன் சுற்றுப்பயணம் போவதாக வரும் காட்சிகளும், அதன்பின் தொடரும் ஒரு டூயட் எல்லாம் அபத்தத்தின் உச்சம். சித்திக் இன்னும் கொஞ்சம் அப்டேட் ஆக யோசித்திருக்கலாம்.. கமாண்டோ ஆபரேஷனுக்கு சிறைக் கைதியை பயன்படுத்துவார்கள் என்கிற ஒரு புது விஷயமும், அதன் பின்னணியில் ஒரு மோகன்லாலின் பிளாஸ்பேக்கும் சற்று சுவாரஸ்யம் கூட்டுகிறது. ஆரம்ப கட்டத்தில் மோகன்லால், தன் வீட்டில் உள்ளவர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவது எதனால் என்பது இயக்குனர் சித்திக்கிற்கே வெளிச்சம். சித்திக் - மோகன்லால் கூட்டணி என்பதால் மிகப்பெரிய விருந்தை எதிர்பார்த்து ஆர்வத்துடன் வரும் ரசிகர்களுக்கு ஆறிப்போன பழங்கஞ்சியை வெள்ளித்தட்டில் பரிமாறி இருக்கிறார் இயக்குனர் சித்திக்.
மொத்தத்தில் இந்த பிக்பிரதர் - ஒரு சவலைப்பிள்ளை