4

விமர்சனம்

Advertisement

நடிப்பு - தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ்
இயக்கம் - வெற்றிமாறன்
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
தயாரிப்பு - வி கிரியேஷன்ஸ்
வெளியான தேதி - 4 அக்டோபர் 2019
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடங்கள்
ரேட்டிங் - 4/5

தமிழ் சினிமாவில் ஒரு அரிய, தரமான கூட்டணியாக படத்துக்குப் படம் வளர்ந்து வருகிறார்கள் இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களுக்குப் பிறகு இந்த அசுரன் படம் மூலம் அசுரத்தனமாய் வளர்ந்து நிற்கிறார்கள் இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ்.

இப்படி ஒரு படத்தைக் கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்த இயக்குனர் வெற்றிமாறன், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிகர்கள் தன்னை ரசிப்பார்கள் என்று நினைத்த தனுஷ், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமானாலும் பரவாயில்லை என நினைத்த மஞ்சு வாரியர் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

80களில் ஆரம்பித்து 60களுக்குப் பயணித்து மீண்டும் 80களில் முடியும் ஒரு கதை. சாதி மோதல், குடும்பத்துப் பகை, பழிக்குப் பழி, உறவுக்குள் காதல் என இதற்கு முன் சில படங்களில் பார்த்த சம்பவங்களே இந்தப் படத்தின் கதையாக இருந்தாலும் இப்படி ஒரு படமாக அவற்றை இதற்கு முன் பார்த்திருக்க மாட்டோம்.

வடக்கூரான் குடும்பமான ஆடுகளம் நரேன் குடும்பத்திற்கும், சிவசாமி தனுஷ் குடும்பத்திற்கும் இடையே நிலத் தகராறு இருந்து வருகிறது. தனுஷிடமிருக்கும் 3 ஏக்கர் நிலத்தைப் பறிக்க பல வேலைகளை செய்கிறார் நரேன். அம்மா மஞ்சு வாரியரை தேவையில்லாமல் வம்புக்கிழுத்த நரேனின் மகனை அடித்து உதைத்ததால் கைது செய்யப்படுகிறார் அருணாச்சலம். மகன் அருணாச்சலத்திற்காக நரேனிடம் பஞ்சாயத்து செல்கிறார் தனுஷ். அதன்படி வடக்கூரில் உள்ள மக்களின் காலில் விழுந்து மகனை மீட்டு வருகிறார். ஆனால், அருணாச்சலம், நரேனை செருப்பால் அடித்து அவமானப்படுத்துகிறார். அதனால், கோபமடையும் நரேன், ஆட்களை வைத்து அருணாச்சலத்தைக் கொல்கிறார். தன் அண்ணன் அருணாச்சலத்தைக் கொன்றவர்களைப் பழி வாங்க நரேனைக் கொலை செய்கிறார் தம்பி கென். தன் குடும்பத்தைக் காப்பாற்ற தனுஷ், மனைவி மஞ்சு வாரியர், மகன் கென், மகள் ஆகியோருடன் ஊரை விட்டு காட்டுக்குள் செல்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.

40 வயதிற்கு மேற்பட்ட சிவசாமி கதாபாத்திரத்தில் தனுஷ். மனைவி மஞ்சு வாரியர், திருமண வயதில் இருக்கும் மகன் அருணாச்சலம், பள்ளிக்குச் செல்லும் மகன் கென், சிறு மகள், மச்சான் பசுபதி என விவசாயம் செய்து பிழைக்கிறார். தன் குடும்பத்திற்காக எதையும் செய்யத் துடிக்கும் ஒரு கதாபாத்திரம். தன் இரு மகன்களின் துடிப்பையும், ஆவேசத்தையும் பார்த்து அவர்களை அடக்கி வைக்கப் பார்க்கிறார். ஆனால், அது முடியாமல் போக மூத்த மகனைப் பறி கொடுக்கிறார். மீதமுள்ள குடும்பத்தையும் காப்பாற்ற அவர் ஓடி ஒளிகிறார் என்று நினைத்தால், தன் குடும்பத்திற்காக அவர் எப்படி அசுரன் ஆக மாறி அசுர வேட்டை நடத்துகிறார் என்பதுதான் இந்தப் படம்.

தனுஷ் அமைதியாகவே செல்கிறாரே என்று நினைக்கும் நேரத்தில், அடியாட்களிடம் இருந்து மகனைக் காப்பாற்ற அவர் வரும் போது தியேட்டரில் கைத்தட்டல் ஒலிக்கிறது. எந்த இடத்தில் நாயகனின் ஹீரோயிசத்தை சரியாக வெளிப்படுத்த வேண்டுமோ அப்படியான ஒரு காட்சியில் அதை வைத்திருக்கிறார் இயக்குனர். அதன்பின் தனுஷ் எங்கெல்லாம் கத்தியைத் தூக்கி சண்டை போட வருகிறாரா அங்கெல்லாம் ஆர்ப்பரிக்கிறது தியேட்டர். இப்படி ஒரு வாழ்வியலான கதையில் கூட சரியான காட்சியில் ஹீரோயிசத்தை வைத்து தனுஷ் ரசிகர்களையும் ஏமாற்றவில்லை இயக்குனர்.

இந்த வயதில் இப்படி ஒரு நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷின் துணிச்சலைப் பாராட்டாமல் இருக்க முடியாது. சிவசாமி ஆக அப்படியே மாறியிருக்கிறார். நெல்லைத் தமிழில் கூட அவர் பேச்சு சரளமாக இருக்கிறது. இந்த வருடத்திற்கான தேசிய விருதை இப்போதே தனுஷ் பெயரில் எழுதி வைத்துவிடலாம்.

