Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஐந்தாம் படை

ஐந்தாம் படை,
  • ஐந்தாம் படை
  • சுந்தர் சி
  • அதிதி சவுத்ரி
  • இயக்குனர்: பத்ரி
17 ஆக, 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஐந்தாம் படை


தினமலர் விமர்சனம்


ஒரே ஊரில் வாழும் இரண்டு பெரிய குடும்பங்கள் இடையேயான பகையும், பந்தாவும், அலும்பும், அடிதடியும்தான் ஐந்தாம் படை!

பாசக்கார அண்ணன்கள் நாசர், முகேஷ் இருவரது கோபக்கார முரட்டு தம்பிதான் சுந்தர்.சி. அண்ணன்களுக்கு ஒன்றென்றால் எதிராளியை துடிதுடிக்க வைக்கும் தம்பியும், தம்பிக்கு ஒன்றென்றால் துடிதுடித்துப் போகும் அண்ணன்களும், அவர்களுடன் விவேக்கும் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் வில்லன் தொட்டண்ணா, அவரது வாரிசுகம் சம்பத், ராஜ்கபூர், ஆர்யன், விச்சு உள்ளிட்ட அடாவடி கோஷ்டி! இந்த இரு கோஷ்டிகளிடையே ஏற்படும் முட்டலும், மோதல்களும்தான் ஐந்தாம்படை படம்! இதனூடே புதுமுகம் அதிதியுடனான சுந்தர்.சி.,யின் காதல், சிம்ரனுடனான பகையும், பந்தமும், தே‌வயானியுடனான பாமும் - ப்ளாஷ்பேக்கும் என இன்னும் பல விஷயங்களை கலந்து கட்டி கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பத்ரி!

சுந்தர்.சி., லவ், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என படம் முழுக்க பரவி இருந்து பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். புதுமுகம் அதிதி... சிம்ரன், தேவயானி உள்ளிட்டவர்கள் முன் காணாமலேயே போய் விடுகிறார். பாவம்! விவேக் வழக்கம்போலவே பாதி காமெடி... மீதி கடி! ஆர்த்தியும் அவருடன் சேர்ந்து கொண்டு அதையே செய்கிறார்.

டி.சங்கரின் ஒளிப்பதிவு, இமானின் இசை, தளபதி தினேஷின் சண்டை பயிற்சி உள்ளிட்டவைகள் பத்ரியி்ன் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. பழைய கதை மட்டுமே பலவீனம்!

ஐந்தாம்படை : சற்றே பழைய வாடை!!

--------------------

குமுதம் விமர்சனம்


சென்டிமென்ட், லாஜிக், சஸ்பென்ஸ் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிரிப்பையே மூலதனமாக கொண்டு வந்திருக்கும் மற்றொரு சுந்தர்.சி. படம் ஒற்றுமையாய் வாழும் ஐந்து சகோதர்களை கொண்ட குடும்பத்தில் வில்லியாக வரும் மருமகளால் அடுத்தடுத்து பிரச்னை. இந்த சிக்கலில் இருந்து பாசமிக்க குடும்பம் மீள்வதுதான் கதை.

திருமணத்துக்கு பிறகு சிம்ரனின் நடிப்பு திறமைக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு இது. முதல் பாதியில் நாயகனை நினைத்து உருகும் போதாகட்டும், இரண்டாவது பாதியில் வில்லியாக மாறி குடும்பத்தை அழிக்கும் போதாகட்டும், சிம்ரனின் நடிப்பில் அனுபவம் மின்னுகிறது. படத்தில் ஹீரோயினாக அதிதி நடித்திருந்தாலும் முழுப்படத்தையும் ஆக்கிரமிப்பது சிம்ரன்தான்.

சிரிக்க வைப்பதிலும், சண்டை போடுவதிலும் கவனம் செலுத்தும் சுந்தர்.சி. டான்சிலும் அதை காட்டினால் நல்லது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படம் விவேக்குக்கு கை கொடுத்துள்ளது. கோலப்போட்டியில் ரவுசு கட்டுவது, ஆர்த்தியை சைட் அடிப்பது, திருட்டு வீடியோ எடுத்து ராதாரவியை கலாய்ப்பது என்று நிமிடத்துக்கு நிமிடம் கிச்சு கிச்சு மூட்டுகிறார். ஆனால், கையில் இத்தனை சரக்கு இருந்தும் சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்களை பயன்படுத்தியதுதான் கொஞ்சம் நெருடுகிறது. நாசர், முகேஷ், தேவயானி, ராஜ்கபூர், ராதாரவி, மதன்பாப், டெல்லிகுமார், சம்பத் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்களைப் படத்தில் திணித்திருப்பதால் அத்தனை பேருக்கும் சமமான வாய்ப்பை தர இயக்குநர் திணறியிருப்பது தெரிகிறது. இமானின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது.

