விடுதலை
விமர்சனம்
தயாரிப்பு - ஆர்எஸ் இன்போடெயின்மென்ட்
இயக்கம் - வெற்றிமாறன்
இசை - இளையராஜா
நடிப்பு - சூரி, பவானிஸ்ரீ, விஜய் சேதுபதி, கவுதம் மேனன்
வெளியான தேதி - 31 மார்ச் 2023
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 4/5
அரசின் திட்டங்கள், இயற்கை வளங்களின் பாதுகாப்பு, மக்களின் எதிர்ப்பு, சில குழுக்களின் வன்முறை, காவல்துறையின் அடக்குமுறை, கடமைக்காக தங்கள் இன்னுயிரை பலி கொடுக்கும் அப்பாவிக் காவலர்கள் என தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் பல கதைகள் வந்திருக்கிறது. அவற்றில் ஒரு சில கதைகள் கமர்ஷியல் படமாக மட்டுமே அடையாளம் காட்டப்பட்டன. ஆனால், விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில படங்கள் மட்டுமே முதல் வரியில் குறிப்பிட்ட விஷயங்களை அவரவர் சார்ந்த நிலையில் ஒரு வாழ்வியலாகக் காட்டியுள்ளன. அப்படி ஒரு படத்தை இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்திருக்கிறார்.
வெற்றிமாறன், இளையராஜா, சூரி, விஜய் சேதுபதி என இந்தப் படத்தில் பங்கேற்றுள்ள சில கலைஞர்களை முதலிலேயே பாராட்டாமல் இந்த விமர்சனத்தைப் பதிவு செய்யவும் முடியாது. அவரவர் பங்களிப்பில் இதுவரையிலான அவர்களது திறமையின் சிறந்த வெளிப்பாடு இந்தப் படம்.
அருமபுரி என்ற ஊருக்கு அருகில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால், அந்த சுரங்கத்தை எதிர்த்து விஜய் சேதுபதி தலைமையிலான மக்கள் படை என்ற தீவிரவாதக் குழு பேராடுகிறது. ரயில் குண்டு வெடிப்பு, காவலர்களைக் கொல்வது என பலவித தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறது. மக்கள் படை தலைவன் ஆன விஜய் சேதுபதி யார் என்றே அரசுக்கு தெரியாது. அவரைக் கண்டுபிடிக்கவும், அவரது படையை அழிக்கவும் பல மாதங்களாக சேத்தன் தலைமையில் ஒரு காவல் துறை அணி போராடி வருகிறது. அந்தக் குழுவில் டிரைவராக வேலைக்குச் சேரும் சூரி, ஓரிரு முறை விஜய் சேதுபதியைப் பார்க்கிறார். தனது கடமையில் ஈடுபாட்டுடன் இருக்கும் சூரி, மேலதிகாரி சேத்தன் ஆணையை மதிக்காத காரணத்தால் மெமோ கொடுக்கப்பட்டு பணித் தண்டனை கொடுக்கப்படுகிறார். காவல் துறை குழுவுக்கு புதிய அதிகாரியாக டிஎஸ்பி கவுதம் மேனன் நியமிக்கப்படுகிறார். அதன் பிறகு அந்தக் குழுவினர் விஜய் சேதுபதியைக் கண்டுபிடித்தார்களா, சூரி அதனுள் எப்படி வருகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள காட்டுப்பகுதி, காவல்துறை குழு இருக்கும் இடம், படத்தில் கதாபாத்திரங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்கள் என ஒவ்வொருவருமே குறிப்பிடும்படியான அதிகப்படியான ஈடுபாட்டைக் காட்டியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பலத்த விமர்சனங்களுக்குள்ளாகும் படங்களைக் கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் இந்தப் படத்தையும் அப்படியே கொடுத்திருக்கிறார்.
