Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

விசாரணை

விசாரணை,Visaranai
26 பிப், 2016 - 13:52 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » விசாரணை

தினமலர் விமர்சனம்


போலீஸ் நட்பு, போலி நட்பு, பொல்லா நட்பு, பொல்லாப்பு... என வழக்கில் சொல்வதை உண்மை என சொல்லி ஒரு உண்மை சம்பவத்தை தழுவி வெளிவந்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறனின் விருதுபடைப்பு!


கதைப்படி, ஆந்திரா - குண்டூரில் ஆளுக்கொரு பிழைப்பு பார்த்துக் கொண்டு இரவில் பொது இடத்தில் ஜாகை செய்தபடி, அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்ட நான்கு தமிழ் இளைஞர்கள் வசிக்கின்றனர்.


கேட்க நாதியும், ஜாதியுமில்லாத நால்வரையும் ஒரு பெரும் திருட்டு வழக்கில் சிக்கவைத்து, அடித்து உதைத்து, மேலிட உத்தரவு அழுத்தத்தால் கேஸை முழுதாக மூடி, முடிக்க நினைக்கிறார் அந்த ஊர் அடாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர். அந்த கேஸ், கோர்ட்டுக்கு வருகிறது. நால்வரும் தாங்கள் குற்றமற்றவர்கள்... என தமிழில் சொல்வது புரியாத நீதிபதி,அந்த நேரம் வேறு ஒரு வழக்கு விஷயமாக குண்டூர் வரும் தமிழக போலீஸ் அதிகாரி சமுத்திரகனியின் உதவியை நாடுகிறார். அவர்கள்... நால்வரும், தவறு செய்யாதவர்கள் எனும் உண்மையை கோர்ட்டுக்கு சொல்லி, அவர்களை விடுவித்து, நால்வரையும் தான் தேடி வந்த குற்றவாளியுடன் தமிழகம் அழைத்து வருகிறார் சமுத்திரகனி.


அந்த நால்வரில் ஒருத்தர் வழியிலேயே இறங்கிக் கொள்ள, மீதி மூவரும் தமிழக போலீஸாரின் சுயரூபத்தாலும், சுயலாபத்தாலும் அடையும் கொடூர முடிவு தான் விசாரணை படத்தின் நெஞ்சடைக்க செய்யும் கதை மொத்தமும்!


ஆந்திர போலீஸிடம் சிக்கி அதி பயங்கர சித்ரவதைகளுக்கு உள்ளானாலும் உறுதியாக இறுதி வரை உண்மை பேசும் அப்பாவி இளைஞராக அட்டகத்தி தினேஷ் - சபாஷ். அவரது நண்பர்களாக வரும் முருகதாஸ் உள்ளிட்டோரும் பேஷ்! ஆனாலும், அவர் களுக்கு ஏற்படும் முடிவு கொடூரம்!


துடுக்கான அதே நேரம், மிடுக்கான தமிழக போலீஸ் இன்ஸ்பெக்ட்ராக சமுத்திரகனி, இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நம்மூர் போலீஸில் எஞ்சியிருக்கும் மனிதநேயத்தை காட்டும் பாத்திரத்தில் சிறப்பாக வந்து செத்துமடிவது உருக்கம்.


கயல் ஆனந்தி, கதையின் நாயகியாக கொஞ்ச நேரம் மட்டும் வந்து போவது நச் - டச்.


அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கும் ஆடிட்டராக வரும் கிஷோர், அரக்கத்தனமான ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டராக வந்து மிரட்டும் அஜெய்கோஷ், சரவண சுப்பையா, சேரன்ராஜ், ஈ. ராமதாஸ் உள்ளிட்ட எல்லோரும் மிரட்டல்!


எஸ்.ராமலிங்கத்தின் ஒளிப்பதிவில் ஆந்திர லாக் - அப் கொடூரங்களையும், தமிழக போலீஸின் என்கவுண்ட்டரையும் அசத்தலாக மிரட்டலாக காட்சி படுத்தியிருப்பது படத்தின் பெரும் பலம். ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் அப்படியே!


