3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - அரிசில் மூர்த்தி
இசை - கிரிஷ்
நடிப்பு - மித்துன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் மற்றும் பலர்
வெளியான தேதி - 24 செப்டம்பர் 2021 (ஓடிடி)
நேரம் - 1 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் - 3/5

மக்கள் பிரச்சினைகள், ஊர் பிரச்சினைகள் ஆகியவற்றைச் சொல்லும் சமூகப் படங்கள் அவ்வப்போது தமிழ் சினிமாவில் வருவதுண்டு. இந்தப் படத்தில் ஒரு கிராமத்துக் குடும்பத்தின் பிரச்சினை ஒன்றை மையக் கருவாக வைத்திருக்கிறார்கள். அதைச் சுற்றி மக்கள் பிரச்சினை, ஊர் பிரச்சினை, அரசியல் கிண்டல், அரசியல்வாதிகளின் ஏமாற்றல் என பல விஷயங்களை காட்சிக்குக் காட்சி சேர்த்திருக்கிறார்கள்.

சட்டம் என்பது சாமானியனுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும், ஆனால், அதுவும் நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகுதான் கிடைக்கிறது. இதுவும் படத்தில் சொல்லப்பட்டுள்ள முக்கிய விஷயம்.

அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி அறிமுகப் படத்திலேயே தடம் பதிக்க வேண்டும் என்று முயன்றிருக்கிறார். மசாலாப் படமாகக் கொடுக்காமல் இப்படி மக்களுக்கான படத்தை முதல் படத்திலேயே கொடுத்தற்காக மனமுவந்து பாராட்டலாம்.

தென்தமிழகத்தின் பூச்சேரி என்ற கிராமத்தில் இருக்கும் தம்பதியர் மித்துன் மாணிக்கம், ரம்யா பாண்டியன். அவர்கள் ஆசை, ஆசையாக வளர்க்கும் வெள்ளையன், கருப்பன் (காளைகள் என்று சொன்னால் அவர்களுக்குக் கோபம் வரும்) காணாமல் போய் விடுகின்றன. அதற்காக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்கிறார் மித்துன். ஆனால், அங்கு அவரது புகாரை ஏற்க மறுத்து விரட்டியடிக்கிறார் தலைமைக் காவலர். தனது காளைகளை எங்கெங்கோ தேடி அலைகிறார். அவருடைய பிரச்சினையைப் பற்றி அறியும் செய்தி சேனல் நிருபரான வாணி போஜன் அதை செய்தியாக்கி உலகத்திற்கு வெளிப்படுத்துகிறார். அதற்குப் பிறகும் வெள்ளையனும், கருப்பனும் கிடைத்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கிராமத்து ஏழை விவசாயி குன்னி முத்து கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் மித்துன் மாணிக்கம். தான் ஆசையாக வளர்த்த காளைகள் காணாமல் போனதால் பரிதவிப்பில், எப்போதும் சோகமாகவே இருக்க வேண்டிய கதாபாத்திரம். ஒரே விதமான முக பாவம்தான் படம் முழுவதும் என்பதால் நடிப்பில் அவர் சிரமப்படவேயில்லை. ஓரிரு காட்சிகளில் மட்டும் கோபப்படுகிறார். மனைவி ரம்யாவிற்கு ஆறுதல் சொல்கிறார். அறிமுகப்படத்தில் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார்.

குன்னிமுத்துவின் மனைவி வீராயி கதாபாத்திரத்தில் ரம்யா பாண்டியன். சமூக வலைத்தளங்களில் ரம்யாவின் விதவிதமான கிளாமர் புகைப்படங்களைப் பார்த்து ரசித்தவர்களுக்கு இந்த வீராயி கதாபாத்திரத்தைப் பார்த்ததும் ஆச்சரியம்தான் வரும், அவரா இவர் என. ஏற்கெனவே ஜோக்கர் படத்தில் நடித்த கதாபாத்திரத்தின் சாயல் தெரிந்தாலும், இம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்ததற்காகவே ரம்யாவைப் பாராட்டலாம்.

