Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

தங்கமீன்கள்

தங்கமீன்கள்,Thangameengal
 • தங்கமீன்கள்
 • ராம் (டைரக்டர்)
 • ..
 • இயக்குனர்: ராம்
06 செப், 2013 - 16:06 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தங்கமீன்கள்

 

தினமலர் விமர்சனம்


‘‘கற்றதுதமிழ்’’ திரைப்படத்தின் இயக்குநர் ராம், கதையின் நாயகராக நடித்து, இயக்கியும் இருக்கும் திரைப்படம் தான் ‘தங்கமீன்கள்’. காசு கொடுத்தால் தான் கல்வி எனும் இன்றைய நிலையை எள்ளி நகையாடியிருக்கும் இப்படத்தில், தனியார் பள்ளி கல்வி டீச்சர்களுக்கும், மிஸ்களுக்கும், மேடம்களுக்கும் மட்டுமல்ல, தங்களது குழந்தைகளின் தரம், திறம் தெரியாமலே படி, படி என படுத்தி எடுக்கும் பெற்றோர்களுக்கும் சரியான திரைப்ப(பா)ட‌மாக அமைந்திருக்கிறது ‘தங்கமீன்கள்’ என்றால் மிகையல்ல!

கதைப்படி ரோகிணி -‘பூ’ ராமு தம்பதிகளின் வாரிசு ராம். ராமின் செல்லமகள் ‘செல்லம்மா’ எனும் சிறுமி சாதனா! ரிட்டர்யர்டு ஹெட்மாஸ்டர் அப்பாவான ‘பூ’ ராமுவின் பணத்திலும், வீட்டிலும் காலம் தள்ளும் ராம், மகள் கேட்பதை எல்லாம் வாங்கித்தர நினைப்பதுடன் விரும்புவதை எல்லாம் செய்யவும் நினைக்கிறார். மற்ற குழந்தைகளைக் காட்டிலும் சற்றே மந்தமான குழந்தையான செல்லம்மாவை மேலும், மேலும் செல்லம் கொடுத்து கெடுத்து குட்டிச்சுவராக்கி விடப்போகிறான் மகன் ராம் எனும் பயத்தில் அடிக்கடி ‘பூ’ ராமு, ராமிடம் பேத்திக்காக பேச, அதுவே அப்பா - பிள்ளையிடம் பிரிவை உண்டாக்குகிறது. அதன் விளைவு மொத்த குடும்பத்தில் இருந்தும் ராம் பிரிந்து கேரளா - கொச்சிக்கு வேலைக்கு போகிறார். அப்பாவும், மகளும் பிரிவு தாங்காமல் அடிக்கடி போனில் புலம்பி அழ, தியேட்டரில் நாமும் சேர்ந்து அழுவது மாதிரியான உருக்கமான காட்சிகள் ஒரு பக்கம் உலுக்கி எடுக்கிறது. மற்றொரு பக்கம், இன்றைய காசு கல்வியும், அதன் கண்டிப்பும், தன் மகளின் வாழ்க்கையை பாழ் பண்ணி விடும் என நம்பும் ராம், அவளை, அவள் விரும்பும் எவிட்டா மிஸ் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் அரசு பள்ளியில் சேர்த்து விட்டு மகள் விரும்பும் கல்வியை தருகிறார். மக்களுக்கு பாடம் நடத்துகிறார்! இதுதான் ‘தங்கமீன்கள்’ படத்தின் ஜொலி ஜொலிக்கும் மொத்த கதையும்.

இதனூடே மகள் விரும்பும் உயர் ஜாதி நாய்க்காக ராம், நாயாய், பேய்யாய் நாக்கு வெளித்தள்ள ஏழுமலை, ஏழுகடல் தாண்டும் சுவாரஸ்ய காட்சிகள், தனியார் பள்ளி டீச்சரின் கண்டிப்பு, அதனால் சக மாணவர்கள் செல்லம்மா சாதனாவை ‘‘டபிள்யூ’’ என பட்டப்பெயர் வைத்து கூப்பிடும் கலாட்டா, ஆஸ்திரேலியா ரிட்டன் ராமின் தங்கை குடும்பத்தின் அலட்டல், இல்வாழ்க்கைக்குப் போன எவிட்டா மிஸ்ஸின் மாற்றம், செல்லம்மாவால் அவருக்கு கிடைக்கும் ஏற்றமும்... என ஏகப்பட்ட சுவாரஸ்யங்களை கலந்து கட்டி தங்கமீன்களை தகதகவென ஜொலிக்கவிட்டிருக்கும் ராமின் துணிச்சலுக்கு ஒரு ‘ராயல் சல்யூட்’ அடித்தே ஆக வேண்டும்!

