தினமலர் விமர்சனம் » பண்ணையாரும் பத்மினியும்
தினமலர் விமர்சனம்
ஒரு பழைய காருக்கும், அதனால் ஈர்க்கப்படும் மனிதர்களுக்கும் இடையே நிகழும் உணர்வுகளின் சங்கமமே பண்ணையாரும் பத்மினியும். ஊருக்கு நல்லது செய்யும் பண்ணையாரும், (ஜெயபிரகாஷ்) அவரது மனைவி செல்லம்மாளும் (துளசி), இரவலாக வந்த பிரிமியர் பத்மினி காரின் மேல், அலாதி பாசம் கொள்கின்றனர். கார் ஓட்ட தெரியாத பண்ணையார், வேலைக்கு வைக்கும் ஓட்டுனர் முருகேசன் (விஜய் சேதுபதி) காரின் பால் ஈர்க்கப்படுகிறான்.
ஒரு கட்டத்தில், காரே பண்ணையாருக்கு சொந்தமாகி விட, அந்த சந்தோஷம் நிலைக்க விடாமல், பிறந்த வீட்டிலிருந்து ஏதையாவது சுருட்டிக் கொண்டு போவதிலேயே குறியாக இருக்கும் பண்ணையாரின் மகள் உஷா (நீலிமாராணி), காரை கொண்டு போய் விடுகிறாள். காருக்காக ஏங்குகின்றனர் பண்ணையார் தம்பதியும், முருகேசனும், பத்மினி திரும்ப அவர்களுக்கு கிடைத்தாளா? என்பதை இனிமையாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் அருண்குமார்.
சம்பவங்கள் ஏதும் இன்றி, காரைச் சுற்றியே கதை வலம் வருவது, ஒரு கட்டத்தில், தீராத அலுப்பைத் தருகிறது. சுவாரஸ்யம் சேர்க்க பண்ணையார் தம்பதிகளின் ஊடல் கலந்த காதலையும், முருகேசனின் காதலி, மலர்விழி (ரம்மி ஐஸ்வர்யா ராஜேஷ்) கதையையும் சேர்த்திருக்கிறார் இயக்குனர். துளசிக்கு, இது குறிப்பிடத்தக்க படம். சரிதாவுக்கு அடுத்து, பெரிய கண்களுடன், அவர் காட்டும் உணர்வு பாவங்கள், முதன்மையிடம் பெறுகின்றன. ஜெயபிரகாஷ் கார் பித்து கொண்ட, பெரியவர் பாத்திரத்தில், வெளுத்து வாங்குகிறார். விஜய சேதுபதி, ஒரு ஓட்டுனராக வாழ்ந்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அதிகம் வேலை இல்லை. வந்த வரையில் சோடையில்லை. விஜய சேதுபதியின் உடல் மொழி, பல இடங்களில் அவருக்குள் இருக்கும் தேர்ந்த நடிகரை அடையாளம் காட்டுகிறது. பழைய கார் பற்றிய கதை என்பதால், காட்சிகளை மெகா சிரியல் அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம். வலிந்து திணிக்கப்பட்ட பாடல்கள், இன்னமும் வெறுப்பேற்றுகின்றன. ஆனாலும், அறிமுக இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் சரக்கு உள்ளவர் என்பதை, சில பாடல்கள் உணர்த்துகின்றன. எனக்காக பொறந்தாயே என்ற பாடல் இன்னும் சில நாட்களுக்கு நினைவில் நிற்கும். கோகுல் பினாய், கண்களை உறுத்தாத கோணங்களில் படம் பிடித்திருக்கிறார். இயல்பு தன்மை மாறாமல் இயக்கி இருக்கிறார் அருண்குமார். திரைக்கதை என்னும் வித்தையை, அவர் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில், பண்ணையாரும் பத்மினியும் - இனிய பயணம்!
ரசிகன் குரல் : துளசி மேடத்துக்கு, இந்தப் படம் இன்னொரு சங்கராபரணம் மாப்ளே!