ஒரு பக்கம் அப்பாவிகளை அடித்து உதைக்கும் போலீஸ், பதவியில் இருப்பவர்களுக்காக இருக்க துடிப்பவர்களுக்காக.... சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்களையும் தூக்கி போட்டு மிதிக்கும்... என்பதையும் ஆடிட்டராக வரும் கிஷோர் கேரக்டரின் மூலம் காட்டி, போலீஸில், நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் என்று யாரும் கிடையாது. எல்லோரும் கெட்டவர்கள் தான்... என்றும், அதே மாதிரி ஆந்திர போலீஸ், தமிழ்நாடு போலீஸ்... என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.


இந்தியா முழுக்க போலீஸ்காரர்களுக்கு கேஸை முடிக்க வேண்டுமென்றால் என்ன கொடூரம் வேண்டுமானாலும் செய்யும் அடப்பாவிகள் தான் போலீஸில் பலரும்... எனவும், நேர்மையாகவும் - துணிச்சலாகவும் சொல்லியிருப்பதற்காக இயக்குனர் வெற்றி மாறனுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆகவேண்டும்!


வெற்றி மாறனின் எழுத்து, இயக்கத்தில் போலீஸூக்கு அரசாங்கத்தால் தரப்பட்டிருக்கும் எல்லை இல்லா அதிகாரத்தை அழகாக கோடிட்டுகாட்டி, அது உடனடியாக குறைக்கப்பட வேண்டும்... எனும் கோரிக்கையையும் சொல்லாமல் சொல்லி வந்திருக்கும் "விசாரணை - ரசனை!


-----------------------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்
விருது பெற்ற படம் என்றாலே ஸ்லோமோஷனில் நகரும் என்று பொதுக் கருத்து நிலவும். ஆனால் விசாரணை திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சூப்பர்சானிக் வேகத்தில் பறக்கிறது.


படத்தின் மூலமான உண்மை நிகழ்வில், அப்பாவி இளைஞர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை சென்றிருக்கிறார்கள். திரைப்படத்தில் நீதிபதி அவர்களை விடுவிப்பதாக திரைக்கதை சொல்கிறது. அதுதான் லேசான நெருடல். முன்பாதிப் படம் முழுக்க ஆந்திரக் காவல்துறை, அப்பாவிகளை வெளுத்து வாங்குவதையே விஸ்தாரமாகக் காட்டுவதால் நமக்கே உடம்பு வலிக்கிறது.


காவல் நிலையத்தில் இரவு நேரக் காவலர் லேசாகக் கண்ணசருவது, உயர் அலுவலரிடம் அணிவகுப்பு ரிப்போர்ட் செய்வது, விசாரணைக் கைதிகளை வைத்து காவல் நிலையத்தைச் சுத்தப்படுத்துவது போன்ற காட்சிகளில் இயக்குநரின் மிகக் கூர்மையான கவனம் வெளிப்படுகிறது.


கதாநாயகன் என்று யாரையாவது சொல்ல வேண்டும் என்றால் சமுத்திரக்கனியைத்தான் குறிப்பிட வேண்டும். மனிதாபிமானத்துக்கும், மேலதிகாரிகளின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் நிர்ப்பந்ததுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் அபாரம்! உதவி ஆய்வாளராக நடிக்கும் ராம்தாஸ் நடிப்பு இதுவரை பார்த்திராத வகையில் புதிதாயும், பயங்கரமாகவும் இருக்கிறது.


பாடல்களே இல்லை என்ற குறை (அல்லது நிறை) குறிப்பிடத்தக்கது. பின்னணி இசையில் ஜி.வி. பிரகாஷ் அடித்து ஆடியிரக்கிறார்.


அதிகார வர்க்கம் நினைத்துவிட்டால் காவல் துறையின் உதவியுடன் எப்பேர்ப்பட்ட செல்வாக்குப் பெற்றவர்களையும் அசிங்கப் படுத்த முடியும் என்பதைச் சொல்லும் காட்சிகள் அப்பட்டமாகப் பல உண்மை நிகழ்வுகளை நினைவுப் படுத்துகின்றன.


காவலர்களுக்குள்ளும் இதயம் இருக்கிறது என்பதைப் பெண் காவலர் மூலம் வெளிப்படுத்தியிருப்பது நெகிழ்வு! ரோஜாவின் மேல் இருக்கும் பனித்துளி போலத் தோற்றமிளக்கும் கதாநாயகி (?) கயல் ஆனந்தி திரையில் வரும் மொத்தக் காட்சிகளும் சேர்த்து 5 நிமிடங்களுக்குள்தான் இருக்கும்.