இயக்குநராக மட்டுமல்லாமல் இக்கதையின் நாயகராகவும் ராம் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்! கடன் கேட்டுபோன இடத்தில் ஐந்தாறு முறை அலையவிட்டு அல்லல்படுத்துவதுடன், அட்வைஸூம் பண்ணும் நண்பனை ராம் எச்சரிக்கும் இடத்தில் ஆகட்டும், டபிள்யூவை சிம்பிளாக குழந்தைக்கு புரியும்படி எழுத கற்றுத்தராது, அதையே அவளது பட்டப்பெயராக காரணமாகும் டீச்சரிடமும், ஸ்கூல் பிரின்ஸ்பாலிடமும் நியாயம் கேட்டு ராம் போராடும் இடத்திலாகட்டும், மனிதர் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அதேமாதிரி மகளை பிரிந்து வாடும் இடங்களில் கரையாதோர் நெஞ்சையும் கரைக்கும் இடங்களில் நம்மை உலுக்கி எடுத்து விடுகிறார். ராமுக்கு நிறைய விருதுகள் நிச்சயம்!

சிறுமி செல்லம்மாவாக சாதனா, அப்பாவி மகளாகவும், அப்பாவின் மகளாகவும் அசத்தி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கே குளத்தில் விழுந்து தங்கமீன் ஆகிவிடுவாரோ எனும் திகிலுடனேயே நம்மை படம் பார்க்கும் இவரது பாத்திரம் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் பாத்திரமென்றாலும் ‘பலே’ சொல்ல வைக்கும் பாத்திரம் என்றாலும் மிகையல்ல! அம்மணிக்கும் விருதுகள் நிச்சயம்!

இன்னிக்கு ராத்திரி பூரி சுடுறாங்க எங்க வீட்டுல... அதனால நாளைக்கு வீட்டுல கோவிச்சுகிட்டு செல்லலாமுனு இருக்கேன் எனும் பேபி நித்யஸ்ரீ சஞ்சனாவில் தொடங்கி, ஸ்டெல்லா மிஸ்ஸாக கர்ண கொடூரமாக வரும் லிஸி வாரியார், எவிட்டா மிஸ் பத்மபிரியா, ராமின் மனைவியாக, செல்லம்மாவின் தாய் வடிவாக வரும் ஷெல்லி கிஷோர், ஓய்வுபெற்ற தலைமையாசிரியராக, செல்லம்மாவின் தாத்தாவாக வரும் ‘பூ’ ராம் அவரது மனைவியாக, செல்லம்மாவின் பாட்டியாக வரும் நடிகை ரோகிணி உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது ‘தங்கமீன்கள்’ படத்தின் பெரும்பலம்!

யுவன்சங்கர்ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும், அர்பிந்து சாராவின் ஓவிய ஒளிப்பதிவும், ஒரு தந்தைக்கும், மகளுக்கும் இடை‌யேயான உணர்வுப்பூர்வமான பாசத்தையும், பணகல்வி தரும் மோசத்தையும் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல இயக்குநர் ராமிற்கு பெரிதும் ஒத்துழைத்திருக்கின்றன! வயசுக்கு வர்றதுன்ன என்னம்மா? உள்ளிட்ட ஒரு சில வசனக்கோளாறுகள், குறைபாடுகள் இருந்தாலும் ‘தங்கமீன்கள்’ ஜொலிக்கும் உணர்வுப்பூர்வமான ‘வைரமீன்கள்’!!
----------------------------------------------குமுதம் விமர்சனம்


படிப்பில் குறையும், பாசத்தில் மிகையும் கொண்ட குட்டி மகளுக்கும், பொறுப்பில் குறையும், அன்பில் மிகையும் கொண்ட தந்தைக்குமான தனி உலகத்தை இதுபோல் யாரும் தமிழில் காட்டியதில்லை!