என்னதான் லாஜிக்கை மதிக்காத படம் என்றாலும் நடுரோட்டில் மொத்த ஊரும் பார்க்க தேவயானியை விரட்டிப் போய், ராஜ்கபூர் கட்டாய கல்யாணம் செய்வதும், பைத்தியமான தேவயானியை வில்லன் குடும்பம் வீட்டுக்குள் சிறை வைப்பதும், மாப்பிள்ளையை பார்க்காமலேயே சிம்ரன் கல்யாணத்துக்கு சம்மதிப்பதும் நம்பும் படியாக இல்லை. இந்த குறைகளை இயக்குனர் நீக்கியிருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.


ஐந்தாம்படை : கிச்சுகிச்சுப்படை, குமுதம் ரேட்டிங் : ஓ.கே.

--------------------

கல்கி விமர்சனம் 


அண்ணன் வார்த்தையை தட்டாத ஐந்து அண்ணன் தம்பிகள் கதை. ஏறக்குறைய நவீன பஞ்ச பாண்டவர்கள். இவர்கள் குடும்பத்துக்குள் வந்து சகுனி போல் பகடை உருட்டுகிறார் சிம்ரன். அர்ஜூனன் போல இருக்கும் சுந்தர்.சி. சும்மா இருப்பாரா? சிம்ரனா? சுந்தர்.சி.யா? நீயா.... நானா... என மீதிக்கதை போகிறது.... போகிறது..... போய்க்கொண்டே இருக்கிறது!

ப்ளஸ்

* மிடுக்கான தோற்றத்திலும், விஸ்வரூப சண்டையிலும், நினைத்ததை சாதிக்கிறார் சுந்தர்.சி.
* அவர் அடிக்கும்போது எதிரிகள் இருபது அடி தூரம் போய் விழுவதை நம்ப முடிகிறது. அப்படீன்னா, சண்டைக்காட்சி ஓகேன்னுதானே அர்த்தம்!
* குடும்ப தலைவன் பாத்திரத்தில் நாசர், கஞ்சி போட்ட சட்டை மாதிரி அநியாயத்துக்கு விறைப்பு. ஆனாலும், சென்ட்டிமென்ட் காட்சிகளில் இறுக்கம் தளர்வது ஆறுதல்.
* காமெடி இருக்கான்னு கேட்கறீங்களா....? விவேக் இருக்கார். நம்பிப் போகலாம்!
* "சிக்'' சிம்ரன் திரையில் தோன்றும்போது அவரது வில்லத்தனத்தால் பக்பக்னு அடிக்குது நெஞ்சு.
* கன்னட தொட்டண்ணா (வில்லன்) படு சூப்பர்ண்ணா...!
* "சோக்கு சுந்தரி...'' பாடலிலும், பின்ணணி இசையிலும் இமானின் இருப்பு தெரிகிறது!

மைனஸ்

* பாடல் காட்சிகளில் டான்ஸ் ஆடணும்னு சுந்தர்.சிக்கு தெரியுமே....(?!!) பிறகு ஏன் உட்கார்றார், நடக்கிறார், படுக்கிறார், உருளுகிறார்...! கொஞ்சமாவது மூவ்மெண்ட் காட்டுங்க அப்பு.
* ஹீரோயின் அதிதி தன் பங்கை வெகு கவர்ச்சியாக செய்திருக்கிறார். இப்ப அதுதானே தமிழ்ப்பட ஹீரோயின்ஸ் வேலை.
* தெரிந்த கதை... அறிந்த க்ளைமாக்ஸ்... டைரக்டருக்கு எப்படி தெரியாம போச்சு? பெண்ணோடு ஆண் மோதி ஜெயிக்கும் அத்தனை லாஜிக்கோடும் படம் வந்திருக்கிறது.
* படம் எப்படி? டோண்ட் ஒர்ரி பி ஹேப்பி.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in