குத்துப்பாட்டு, புவி ஈர்ப்பு விசைக்கெதிரான சண்டைகள், அபத்தமான நகைச்சுவை எதுவும் இல்லை. ஆனாலும் திரைக்கதையின் வலுவால் வெற்றிமாறனின் படம் வெற்றி நடை போடுகிறது!


பணம் வெச்சிருக்கிறவன் பயப்படுவான் போன்ற நச் வசனங்கள் ஆங்காங்கே உண்டு. கோட்டாவுல வந்திட்டு சிஸ்டம் புரியாமல் பேசாதே என மிரட்டும் காட்சி. அதிகாரிகள் சிலரிடம் ஊறிப் போயிருக்கும் சாதிப் பாகுபாட்டை வெளிச்சாம் போட்டுக் காண்பிக்கிறது.


ராமலிங்கத்தின் ஒலிப்பதிவு, காட்சிகளின் பின்புலத்துடன் 100% ஒத்துப்போகிறது. படத்தின் இன்னொரு சிறப்பம்சம் காலஞ்சென்ற கிஷோரின் எடிட்டில். வெனிஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அவார்ட் உள்பட விருதுகள் பலவற்றைக் குவித்திருக்கும் இந்தப் படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாதது.


காசை மிச்சம் பிடிப்பதற்காகப் பார்க் போன்ற இடங்களில் பொழுதைக் கழிக்கக்கூடாது என்ற மெசேஜூம் போகிறபோக்கில் சொல்லியிருக்கிறார்கள்.


விசாணை - மகுடம்


----------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்


அடிவயிற்றில் அமிலம் சுரக்கிறது என்பார்களே! அந்த மாதிரியான போலீஸ் விசாரணை இது. விசாரணை என்கிற பெயரில் ரத்தமும் சதையும் வலியும் அலறலும் கதறலுமாக அப்பாவிகளை போலீஸ் அடிக்கும் அடி அப்பப்பா... ஈரக்குலை நடுங்குகிறது.


ஆந்திராவில் மளிகைக் கடையில் வேலை செய்யும் தினேஷ் உள்ளிட்ட நான்கு நண்பர்களை, திடீரென்று கைது செய்து, செய்யாத திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி விசாரணை என்ற பெயரில் படுத்தும் கொடுமை பாதிக் கதை. நீதிமன்றத்தால் விடுதலையாகி, உதவுவார்கள் என்று நம்பி தமிழக போலீஸுடன் வர, அங்கு நடக்கும் போலீஸ் அரசியலில் இவர்களைச் சிக்க வைப்பது மீதிக் கதை.


எதற்காக அடிக்கிறார்கள் என்று தெரியாமல், போலீஸாரிடம் அடி வாங்கும்போதும் சரி, நம்பி வந்த இடத்தில் தமிழக போலீஸ் அவர்களை என்கவுன்ட்டர் செய்யப் போவதாக அறிந்து பதைபதைப்பதிலும் சரி, இயல்பான நடிப்பு தினேஷ் உள்ளிட்ட நால்வருக்கும்.

சமுத்திரக்கனி சபாஷ், கிஷோருடனான அவரது விசாரணை அப்ளாஸ், நம் நெஞ்சில் உள்ள ஈரத்தை சுண்ட வைக்கிறார். ஸ்ரீழலில் சிக்கும் ஆடிட்டராக வரும் கிஷோர்.


ஓரிரு காட்சிகள்தான் என்றாலும் ஆனநதி நம் கண்களில் நிற்கிறார்.


ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு, ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு உயிரோட்டம்.

லாக்கப் மரணத்தை தற்கொலையாக்குவது, ஒத்துப் போகாத போலீஸ் அதிகாரியையே என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளுவது என்று போலீஸ் அராஜகத்தை இவ்வளவு துணிச்சலுடன் தோலுரித்துக் காட்டிய இயக்கநர் வெற்றிமாறனுக்கு ஒரு சல்யூட்.
விசாரணை - நெத்தியடி.
குமுதம் ரேட்டில் - நன்றுவாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
விசாரணை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in