தாடி, பெரிய கண்ணாடி, எப்போதும் இறுக்கமாகவோ, சோகமாகவோ, கோபமாகவோ, பாசமாகவோ இருக்கும் ராம், எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் தான் மனதில் நினைத்ததை அப்படியே தந்திருக்கிறார்.

வாய், கண், நாசி என்று முகம் முழுக்கப் புன்னகையுடனும், தன் உலகம் பற்றிய தவிப்புடனும் சிறுமி சாதனா மனதில் அப்படியே பதி்ந்து போகிறார்.

மகளே எல்லாமுமாக இருக்கும் பிழைக்கத் தெரியாத தந்தை. மகள் ஆசைப்பட்ட விலை உயர்ந்த நாய்க்குட்டிக்காக காடு, மேடுகளைத் தாண்டி, சாவின் ஒற்றை நிமிடத்துக்கு முன் மகளைக் காப்பாற்றுவதுதான் ‘தங்க மீன்கள்’.

படத்தில் அனைவருமே நல்லவர்களாக இருந்து வில்லன் என்று யாருமே இல்லாமல் இப்படி ஒரு படம் வந்து ரொம்ப நாளாயிற்று. அவரவர்களுக்கு உண்டான அவரவர்களின் நியாயத்தையும் கோபத்தையும் கவிதை மாதிரி காட்டியிருப்பதற்காகவே இயக்குநர் முதுகைச் செல்லமாய்த் தட்டலாம்.

‘அம்மா, நான் எப்பம்மா வயசுக்கு வருவேன்?’’ என்று மகள் கேட்டதும் அழுதபடியே அம்மா, அவளைச் சாத்துவதும், வயதுக்கு வந்தால் புதுத்துணி, அணிகலன்கள் அணியலாம் என்ற குழந்தையின் ஆசையைத் தந்தை புரிந்து கொள்வதுமான காட்சியாகட்டும், ‘‘அப்பா, நீ மட்டும் செத்தே போகக்கூடாது’’ என்று தந்தையிடம் சத்தியம் வாங்கிக் கொள்ளும் காட்சியாகட்டும் - கவிதைத் துளிகள்.

செத்துப்போக முடிவெடுக்கும் ஒரு சிறுமி, அன்று வீட்டில் அம்மா பூரி சுடுவதால் தன் தீர்மானத்தை ஒருநாள் தள்ளிப்போடும் காட்சி, கலகலக்க வைக்கிறது.

உருக்கமான படமாக இருந்தாலும நம் நெஞ்சில் நெருக்கமாகப் பதிய வைக்க முக்கிய காரணமாக இருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் அரபிந்து சாராவும், ஆனந்த யாழை மீட்டும் யுவனும்.

இரண்டே காட்சிகளில் வந்தாலும் பத்மப்ரியா பதிகிறார். ராமின் மனைவியாக வரும் அந்தப் புதுமுகம் (பேர் என்னப்பா?) படம் முழுக்க சோகப் போர்வை போர்த்திக் கொண்டாலும் யதார்த்த நடிப்புக்கு ஒரு உதாரணி!

அந்தச் சிறுமி பேசும்போதெல்லாம் ராம் பேசுவது போலவே இருக்கிறது! தவிர்த்திருக்கலாம்.

‘நீ படிக்கத்தான் ஃபீஸ் கட்டினேன்! இப்ப உன் மகளுக்கும் கட்டறேன்’ அலுத்துக் கொள்ளும் அப்பா பூ ராம் மனதில் பதிகிறார். ரோகிணி, ஏமாற்றம்.

தங்க மீன்கள் - தமிழில் ஓர் ஈரானிய படம்!

குமுதம் ரேட்டிங் - நன்று----------------------------------------------------------------நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.comஒரு படைப்பாளிக்கு ஆத்ம திருப்தி அளிப்பது அவனது படைப்புக்கு கிடைக்கும் கை தட்டல் ஓசையே! படம் பார்க்கும் அனைவரையும் எழுந்து நின்று கைதட்ட வைக்கும் அளவு  பிரமாதமாக ஒரு படம் கொடுத்திருக்கும் இயக்குநர் ராம்க்கு மரியாதையுடன் ஒரு சல்யூட். கமர்ஷியலுக்காக எதையும் செயற்கையாக சேர்க்காமல் எடுத்துக்கொண்ட கதைக்கருவுக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்ததற்கு ஒரு சபாஷ்!