இடைவேளைக்கு சற்று முன்பு செய்தி சேனல் நிருபராக வருகிறார் வாணி போஜன். பெரிய அளவில் ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் வழக்கமான லோக்கர் ரிப்போர்ட்டர் என்ன செய்வாரோ அதை மட்டும் செய்கிறார். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகள்தான். இதுதான் இரண்டாவது பாதியின் அழுத்தத்தைக் குறைத்துவிடுகிறது. புதிதாக ஏதாவது சொல்லியிருந்தால் படத்தின் தாக்கம் இன்னும் அதிகம் இருந்திருக்கும்.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களின் நாயகனின் நண்பன் மண்திண்ணியாக நடித்திருக்கும் வடிவேல் முருகன் இன்றைய அரசியல் நிலவரங்களைப் பற்றி அடிக்கடி கமெண்ட் அடிக்கிறார். அப்பத்தாவாக நடித்திருக்கும் லட்சுமி கிராமத்துப் பாட்டியாக அசத்தியிருக்கிறார். இவர்கள் இருவரது கதாபாத்திரங்களும் பல கிராமங்களில் இருக்கும் நிஜ கதாபாத்திரங்கள். கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்குத்தான் அப்படியானவர்களைப் பற்றித் தெரியும். அதிலும் டீ குடிக்கும் ஒரு காட்சியில் என்ன டீ கொஞ்சமா இருக்கு என பாட்டி சொல்லும் போது சிரிக்காதவர்களும் சிரித்துவிடுவார்கள்.

படத்தின் ஆரம்பத்திலிருந்து அந்த கிராமத்திற்கு மக்கள் போய் வரும் போதெல்லாம் பக்கத்தில் யாரோ ஒரு பெரியவர் கடப்பாரை, மண் வெட்டி சகிதம் ஒரு பள்ளம் தோண்டிக் கொண்டிருப்பார். இப்படியான மனிதர்கள் கிராமத்திற்கு ஒருவர் இருந்தால் தண்ணீர் பஞ்சத்தைக் கொஞ்சமாவது குறைக்கலாம்.

பின்னணிப் பாடகர் கிரிஷ் இசையமைத்திருக்கிறார். பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பின்னணி இசையில் காட்சிகளின் உணர்வுகளுக்கு கூடுதல் பலத்தைக் கூட்டியிருக்கிறார். பூச்சேரி கிராமத்தின் வறட்சியை யதார்த்தம் மீறாமல், அழகுணர்ச்சி எல்லாம் காட்டாமல் உள்ளது உள்ளபடி, காட்டியிருக்கிறது சுகுமார் ஒளிப்பதிவு.

கிராமத்தில் ஊர் பெரிய மனிதர்கள் என யாருமேயில்லையா, பஞ்சாயத்து தலைவர், எம்எல்ஏ ஏன யாருமேயில்லையா ?, நேரடியாக மந்திரியுடனே மோதுகிறார்கள் என்பது மிகைப்படுத்தலாக உள்ளது. குன்னிமுத்து பிரச்சினையை டிவிக்களில் நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள் என்றதும் சீமான், அய்யாக்கண்ணு மற்றும் சில அரசியல் பிரபலங்கள் ஆதரவு கொடுத்து பேசுகிறார்கள் என்ற காட்சிகள் சுவாரசியத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தாலும், படத்தின் மையக்கருவை விட்டு விலகிச் சென்று விடுகிறது.

காளைகளுக்கு லோன் வாங்கியதற்காக அவற்றின் காதில் அடையாள டோக்கன் பன்ச் செய்ய முயலும் போது காளைகளுக்கு வலிக்கும் என பதறி வாங்கிய லோன் பணத்தை அவர்களிடமே கொடுத்து விட்டு கோபத்துடன் வருகிறார் குன்னிமுத்து. ஆனால், பின்னர் வேறொரு காட்சியில் மாடுகளுக்குத்தான் காயடிச்சிட்டோமே என சர்வ சாதாரணமாகச் சொல்கிறார். காதில் பன்ச் செய்வதை விட காயடிப்பது என்பது அவ்வளவு வலியில்லாத ஒன்றா, ஏன் இந்த முரண்பாடு ?.

வழக்கமான கமர்ஷியல், மசாலா படங்களில் இருந்து விலகி எடுக்கப்பட்டுள்ள படம். கிராமங்களுக்கு நல்லது செய்ததாகச் சொல்லி சில பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு படம், மக்களுக்கு இதன் மூலம் விழிப்புணர்வு கிடைக்கும் என்பதால் கை கொடுத்து பாராட்டலாம்.

இராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் - போராட்டமே வாழ்க்கை

 

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