3.5

விமர்சனம்

Advertisement

ரெகுலர் காப்பி ஷாப் காதல் கதையாக இல்லாமல் , ஏ படம் என்றாலும் இந்த காலத்திற்கேற்ற படைப்பாக, கலக்கல் படமாக... வந்திருக்கிறது .,ராம் இயக்கத்தில் , ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன் சதிஷ் குமார் தயாரிப்பில் ஆன்ட்ரியா , வஸந்த் ரவி , அஞ்சலி , ஜேஎஸ்கே சதீஷ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் "தரமணி " திரைப்படம்.

காதலில் தோற்ற இளைஞனும், கல்யாண வாழ்க்கையில் தோற்று ஒரு குழந்தைக்கு தாயான யுவதியும் மழைக்காக ஒதுங்கும் இடத்தில் காதலில் நனைய தொடங்குகின்றனர். அடுத்தடுத்த சந்திப்புக்கு பின்., இணைந்து வாழத் தொடங்கும் இருவரும் சரியான புரிதல் இல்லாமல் பிரிகின்றனர். அப்படி அவசரப்பட்டு பிரிந்து இணைந்த இருவரும் மீண்டும் புரிந்து இணைந்தனரா ? இல்லையா ..? என்பதை படு யதார்த்தமாக சொல்லியிருக்கும் தரமான படமே (தான், சென்சாரில் கேட்டு வாங்கிய ஏ சர்டிபிகேட்டுக்கு பங்கமின்றி ....)" தரமணி ".


கோபம் , தாபம் ,சந்தேகம், குழப்பம் என வளைய வந்து தெளிவு பெறும் சிறப்பான பாத்திரம் வஸந்த் ரவிக்கு . அதை அவர் ,தனது முதல் படத்திலேயே மிக அழகாக

யதார்த்தமாக வெளிப்படுத்தி வீறு நடை போட்டிருக்கிறார். கால் சென்டர் யுவனாகவும் , கண்டதையும் செய்யும் இளைஞனாகவும் பிரபுநாத் பாத்திரத்தில் ...மனிதர் , படத்தில் சில பல இடங்களில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பது செமயாய் ஈர்க்கிறது .


ஒரு குழந்தையின் தாய், ஐ.டி .யுவதி , கல்யாண வாழ்க்கையில் தோற்று காதலிலும் போராடும் காதலி... என அழுத்தமான அல்தியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆண்ட்ரியா, படம் முழுக்க சிறப்பான நடிப்பை வழங்கி அவர் ஏற்றுள்ள பாத்திரத்திற்கும், இந்தப் படத்திற்கும் வலு கூட்டியிருக்கிறார்.


கொஞ்சமே வந்தாலும் அஞ்சலியின் நடிப்பும் அலட்டல் என்றாலும் அசத்தல். படத்தில் மனைவியை சந்தேகப்படும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இப்படத்

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷின் நடிப்பும் சிறப்பு. இன்னொரு துணை பாத்திரமாக வரும் அழகம்பெருமாளும், போலீஸ் சதீஷின் புத்தக புழு மனைவியும் கூட நச் சென்று நடித்துள்ளது படத்திற்கு ப்ளஸ்.


தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் மிளிராத இடங்கள் இல்லை எனும் அளவிற்கு காட்சிகள் ஒவ்வொன்ரும் ஒராயிரம் பேசுகின்றன. பேஷ் , பேஷ்!


யுவன் ஷங்கர் ராஜா இசையில் மறைந்த நா.முத்துக்குமாரின் அர்த்தபுஷ்டிபாடல் வரிகள், இப்படத்திற்கு மேலும் பலமாக இருக்கிறது. பின்னணி இசையும் ஒரு தினுசாக புதுசாக, வயது வந்த ரசிகனை வசீகரிக்கிறது .


இயக்குனர் ராம் தனது எழுத்து, இயக்கத்தில், ஒரு இயக்குநரால் இப்படியும் படம் இயக்க முடியும், ஒரு திறமையான திரைக்கலைஞனாக., அவலங்களாகவும் , அழகாகவும்... தான் பார்த்ததை, தன் கண் முன்னால் நிகழ்ந்தவற்றை அப்படியே தொகுத்து திரைப்பட மாக்கியிருப்பது பெரும் சிறப்பு .


படத்திற்கு இடையிடையே இயக்குநர் ராம், தன் வாய்ஸால் , சமூகத்தில் மாற்றம் , ஏற்றம் , ஏமாற்றங்களுக்கு ஏற்ப கொடுத்திருக்கும் வாய்ஸ் செம்ம... அதிலும், தான் இஸ்லாமியர் ஒருவரிடமிருந்து அவர் அசந்த நேரத்தில், ரயிலில் மூன்று லட்சம் திருடியதால் தான் அவர் மாரடைப்பால் இறந்து போனார் எனும் குற்ற உணர்ச்சியில் இருக்கும் ஹீரோ, தான் திருந்திய மனநிலைக்கு வந்த பின் அந்த இஸ்லாமியர் வீட்டை தேடிப் பிடித்து, அவர் மனைவியிடம் அந்தப் பணத்தை திருப்பி கொடுக்கும் இடத்தில், இன்று இரவு முதல் பழைய ஐநூறு , ஆயிரம் செல்லாது என பாரத பிரதமர் அறிவித்திருக்கிறார்... எனத் தொடங்கித் தொடரும் இயக்குனர் ராமின் வாய்ஸ் தியேட்டரை கரகோஷத்தாலும், விசில் சப்தங்களாலும் களேபரப்படுத்துகிறது பாருங்கள்....

மொத்தத்தில், உலக மயமாக்கத்தால் தமிழ் பெண்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தையும் , புதிய சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதைய ஆண் வர்க்கத்தையும், அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும் ராம் படம் பிடித்திருக்கும் விதம் மெய்யாலுமே, செம ஜோர்!


இவை, எல்லாவற்றுக்கும். முதலில், தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் தன்னை வெவ்வேறு விதமாக நிரூபித்துக் காட்டும் இயக்குநர் ராமின் பரிசோதனை முயற்சிக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.


ஆக மொத்தத்தில் ,"தரமணி - தரம்+ மணி "என்றால் மிகையல்ல!.

 

தரமணி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தரமணி

  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