ஹீரோ ஒரு கிராமத்தில் வசிக்கும் சராசரி ஆள். லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவன், பெற்றோருடன் கூட்டுக்குடித்தனம். 2ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் தேவதை மழலையாக. பணி புரியும் இடத்தில் சம்பளம் சரி வரத்தராததால் பாப்பாவுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியவில்லை, எல்லாத்துக்கும் தன் அப்பாவை எதிர்பார்க்க வேண்டிய பொருளாதார நிர்ப்பந்தம். ஒரு கட்டத்தில் அப்பாவுடனான வாக்குவாதத்தில் வீட்டை விட்டு வெளியேறும் ஹீரோ கொச்சினில்  பணி நிமித்தம் தங்குகிறான். 2000 ரூபாய் ஃபீஸ் கட்டவே முடியாத அவனிடம் பாப்பா 25,000 மதிப்புள்ள வோடஃபோன் நாய் கேட்குது. அதற்காக அவன் எதிர் கொள்ளும் கஷ்டங்களை மிக கவிதையான நடையில் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

படத்தில் முதல் அப்ளாஷ் அந்த மழலைக்குத்தான். மிக பிரமாதமான நடிப்பு. அப்பா, அப்பா என செல்லம் கொஞ்சும் போதும் சரி, பள்ளியில் எல்லோர் முன்னாலும் அவமானப்படும்போதும் சரி அட்டகாசமான நடிப்பு. என்ன ஆங்காங்கே ஓசை பேபி ஷாலினி போல் ஓவர் ஆக்டிங்கும் உண்டு. அது இயக்குநரின் தவறே அன்றி அந்த  குழ்ந்தையின் தவறில்லை. இந்த மாதிரி மழலைகளை நடிக்க வைக்க மணிரத்னம் போல் குழந்தைகளை இயல்பாக இருக்கவிட்டு படம் பிடிக்க வேண்டும், நடிக்க விட்டு படம் பிடிக்கக்கூடாது. எது எப்படியோ இந்த ஆண்டின் சிறந்த குழ்ந்தை நட்சத்திரம் விருது உறுதி. சாதனா என்ற பெயர் சாதனை படைக்கவோ?

ஹீரோவாக இயக்குநர் ராமே களம் இறங்கி இருக்கிறார்.  தங்கர்பச்சான் உள்ளிட்ட வெகு சிலரே நடிக்க ஒத்துக்கொள்ளும் கேரக்டர். குழ்ந்தையிடம் பாசம் காட்டுவது, அப்பாவிடம் வாக்குவாத்ம் செய்வது, மனைவியிடம் எரிந்து விழுவதும், ஸ்கூலில்  டீச்சரிடம் சண்டை போடுவது என இவர் வரும் காட்சிகள் எல்லாமே எதார்த்தமோ எதார்த்தம். ஒரு இயக்குநர் ஹீரோவாக அவர் இயக்கும் படத்தில் நடித்தால் திரைக்கதையை விட அவர் கேரக்டருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும், ஆனால் அப்படி நடக்காமல் குழந்தையை மையபடுத்திய விதம் பிரமாதம்.

ஹீரோயினாக சாதனாவின் அம்மாவாக வருபவர் மகேந்திரன்  பட நாயகி போல் அவ்வளவு அமைதி. சாந்த சொரூபியாக வரும் அவர்  குழந்தை வயசுக்கு வருவது பற்றி சந்தேகம் கேட்கும்போது பொரிந்து தள்ளுவதில் ஸ்கோர் செய்கிறார். கவர்ச்சி என்ற இம்மியளவு  நிரடல் கூட இல்லாமல் மிக கண்ணியமான ஒரு கதாநாயகிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. வெல்டன்.

குழந்தைக்கு பாட்டியாக வரும் ரோகினி, தாத்தாவாக வரும்  ‘பூ‘ பட ராம், டீச்சராக வரும் பத்மப்ரியா என கேரக்டராகவே மாறியவர்கள் லிஸ்ட் செம நீளம். மிக பாந்தமான நடிப்பு அனைவருடையதும்.