------------------------------------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
அந்த ஊருக்கே அவர் தான் எல்லாம். நாட்டில் எந்த விஞ்ஞானக்கண்டுபிடிப்பு வந்தாலும் அவர் வீட்டில் தான் முதல்ல வரும். ஊர் மக்கள் ரேடியோ, டி.வி, போன் எல்லாம் அவர் வீட்டில் தான் முதன் முதலா பார்க்குறாங்க. அப்பேர்ப்பட்ட பண்ணையார் வீட்டில் அவர் சொந்தக்காரர் மூலம் அப்போதைக்கு பத்மினி ( கார்) யைப்பார்த்துக்குங்கன்னு விட்டுட்டுப்போறார்.
பண்ணையார்க்கு ஒரே குஷி, பெருமிதம். ஆனா அவருக்கு கார் ஓட்டத்தெரியாது. இதுக்காகவே அவர் ஒரு டிரைவரை வெச்சுக்கறார். ஊர் மக்களுக்கு ஒரு நல்லது கெட்டதுன்னா அந்த கார்ல தான் போறாங்க, வர்றாங்க. பொதுவா கார் ஓனரை விட கார் டிரைவருங்களுக்குத்தான் கார் அதிகம் யூஸ் ஆகும். அந்த தியரி படி டிரைவரும் தன் காதலியைக்கவர அந்த காரை யூஸ் பண்ணிக்கறாரு.
பண்ணையாரோட மனைவிக்கு கார்ல போக உள்ளூர ஆசை. ஆனா வெளில காட்டிக்கலை. கார் டிரைவர் ஓட்டுனா எல்லாம் உக்கார மாட்டேன், நீங்களே ஓட்டிப்பழகுங்கன்னு சொல்றாங்க. அவரும் பழகறாரு. இப்படி சந்தோசமாப்போய்ட்டிருந்த வாழ்க்கைல விதி பண்ணையார் மகள் வடிவத்துல வந்து சிரிக்குது. தாய் வீட்டில் எது கிடைச்சாலும் சுருட்டிட்டுப்போகும் நல்ல குடும்பத்துப்பொண்ணான பண்ணையார் மகள் நைசா பத்மினி காரையும் லவட்டிக்குது. அதனால சோகத்தில் மூழ்கும் பண்ணையார் என்ன ஆனார் ? மனைவி ஆசை நிறைவேறுச்சா ? என்பது மீதிக்கதை .
ஆர்ப்பாட்டமே இல்லாத, மிகத்தெளிவான ஒரு நதியின் ஓட்டம் போல மிக அழகான திரைக்கதை. 8 நிமிடக்குறும்படத்தை 128 நிமிட முழுப்படமாக எடுக்க இயக்குநர் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார் என்பது தெளிவாகத்தெரிகிறது . பிரமாதப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் , வாழ்த்துகள்.
ஜெயப்பிரகாஷ் தான் பண்ணையார் ரோல். அருமையான நடிப்பு. ஓவர் ஆக்டிங்க் சிறிதும் இல்லாமல் மிக இயல்பான நடிப்பு. காரைப்பார்த்து பெருமிதப்படும்போது, காரைத்துடைக்கும்போது கூட கவனமாக, மெதுவாகச்செய்வது, கார் ஓட்ட துடிப்பது , மகளிடம் மென்மையாகப்பேசுவது என சுத்தி சுத்தி சிக்சர்களாக விளாசுகிறார்.