தமிழ் சினிமாவில் இரண்டு பாடல்கள், சில காட்சிகளில் நாயகனைக் காதல் செய்துவிட்டு போகும் ஹீரோயின்கள் இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் நடிக்க முன் வந்ததைப் பார்த்தும், அவரது நடிப்பைப் பார்த்தும் கண்டிப்பாக வெட்கப்படுவார்கள். இத்தனை வருடங்களாக தமிழ் சினிமா பக்கம் நடிக்க வராமல் இருந்தவர் இப்படி ஒரு கதாபாத்திரத்திற்காகத்தான் காத்திருந்தாரோ என்று கேட்க வைக்கிறது அவருடைய நடிப்பு. தனுஷ் மனைவி பச்சையம்மாள் ஆக மஞ்சு வாரியர் தமிழ் நாட்டின் கிராமத்துப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். எந்த ஒரு காட்சியிலும் அவர் மஞ்சு வாரியர் ஆகத் தெரியவேயில்லை, பச்சையம்மாள் ஆக மட்டுமே தெரிகிறார். அவரே சொந்தக் குரலில் பேசியிருந்தால் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கும் நிச்சயம் உண்டு.

தனுஷ், மஞ்சுவாரியர் ஆகிய இருவர் மட்டுமல்லாது அவர்களது மகன்களாக நடித்திருக்கும் டீஜே அருணாச்சலம், கென் கருணாஸ் இருவரும் அவரவர் கதாபாத்திரத்தில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். இளம் ரத்தம் பயமறியாது என்பதற்கு அவர்களது கதாபாத்திரங்கள் உதாரணம். கொஞ்ச நேரமே வந்தாலும் அருணாச்சலம் அவரது நடிப்பில் முத்திரை பதிக்கிறார். கென் கருணாஸ் அப்பா என்றும் பார்க்காமல் மனதில் பட்டதை பட்டென்று பேசி நம் மனதில் இடம் பிடிக்கிறார்.

தனுஷின் மச்சானாக, மஞ்சுவின் அண்ணனாக பசுபதி, வடக்கூரான் ஆக ஆடுகளம் நரேன், அதிகார வர்க்கத்தின் அடையாளம் ஆக திமிராகத் திரிகிறார். அவர் சென்ற பின்னும் அவரின் மிச்சமாக அவரது தம்பி கதாபாத்திரத்தில் பவன், பிளாஷ்பேக்கில் தனுஷின் முறைப் பெண்ணாக அபிராமி, வக்கீல் ஆக பிரகாஷ் ராஜ், இன்ஸ்பெக்டராக இயக்குனர் பாலாஜி சக்திவேல், சாதி வெறி பிடித்த இளைஞர் நிதிஷ் வீரா, தனுஷின் அண்ணனாக கம்யூனிஸ்ட் பேராட்டாக்காரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா என அவரவர் கதாபாத்திரங்களில் அப்படியே அச்சு அசலாய் தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல கதைக்களம் கிடைக்கும் போதுதான் தொழில்நுட்பக் கலைஞர்களும் அவர்களது திறமையை வெளிப்படுத்த முடியும். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், பின்னணி இசையில் வேறு ஒரு வேகத்தைக் கூட்டியிருக்கிறார். வெற்றிமாறன், தனுஷுடன் ஜிவி மீண்டும் இணைந்திருப்பது இந்தப் படத்திற்கான மற்றுமொரு சிறப்பு. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குனர் ஜாக்கி, தங்கள் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாக இந்தப் படத்தை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கலாம். கத்தி, கம்பை வைத்தும் இப்படி சண்டைக் காட்சிகளை தன்னால் அமைக்க முடியும் என காட்டியிருக்கிறார் சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன்.

பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை மூலக் கதையாகக் கொண்ட படம் தான் இந்த அசுரன். தமிழ் சினிமாவில் நாவலைப் படமாக்கினால் பெயரும், புகழும் அதிகம் கிடைக்காது என்ற ஒரு சென்டிமென்ட் பல வருடங்களாக உண்டு. அதை நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடைத்தெறிந்திருக்கிறது இந்த அசுரன்.

படிப்பை மட்டுமே இந்த உலகில் யாரிடம் இருந்தும் யாரும் பறிக்க முடியாது என்ற உயரிய கருத்தைச் சொல்லி படத்தை முடித்திருப்பதுதான் படத்தின் அசுர பலம்.

படத்தில் உள்ள கத்தி, ரத்தம், கொலைகள் மட்டும் தான் நம்மை என்னவோ செய்கிறது. அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் இந்த அசுரன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய அடையாளமாய் பதிவு பெறும்.

அசுரன் - அசுரர்கள்.. வெற்றிமாறன், தனுஷ்..!

 

அசுரன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அசுரன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

தனுஷ்

டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் 2வது மகன்தான் தனுஷ். 1983, ஜூலை 28ம் தேதி பிறந்த இவரது நிஜப்பெயர் வெங்கடேஷ் பிரபு. இவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து நடித்த திருடா திருடி, தேவதையை கண்டேன், சுள்ளான், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, பொல்லாதவன், உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இரண்டு தேசிய விருது வென்றுள்ள தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஹிந்தி சினிமா, ஹாலிவுட் படத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

மேலும் விமர்சனம் ↓