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. படத்தின் ஓப்பனிங்கிலேயே இவ்வளவு திகிலான, பரபரப்பான ஒரு காட்சி கடந்த 10 வருடத்தில் வந்ததில்லை (புலி வருது பட கனவு பலிக்கும் கருணாஸ் காட்சி விதி விலக்கு). குளத்தில் தங்கமீன்கள் இருப்பதாக நம்பும் சிறுமி எந்த நேரத்திலும் தங்க மீனைக்காண குளத்தில் குதிப்பாள் என எகிற வைக்கும் பி.பி. வர வைப்பதில்  இயக்குநருக்கு வெற்றி. அதே டெம்ப்ப்போவை க்ளைமாக்சில் உபயோகித்தது அருமை.

2. அர்பிந்துசரிரா என்பவரின் பிரமாதமான ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். குளம், காடு, மலை, புல்வெளி என அவர் கேமரா விளையாடி இருக்கிறது. இது போன்ற கலைப்பூர்வமான ஒரு படத்துக்கு கேமரா எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார்கள். வெல்டன்!

3. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அபாரம். நந்தலாலா படத்தின் பி.ஜி.எம்மை ஆங்காங்கே டச் பண்ணி வந்தாலும்  யுவனின் சரிதத்தில் இது ஒரு முக்கியமான படம். ‘ஆனந்த யாழை  மீட்டுகின்றாய்...‘ பாட்டு இந்த ஆண்டின்  மிக முக்கியமான மெலோடி ஹிட் சாங்க். படமாக்கிய விதம் அருமை. அதேபோல் மற்ற  2 பாட்டுகளும்  குறை சொல்ல முடியாத தரத்தில் இருக்கிறது.

4. சைக்கிளில் டிராப் பண்ணும் அப்பா வேண்டாம், காரில் வா என தாத்தா அழைக்கும்போது குழந்தை ஸ்கூல் பேக்கை மட்டும் காரில் வைத்து விட்டு சைக்கிளில் அப்பாவுடன் பயணிக்கும் காட்சி  கண் கலங்க வைத்த, நெஞ்சை நெகிழ வைத்த காட்சி. அந்த சீனில் ராமின் முகபாவனை அருமை.

5. மிக மெதுவாக, ஒரு நதியின் அமைதியுடன் பயணிக்கும்  திரைக்கதைக்கு  மதிநுட்பமான, பிரமாதமான வசனங்கள் கை கொடுத்திருக்கிறது. உதவி  இயக்குநர்கள் மட்டும் இந்தப்படத்தில் 27 பேர். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

6. ஹீரோ தன் நண்பனிடம் கடன் கேட்பதும், இழுத்தடிக்கும் நண்பனிடம் அவர் பொரிவதும் பிரமாதமான காட்சி அமைப்பு.
 
7. போஸ்டர் டிசைன்கள், விளம்பரங்களில் அப்பா மகள் பாசத்தை உணர்த்தும் ஸ்லோகன்கள் அழகு.


இயக்குநரிடம்  சில  கேள்விகள்:

1. ஸ்கூல் மிஸ்கள் எல்லாரையுமே சிடு சிடு முகமாக காட்டி இருப்பது செயற்கை தட்டுகிறது. பத்மப்ரியா மட்டுமே விதி விலக்கு. பாதிக்குப்பாதி இரு தரப்பிலும் காட்டி  இருக்கலாம். குழந்தை மீது பரிதாபம் வர வேண்டுமே என்பதற்காக டீச்சர்கள் எல்லோரும் ஓவராக கண்டிப்பது பட்டவர்த்தனமாய் தெரிகிறது.

2. இடைவேளை கார்டு போடும்போது ஹீரோ சைக்கிளில் ரயில்வே கிராசை கடந்த அடுத்த செகண்டிலேயே ரயில்வே கேட் போடப்படுகிறது, கேட் போட்ட அடுத்த செகண்டிலேயே ரயில் வருகிறது, அது எப்படி? ரயில்வே ரூல்ஸ் படி 10 நிமிடங்கள் முன்னதாக கேட் போடப்பட வேண்டுமே? சீன் எஃபக்டா வரனும் என்பதற்காக ரயில்வே ரூல்ஸை மீறலாமா?

3. மழலை மீது  அவ்வளவு பாசமாக இருக்கும்  ஒரு அப்பா அடிக்கடி தம் அடிப்பது ஏன்? குழந்தைகள் முன்னிலையில் அப்பா தம் அடிப்பது இந்தப்படத்தின் கதைக்குத் தேவையே இல்லையே?