அவருக்கு ஜோடியாக துளசி. குயிலியின் கண்கள், சரண்யா பொன்வண்ணன் பாணியில் அமைந்த அழகிய நடிப்பு. இவரும் அவருக்கு இணையாக பட்டையைக்கிளப்பி இருக்கார். கிழவா என அவர் முன்னால நையாண்டி செய்தாலும் உள்ளூர அவர் மீது இருக்கும் காதல் வெளிக்காட்டும் மர்மப்புன்னகை கொள்ளை அழகு. வயோதிகக்காதலின் அழகிய கவிதையை படிப்பது போல் இருக்கு
விஜய் சேதுபதி தான் டிரைவர். பல வெற்றிப்படங்கள் கொடுத்த ஹீரோ எப்படி தலைக்கணம் இல்லாமல் சாதா கேரக்டரில் கூட சைன் பண்ண முடியும் என்பதற்கு முன்னோடியாகத்திகழ்கிறார். இவருக்கு படத்தில் முக்கியத்துவம் கம்மி என்றாலும் திரைக்கதையின் நலன் கருதி இவர் அடக்கி வாசித்திருப்பது , இதில் நடிக்க ஒத்துக்கொண்டது பாராட்டத்தக்கது . கார் ஓட்ட பண்ணையார் கற்றுக்கொண்டால் தன்னைக்கழட்டி விட்டுடுவாரோ என்ற பதட்டம் அவர் முகத்தில் லேசாகத்தோன்றி மறைவது நுணுக்கமான நடிப்பு
அவர் கூடவே வரும் பீடை எனும் கேரக்டர் கவுண்டமணிக்கு செந்தில் மாதிரி. அவர் வாயில் யார் விழுந்தாலும் அவர் ஊ ஊ ஊ தான் , செம காமெடியான காட்சிகள் படம் முழுக்க .
நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் . பனங்கிழங்கை வேக வைத்து பிளந்தது போன்ற மாநிறம் முகம், கிராமத்துக்கேரக்டருக்கு அழகாகப்பொருந்துகிறார் . விழிகளாலேயே அவர் பேசி விடுவதால் வசன உச்சரிப்புகளில் செய்யும் சில தவறுகள் கவனிக்கப்படாமலேயே போகிறது . அவர் சிரிக்கும்போது தெரியும் கீழ் வரிசைப்பல் சந்து கூட அழகுதான்
பண்ணையாரின் மகளாக வருபவர் நீலிமா ராணி, பஸ் டிரைவர், கண்டக்டர் உட்பட பல துணைப்பாத்திரங்கள் நிறைவாகச்செய்து இருக்காங்க. கெஸ்ட் ரோல்ல புன்னகை இளவரசி சினேகா, அட்ட கத்தி தினேஷ் குட் .
பாடல் காட்சிகள் , ஒளிப்பதிவு . இசை , பின்னணி இசை எல்லாமே சராசரிக்கும் மேல் . குறிப்பாக எங்க ஊரு வண்டி இது பாட்டு , பேசுகிறேன் பேசுகிறேன் காதல் மொழி , பேசாமல் பேசுவது உன் கண் விழி பாட்டு , உனக்காகப்பொறந்தேனே பாட்டு என 3 செம ஹிட் பாட்டு
சி.பி.கமெண்ட் - பண்ணையாரும் பத்மினியும் - கிளாசிக்கல் மூவி - கமர்ஷியல் ஹிட் கடினம். லாஜிக்கல் மிஸ்டேக் அதிகம்.பெண்களுக்கு பிடிக்கும். ஏ செண்ட்டரில் ஓடும்.
----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
இவ்வளவு தெளிவான, நீரோட்டமான, உற்சாகமான, யதார்த்தமான, நெகிழ்ச்சியான ஒரு படத்தைத் தமிழில் பார்த்து எத்தனை வருடங்களாயிற்று?
இரவலாக வந்த பச்சை நிற பத்மினி காரின் மீது பண்ணையார் குடும்பத்துக்கும், டிரைவருக்கும் ஒரு காதல் வந்துவிட, அப்புறம் என்ன ஆச்சு? - ஒரு கவனிக்கப்பட்ட குறும்படத்தை கண்களில் ஒற்றிக்கொள்வது போல் தந்திருக்கும் இயக்குநர் அருண்குமாருக்கு ஒரு புத்தம் புதிய காரைப் பரிசாக அளிக்கலாம்!
