ஆண் தேவதை,Aan Devathai

ஆண் தேவதை - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர்
இயக்கம் - தாமிரா
இசை - ஜிப்ரான்
தயாரிப்பு - சிகரம் சினிமாஸ்
வெளியாகும் தேதி - 12 அக்டோபர் 2018
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் குடும்பத்துக் கதைகள் மிகவும் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில் 'கடைக்குட்டி சிங்கம்' படம் ரசிகர்களைக் கவர்ந்து தியேட்டர்கள் பக்கம் பெண்களையும் அதிகம் வரவழைத்தது. அந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் பெண்களைக் கவரும் எண்ணத்தில் இந்த 'ஆண் தேவதை' என்ற குடும்பப் படம் வெளிவருகிறது.

நடுத்தரக் குடும்பத்துப் பிரச்சினையே கொஞ்சம் வித்தியாசமானது. அவர்களுக்கு மேல்தட்டு மக்களைப் போல வாழ வேண்டும், கீழ்தட்டு மக்களைப் போல இருந்திடக் கூடாது என்று எண்ணுவார்கள். வசதியாக வாழ நினைப்பவர்களுக்கு பணப் பிரச்சினை கழுத்தை நெறிக்கும். அப்படி வசதியாக வாழ நினைக்கும் ஒரு பெண்ணின் கதையும், அதனால் பாதிக்கப்படும் குடும்பமும் தான் இந்த 'ஆண் தேவதை' படத்தின் கதை.

இந்தக் காலத்தில் யாருக்கு 'அட்வைஸ்' சொன்னாலும் பிடிக்காது. அதிலும் குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு 'அட்வைஸ்' என்றாலே கசப்பாகத்தான் இருக்கும். வசதியாக வாழ நினைக்கும் வேலைக்குப் போகும் ஒரு பெண் யாருடைய 'அட்வைஸ்'ஐயும் ஏற்றுக் கொள்ள மாட்டார். இந்தப் படத்தின் நாயகி ரம்யா பாண்டியன் அப்படிப்பட்ட ஒரு பெண்ணாக இருக்கிறார்.

காதல் கணவன் சமுத்திரக்கனி, இரட்டையர்களாகப் பிறந்த ஒரு மகன், ஒரு மகள் என இருப்பவர் ரம்யா பாண்டியன். குழந்தைகளைப் பார்க்க முடியாத பிரச்சினையில் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வீட்டிலேயே 'ஹவுஸ் ஹஸ்பென்ட்' ஆக இருக்கிறார் முத்திரக்கனி. இருப்பினும் ரம்யாவுக்கு வசதியாக வாழ வேண்டும் என்ற ஆசை அடங்கவில்லை. அவருக்கு நிறைய பணம் சேர்க்க வேண்டும், வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும் என்பது ஆசை. வெளிநாட்டிற்கு வேலைக்குப் போக வேண்டும் எனத் துடிக்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினையில், தன் மகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் சமுத்திரக்கனி. பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சமீபகாலப் படங்களில் வசனம் பேச வாயைத் திறந்தாலே 'அட்வைஸ்' மழை பொழியும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சமுத்திரக்கனி. இந்தப் படத்தில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அதை செய்து கொண்டேயிருக்கிறார். தனது குழந்தைகளுக்காக வேலையை விட்டுவிட்டு 'ஹவுஸ் ஹஸ்பென்ட்' ஆக அனைத்து வேலைகளையும் செய்யும் போது அவர் கதாபாத்திரம் மீது மிகப் பெரிய மரியாதையே வந்துவிடுகிறது. இந்த அளவிற்கு மனைவிக்காக விட்டுக்கொடுத்து வாழ்பவர் பின்னர் சண்டை போட்டு பிரிவது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. வேலையை விடாமலே பல கணவன்மார்கள் வீட்டில் ஆண் தேவதைகளாத்தான் இருக்கிறார்கள்.

மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை வாழத் துடிக்கும் பெண்ணாக ரம்யா பாண்டியன். அந்த ஆசையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார். இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட பெண்களை அதிகம் பார்க்க முடியும். வாழ்க்கையில் ஏற்றமாகப் போகும் வரை அனைத்துமே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு முறை சறுக்கல் வந்தால் அதன்பின் சிக்கல்தான் என்பதை இந்தக் கதாபாத்திரம் மூலம் அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் இருவரும் சண்டை போட்டுப் பிரிந்ததும் யார் மீதாவது நமக்கு அனுதாபம் வர வேண்டும். ஆனால், அப்படி எதுவும் வரவில்லை. இருவருமே முன்கோபத்தால் பிரிவதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். இவர்களது கதாபாத்திரம் இந்தக் கால தம்பதிகள் பலருக்கு ஒரு பாடமாக இருக்கும்.

கணவனுடன் ஏட்டிக்குப் போட்டியா வாழ நினைக்கும் கதாபாத்திரத்தில் சுஜா வருணி. சமுத்திரக்கனிக்கு அடைக்கலம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் ராதாரவி. சமுத்திரக்கனியின் நண்பராக காளி வெங்கட். இவர்கள் அனைவரும் ஒரு சில காட்சிகளில்தான் வருகிறார்கள். மொத்த படமும் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் ஆகியோரைச் சுற்றியே நகர்வதும் ஒரு குறை.

ஜிப்ரான் இசையில் 'நிகரா தன்னிகரா... பாடல் ரசிக்க வைக்கிறது. அழகான அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள்ளேயே அதிகமான காட்சிகள் நகர்கிறது. கதையை மீறாத இயல்பான ஒளி அமைப்பில் விஜய் மில்டனின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது.

கணவன், மனைவிக்கு இடையேயான வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற படிப்பினையைக் கூறும் படம். அதை இருவரை மட்டுமே முக்கியமா வைத்து சண்டையிட வைத்திருப்பது, ஏதோ பக்கத்து வீட்டு சண்டையைப் பார்ப்பது போல உள்ளது. படத்தில் ராதாரவியின் கதாபாத்திரம் திணிக்கப்பட்டது போல இருக்கிறது. அவரை அறிமுகப்படுத்தும் காட்சியிலும் எதற்கு ஒரு மதப் பிரச்சாரம்?. இவை படத்தை தடம் மாற்ற வைக்கிறது.

ஆண் தேவதை - பெண்ணின் பேராசை!

 

பட குழுவினர்

ஆண் தேவதை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