4. பத்மப்ரியா டீச்சர் வீட்டில் அவர் கணவர் ஒரு கொடுமைக்காரர் போல் காட்டி இருப்பதும் திரைக்கதைக்கு தேவை இல்லாததே.

5. தங்க மீன்கள் குளத்தின் கதையை சொல்வதிலேயே  குழந்தை குளத்தில் குதிக்கும் அபாயம் இருப்பதை அப்பா உணர வில்லையா? ஒரு முறை  பாப்பா அந்த  குளத்தில் இறங்க முற்படுவதைப்பார்த்த பின்பாவது அவர் இன்னொரு புனைக்கதை  குறி குளத்தில் இறங்காமல்  எச்சரிக்கைப்படுத்தி  இருக்கலாமே? 

6. ஹீரோ தன் நண்பனிடம் கடன் கேட்கும்போது அதை தட்டிக்கழிக்க நினைப்பவன், மணிபர்சில் பணத்தை அப்படி பட்டவர்த்தமாய் காட்டுவானா? அந்த விசிட்டிங்க் கார்டை தனியா எடுத்து வைத்து கொடுத்திருக்கலாமே?

7. சொந்த அப்பாவிடம் என்ன ஈகோ வேண்டிக்கிடக்கிறது? நண்பனிடம் அவமானப்படுவதற்கு அப்பாவிடம் பணிந்து போகலாமே?

8. டபிள்யூ, எம் குழப்பம் 3ஆம் வகுப்பு மாணவிக்கு வருவது நம்ப முடியவில்லை

9. பாப்பா எக்சாம் எழுத ரூ. 3000 கட்ட வேண்டும் என ஹெச் எம் சொல்கிறார். ஆனால் தாத்தா ஹீரோவிடம் 2000 ரூபாய் ஃபீஸ் கட்டியாச்சு என்கிறார். எதுக்கு இந்த  குழப்பம்?

10. சம்பளம் சரியாக வராத ஏழை  ஹீரோ ஏன் தனியார் ஸ்கூலில் மகளைப்படிக்க வைக்க வேண்டும்? ஆரம்பத்திலேயே அரசுப்பள்ளியில் படிக்க வைக்கலாமே? 

11.  தாத்தா , பாட்டி , மகன் என நால்வரும் மிக எளிமையான உடை உடுத்தி  இருக்கும்போது மருமகள் மட்டும் பொருந்தாத ஆடம்பர உடை உடுத்தி  இருப்பது ஏன்?  ரோகினி வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் 200  ரூபாய் மதிப்புள்ள சாதா  வாயில் புடவை தான் அணிந்து வருகிறார் . ஆனால் குழ்ந்தையின் அம்மாவாக வருபவர் 2500  ரூபா புடவையில் வருகிறார். தாய் வீட்டு சீதனமாக  இருந்தாலும் கணவன்  மிக சாதாரணமாக உடை உடுத்தி  இருக்கும்போது  காதல் கல்யாணம் செய்த மனைவி அவனைப்போலவே எளிமையான ஆடையில் இருந்திருக்கலாமே...?மனம் கவர்ந்த வசனங்கள்

1. அப்பா, அந்த அங்கிள் ஏன் வீட்டுக்குள்ளே வர்ல? கடன் வாங்க வர்றவங்க வீட்டுக்குள்ளே வர மாட்டாங்க.

2. பணம் கடன் கேட்டா இல்லைனு அப்பவே சொல்லிடுங்கடா. அலைய விடாதீங்க.பணம் இல்லைனு சொல்றதுல என்ன க்வுரவக்குறைச்சல்.

3. அப்பா, செத்துப்போறதுன்னா என்னா? இந்த உலகத்தை விட்டே போறது. அப்டின்னா? நமக்குப்பிடிச்சவங்க யாரையும் பார்க்க முடியாது  அப்போ நீயும் செத்துப்போய்டுவியாப்பா? ப்ளீஸ்ப்பா, நீ மட்டும் செத்துடாதே.

4. இவன் படிக்கறதுக்கு காசு கட்டுனோம், இவன் குழந்தை படிக்கவுமா? குழந்தைக்கு இவன் தானே அப்பன்?