மூன்று ஃபைட், நான்கு பாடல், எட்டுபஞ்ச் டயலாக் வேண்டும் என்று அட்ராஸிட்டி பண்ணும் ஹீரோக்கள் காலத்தில், தனக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை என்று தெரிந்திருந்தும் துணிந்து நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு ஒரு ஜே!
தனக்கு வேலை போய்விடும் என்பதால் பண்ணையாருக்கு டிரைவிங் கற்றுத் தராமல் அவர் ஆடும் போங்காட்டம், கணவன், மனைவி அன்னியோன்யத்தின் உருக்கம் தெரிந்து கற்றுத் தரும் பாங்காட்டம், கார் இல்லை என்பது தெரிந்ததும், "அம்மா கார்ல டுர்னு பான சீக்கிரம் வந்துடுவீங்க. மாட்டு வண்டியில் போனா, நீங்களும் ஐயாவும் ஜாலியா பேசிக்கிட்டு வரலாம் என்று சொல்லும் நெகிழாட்டம், என்று உயரே உயரே பறந்திருக்கிறார். மேக் அப் இல்லாத முகம், சிவந்த கண்கள் என்று விஜய் ரொம்பவே இயல்பு.
பேரிளம்பருவப் புனிதக் காதலை ஜெய்பிரகாஷ்-துளசி போல் யாராலும் செய்ய முடியாது என்று சத்தியம் செய்துவிடலாம். அந்த நேசம், ஊடல், விட்டுக் கொடுக்கும் பாங்கு என்று நெகிழ்ந்து போகிறது மனசு.
பீடை ஸாரி பெருச்சாளி (பாலா) கலகல. அவர் வாய் திறந்து பாராட்டினாலே எதிராளி காலி என்ற ராசி இருக்க, க்ளைமாக்ஸில் அவரால்தான் கார் கிளம்புவதாக ராசியை மூட்டை கட்டியிருப்பது நைஸ்!
சின்ன மூக்கும் பெரிய கண்ணுமாய் ஐஸ்வர்யா மண் வாசனை.
அட்டக்கத்தி தினேஷின் ஃப்ளாஷ்பேக்கான அந்த ஐந்து ரூபாய் சிறுவன் பாத்திரம் கவிதை.
ஒரு காட்சியில் கைக்குழந்தையுடன் ஸ்னேகா. கார் சமாசாரத்தை பண்ணையார் மறைக்க முயல, மனைவியின் கோபத்தால் உண்மையைச் சொல்ல, "தெரியும்பா. அது உங்களுக்குத்தான் என்று ஸ்னேகா சொல்வது நெகிழ்ச்சியான காட்சி. ஆனால் காரின் சொந்தக்காரர் செத்துப் போவதை ஏதோ, "நாளைக்கு சனிக்கிழமை என்பது போல சாதாரணமாக நகர்த்தியிருக்க வேண்டாம்! நீலிமா கேரக்டரிலும் இயற்கைத்தனம் மிஸ்ஸிங்.
"உனக்காகப் பிறந்தேனே, "நம்ம ஊரு வண்டி பாடல்கள் பளிச் என்றால் ஜஸ்டின் பிரபாகரனின் உயிரோட்டமான ரீரெகார்டிங் இதயத்தை வருடுகிறது.
கடைசியில் கதையின் ஓட்டத்தை, நெகிழ்ச்சியை, அன்பை என்னமோ புரிந்து கொண்டது போல "நடித்திருக்கும் அந்த பத்மினி காருக்கு அதன் ஓனர் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்!
பண்ணையாரும் பத்மினியும் - டாப் கியர்!
ஆஹா: திரைக்கதை, விஜய்சேதுபதி, ஜெயப்பிரகாஷ், துளசி
ஹிஹி: காரை மட்டுமே கதை சுற்றிவருவது.
குமுதம் ரேட்டிங் - நன்று