அவள்
விமர்சனம்
நடிகர்கள் - சித்தார்த், ஆன்ட்ரியா, அதுல் குல்கர்னி, சுரேஷ், அனிஷா விக்டர்
இயக்கம் - மிலிந்த்
தயாரிப்பு - எடாகி என்டர்டெயின்மென்ட்
இசை - கிரீஷ்
தமிழ் சினிமாவில் பேய்ப் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கடந்த சில வருடங்களாக பேய்ப் படங்களையும் நகைச்சுவைப் படங்களாகக் கொடுத்து பேய் மீதான பயத்தையே போக்கிவிட்டார்கள். ஆனால், இந்த அவள் படம் மீண்டும் பயமுறுத்தும் ஒரு பேய்ப் படமாக வந்திருக்கிறது.
மூளை அறுவை சிகிச்சை டாக்டரான சித்தார்த், அவருடைய மனைவி ஆன்ட்ரியா இருவரும் ஹிமாச்சல் பிரதேசத்தில் வசிக்கிறார்கள். அவர்களது பக்கத்து வீட்டிற்கு அதுல் குல்கர்னியின் குடும்பம் வருகிறது. அதுல் குல்கர்னியின் மகளான அனிஷா விக்டர் ஒரு நாள் திடீரென கிணற்றில் விழுகிறார். அவரை சித்தார்த் காப்பாற்றுகிறார். தொடர்ந்து அனிஷாவிடம் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. மனநல மருத்துவர் சுரேஷ் உதவியால் அனிஷாவைச் சரி செய்ய முயற்சிகள் நடக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து அவர் பேய் பிடித்தவர் போல நடந்து கொள்கிறார். அந்த வீட்டில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதை சுரேஷ் உணர்கிறார். சித்தார்த் உதவியுடன் அதைச் சரி செய்ய முயற்சிக்கிறார். அந்த வீட்டினுள் உள்ள மர்மத்தை அவர்கள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பக் காட்சிகளாக வரும் சித்தார்த், ஆன்ட்ரியாவின் நெருக்கமான காட்சிகள் ஒரு ரொமான்ஸ் படத்தைப் பார்க்கப் போகிறோம் என்று நினைக்க வைக்கிறது. ஆனால், அடுத்த சில காட்சிகளிலேயே மையக் கதைக்கு படம் நகர்ந்து விடுகிறது.
படத்தில் சித்தார்த்தும், ஆன்ட்ரியாவும் எத்தனை முறை முத்தமிட்டுக் கொண்டார்கள் என ஒரு போட்டியே வைக்கலாம். சில காட்சிகளில் ஆன்ட்ரியா, சித்தார்த்துக்கு அக்கா போலவே தெரிகிறார். ஒரு வேளை அதை மறைக்கத்தான் இத்தனை முத்தக் காட்சிகள் வைத்தார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. சித்தார்த், டாக்டராக ஸ்மார்ட்டாகவே நடித்திருக்கிறார். ஆன்ட்ரியா, இப்படியெல்லாம் தாராளமாக நடிப்பார் என்பது தெரிந்ததுதான் என்றாலும், இந்தப் படத்தில் அந்த தாராளம் அதிகம்.
பேய் பிடித்த பக்கத்து வீட்டுப் பெண் ஜெனியாக அறிமுக நடிகை அனிஷா விக்டர். இன்றைய இளம் தலைமுறைப் பெண்களை கண்முன் நிறுத்தும் கதாபாத்திரம். பேய் பிடிக்கும் போதெல்லாம் நன்றாகவே பயமுறுத்துகிறார்.
பேய்ப் படங்களில் இருக்கும் வழக்கமான காட்சிகளான திடீர் திடீர் என பக்கத்தில், பின்னாடி, கண்ணாடியில், கதவு திறந்ததும் பேய் வரும் காட்சிகள் க்ளிஷேவான காட்சிகள் இந்தப் படத்திலும் இருக்கின்றன.
80 வருடங்களுக்கு முன்பு அதுல் குல்கர்னி வீட்டில் ஒரு சீனக் குடும்பத்தினரால்தான் இப்போது நடக்கும் பேய்ப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்று கதை நகர்கிறது. ஆனால், கடந்து போன 80 வருடங்களில் அந்த வீட்டில் வேறு யாருமே வரவில்லையா என்பதையெல்லாம் படத்தில் குறிப்பிடவில்லை.
ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, பின்னணி இசை இயக்குனருக்கு பலமாகக் கை கொடுத்துள்ளன. ஹிமாச்சல பிரதேசப் பின்னணி என்பது கதைக்களமாக இருப்பது சற்றே ஆறுதல்.
பொதுவாக, நாயகன், நாயகி இருக்கும் வீட்டில்தான் பேய்கள் இருப்பது வழக்கம். இந்தப் படத்தில் பக்கத்து வீட்டில் இருக்கும் பேய்தான் பயமுறுத்துகிறது. இதுதான் படத்தில் இருக்கும் வித்தியாசம். மற்றபடி வழக்கமான பேய்ப் படம்தான் இந்த அவள்.
மொத்தத்தில், "அவள்" - பேய் மழையில் ஒரு பேய்ப் படம்!