கொட்டுக்காளி
விமர்சனம்
தயாரிப்பு - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பிஎஸ் வினோத்ராஜ்
நடிப்பு - சூரி, அன்னா பென்
வெளியான தேதி - 23 ஆகஸ்ட் 2024
நேரம் - 1 மணி நேரம் 44 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5
சர்வதேசத் திரைப்பட விழாக்கள் பலவற்றி கலந்து கொண்டு, சில விருதுகளையும் வென்ற 'கூழாங்கல்' படத்தை இயக்கிய பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள அடுத்த படம் இது. வணிக ரீதியான திரைப்படங்களுக்கு மத்தியில் இப்படியான படங்களை எடுப்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும். இம்மாதிரியான படைப்புகளை 'ஆர்ட் பிலிம்' என்றே பார்த்து பழக்கப்பட்டுவிட்டோம்.
உலக அளவிலான திரைப்படங்களில் உள்ள எளிதான ஒரு வரிக் கதை, அதற்கான இயல்பான சம்பவங்களைக் கொண்ட திரைக்கதை, அதில் உள்ள காட்சிகள் ஊடாக ரசிகர்களுக்குச் சொல்ல வேண்டிய சில கருத்துக்கள் என இத்திரைப்படங்கள் வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட படங்களாகவே இருக்கும்.
வணிக ரீதியிலான படங்களில் உள்ள வழக்கமான ஒரு கதைதான். ஆனால், அதை இயக்குனர் வினோத்ராஜ் அணுகியிருக்கும் விதம்தான் மாறுபட்டது. மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. இளம் பெண் அன்னா பென்னுக்குப் பேய் பிடித்திருப்பதாக நினைத்து அவரை மற்றொரு கிராமத்தில் உள்ள பேய் ஓட்டும் ஒருவரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அன்னா பென்னின் முறை மாமன் சூரி, இருவரது குடும்பத்தினர், சில உறவினர்கள் என ஒரு ஆட்டோ, பைக்கில் பயணிக்கிறார்கள். அந்த பயணத்தில் நடக்கும் சில சம்பவங்கள், பேய் ஓட்டும் இடத்திற்குச் சென்ற பின் அன்னாவுக்கு பேய் ஓட்டினார்களா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.
தனக்குப் பிடித்த மாதிரியாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கிறார் அன்னா. படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை எங்கேயே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பவராக இருக்கிறார். இடையில் ஓரிரு இடங்களில் லேசாக சிரிக்கிறார், கோபப்படுகிறார். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வாய் திறந்து பேசுகிறார். கோபக்கார மாமனாக சூரி. அன்னா மீது அவ்வளவு பாசமாக இருந்து பேய் ஓட்ட அழைத்துச் செல்கிறாரே எனப் பார்த்தால் ஒரு இடத்தில் நமக்கு அதிர்ச்சியூட்டுகிறார். எங்கோ ஒலித்த சினிமா பாடல் ஒன்றை அன்னா முணுமுணுக்க ஆரம்பித்ததும் கோபம் கொண்டு அன்னாவையும், அவரது அம்மா உள்ளிட்ட ஆட்டோவில் இருந்த அனைவரையும் கடுமையாகத் தாக்குகிறார். அப்போதுதான் தெரிகிறது அன்னாவுக்குப் பேய் பிடித்திருக்கிறதா இல்லையா என்பது. ஆணாதிக்க குணம் கொண்ட, சாதி வெறி பிடித்த கிராமத்து இளைஞனாக வேறு ஒரு நடிப்பைத் தந்திருக்கிறார் சூரி. நகைச்சுவையில் இருந்து கதையின் நாயகனாக மாறியவர் இப்படியும் நடிப்பாரா என ஆச்சரியப்பட வைக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவருமே இதற்கு முன்பு நாம் பார்த்திருக்காத முகங்கள். அப்படி ஒரு யதார்த்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். கிராமத்துப் பெண்கள் என்ன பேசுவார்கள், கிராமத்து இளைஞர்களுக்கு எதன் மீது நாட்டம் என புரளி பேசுவது, குடிப்பது என தற்காக சமூக நிலை சிலவற்றையும் குறியீடுகளாகவும் காட்டுகிறது இந்தப் படம். காட்சிகள் வழியே ரசிகர்கள் கூர்ந்து கவனிக்கும் விதமாக சில பதிவுகளைத் தந்திருக்கிறார் இயக்குனர். அதற்காக அவருக்கு பேருதவியாக இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்திவேல்.
படத்தில் பின்னணி இசையே கிடையாது. இயற்கையின் ஒலி தான் படத்திற்கான பின்னணி இசை. அந்த ஒலிப்பதிவை அருமையாகச் செய்திருக்கிறார்கள் சவுண்ட் டிசைன் செய்துள்ள சுரேன், அழகிய கூத்தன்.
கிராமங்கள், கிராமத்து மனிதர்கள் இப்போதும் எப்படி இருக்கிறார்கள். அவர்களது எண்ணங்கள் தற்காலத்திற்கேற்றபடி மாறியிருக்கிறதா இல்லையா என்பதை 'கொட்டும்' விதத்தில் சொல்லியிருக்கிறார் 'கொட்டுக்காளி'யாக….
கொட்டுக்காளி - பிடிவாதக்காளி…