வெற்றிமாறன் படத்தில் சூரி கதாநாயகனா என யோசித்தவர்கள், இந்தப் படத்தைப் பார்த்த பின் குமரேசன் என்ற போலீஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் சூரி எந்த அளவிற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்பதை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். ஒரு இடத்தில் கூட இதற்கு முந்தை நகைச்சுவை நடிகர் சூரியை படத்தில் பார்க்க முடியாது. மேலதிகாரியாக இருந்தாலும் தான் தவறு செய்யாத போது எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குணம் கொண்டவர். பவானிஸ்ரீ மீது வரும் காதலில் அவருடைய காதல் நடிப்பு கூட கவனத்தை ஈர்க்கிறது. படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் சூரியின் நடிப்பிற்கும், ஆக்ஷனுக்கும் தியேட்டர் முழுவதும் கைத்தட்டல் கிடைப்பதே கதையின் நாயகனாக சூரிக்குக் கிடைத்துள்ள மிகப் பெரும் பாராட்டு.
இந்த முதல் பாகத்தைப் பொறுத்தவரையில் விஜய் சேதுபதியைத் தேடும் குழுவிற்கு முதல் அதிகாரியாக இருக்கும் கவுதம் மேனனை விட அவருக்குக் கீழ் சிஓ--வாக பணி புரியும் சேத்தன் தனது கடுகடுப்பை அந்த அளவிற்குக் காட்டியிருக்கிறார். சூரியைப் பார்த்தாலே எரிச்சல் வருகிறது என்று சொல்லுமளவிற்கு அவரது கதாபாத்திரம் உள்ளது.
டிஎஸ்பி ஆக கவுதம் மேனன், அந்தப் பதவிக்குரிய மிடுக்குடன் நடித்திருக்கிறார். இரண்டாம் பாகத்தில் இவருக்கான காட்சிகள் அதிகம் இருக்கலாம் எனத் தெரிகிறது. சூரியின் ஜோடியாக மலை கிராமத்துப் பெண்ணாக பவானிஸ்ரீ. அந்தப் பார்வையும், தன் பெற்றோரைப் பறிகொடுத்த சோகத்தையும் பற்றிச் சொல்லும் போது கண்கலங்க வைக்கிறார். தலைமைச் செயலாளராக ராஜீவ்மேனன். அந்தப் பதவிக்குரிய அதிகாரத் தோரணையை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு இந்த முதல் பாகத்தில் காட்சிகள் குறைவுதான். இடையிடையே வந்து போகிறார். கிளைமாக்சுக்கு முன்பாகக் கொஞ்சமாக வருகிறார். இரண்டாம் பாகத்தில் அவருடைய காட்சிகள்தான் அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது. படம் முடிந்த பிறகு இரண்டாம் பாகக் காட்சிகள் சிலவற்றைக் காட்டுவதிலிருந்து அப்படி ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழ் சினிமாவில் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் இளையராஜா. அவருடைய இசைத் திறமை என்னவென்பது பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கறிவார்கள். இந்தப் படத்திற்காக தனி கவனம் செலுத்தி, உலகத் தரம் வாய்ந்த வேறொரு விதமான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே நம்மை படத்துக்குள் இழுத்துக் கொண்டு செல்கிறது அவரது பின்னணி இசை. இரண்டு பாடல்களும் அப்படியே மனதோடு கலக்கிறது. தன் காதலியை போலீஸ் பிடியிலிருந்து காப்பாற்ற சூரி ஓடும் போது இளையராஜாவின் குரலில் வரும் அந்தப் பாடல் உருக வைக்கிறது.
காடு, மேடு, மலை, இரவு, பகல், பனி எனக் கடந்து இயற்கையுடன் ஒன்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வேல்ராஜ். ராமர் படத்தொகுப்பு, ஜாக்கி கலை, பீட்டர் ஹெய்ன், ஸ்டன்ட் சிவா ஆகியோரின் சண்டைக் காட்சிகள், என மற்ற தொழில்நுட்பக் குழுவினர்களும் கடுமையாய் உழைத்திருக்கிறார்கள்.
காவல் துறையின் விசாரணைக் காட்சிகளை மிகவும் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார்கள். சென்சார் செய்யப்பட்டும் அந்தக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது ஆச்சரியம்தான். படத்தின் ஆரம்ப ரயில் குண்டு வெடிப்புக் காட்சி நீளமாகவும், இடைவேளைக்குப் பின் கொஞ்ச நேரம் கதையோட்டம் கொஞ்சம் தடைபடுவதும் படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.
'விடுதலை' போராட்டம்…
விடுதலை தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
விடுதலை
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்