5, டீச்சர் - இப்போ செல்லம்மா கிட்டே ஒரு கேள்வி கேட்கப்போறேன் லொள் மாணவன் - ஹி ஹி ஹி, என்னடா சிரிப்பு ? அவ என்னைக்கு சரியான பதில் கொடுத்திருக்கா?

6. பறவை இனங்கள்லயே தானே கூடு கட்டாம அடுத்தவங்க கட்டுன கூட்டில் வசிப்பது குயில் மட்டுமே. மனுஷங்க நாம இருப்பது கூட வாடகை வீட்டில் தானே?

7. ஏம்மா? சம்பளம் வாங்கியாச்சா?ன்னு உன் புருஷன் கிட்டே கேட்டியா? கேட்டா உன் வேலையைப்பாருன்னு சொல்லிடறாரு அத்தை. சாமார்த்தியக்காரி தான், எப்படி ஊசி குத்தற மாதிரி பதில்.

8. டியர் , கொஞ்சம் என்னை வெளீல கூட்டிட்டுப்போறீங்களா? எங்கே? எங்கேயாவது.

9. நான் காதலிச்சப்ப பார்த்த கல்யாணி நீங்க இல்லை. ஆமாண்டி, கொஞ்சம் தொப்பை போட்டிருக்கு.

10 பணம் இருந்தா பணம் இருக்குதேன்னு கவலை, இல்லைன்னா பணம் இல்லைன்னு கவலை.

11. எதுக்குங்க இப்போ அந்த நாயை அடிச்சீங்க ? நான் யாரைத்தான் அடிக்கறது ?

12. வேலை நல்லாப்பார்க்கறவரை முதலாளிங்க எல்லாம் மகனே, அவனே இவனேம்பாங்க, சம்பளம் கேட்டா எவன் பாங்க.

13. ஆளுக்கு வயசாகிற மாதிரி தொழிலுக்கும் வயசாகுது.

14. ஏண்டா, நான் என்ன எப்பவும் உன் கூடவா இருந்தேன்? உனக்கு நல்ல அப்பனா இல்லை? அதை நான் சொல்லனும்

15. யாராவது செத்தா ஸ்கூல் லீவ் விடறாங்க, ஐ ஜாலி. அதுக்காக பிரேயர்ல அப்படித்தான் கை தட்டுவியா? உங்கப்பா செத்தாலும் இப்படித்தான் கிளாப்ஸ் பண்ணுவியா டீச்சர், குழந்தைட்ட இப்படியா பேசுவாங்க ?

16. ஏய், உன் தாத்தாவைப்பார்த்தா எருமை மாடு மாதிரி இருக்கார்டி. உஷ் சும்மா இரு.

17. டிகிரி படிக்காதவங்க குழந்தை படிக்கக்கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா சார்?

18. இந்த நாயோட விலை ஏன் இவ்வளவு ஜாஸ்தி இருக்குன்னா, இதனோட அண்ணன் சூப்பர் ஸ்டார் மோகன் லால் வீட்ல வளருது. அப்போ இதை மெகா ஸ்டார் மம்முட்டி வீட்ல வித்துடு

19. உனக்கு யார் மேலயாவது கோபம்னா அவங்களை என்ன வேணா பண்ணு, திட்டு, அடி, கொலை கூட பண்ணு, ஆனா பேசாம மட்டும் இருந்துடாதே.


சி.பி.கமெண்ட் : தங்கமீன்கள் - நேர்த்தியான ஒளிப்பதிவு, மனதை வருடும் பின்னணி இசை, நுட்பமான வசனங்கள், கண் கலங்க வைக்கும் நடிப்பு. அனைவரும் தியேட்டருக்குப்போய் பார்க்கவேண்டிய தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம், டோண்ட் மிஸ் இட்.

ஏழ்மையை அனுபவிக்காதவர்கள், அதனால் ஏற்படும் அவமானங்களை உணராதவர்கள் தங்க மீன்கள் மாதிரி படத்தை ரசிக்க முடியாது.

தங்கமீன்கள் கமர்சியல் ரீதியாக வெற்றி பெரும் வாய்ப்பில்லை. பல விருதுகளை அள்ளும். பத்திரிகைகளில் பலத்த பாராட்டு விமர்சனங்களை அள்ளும்.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

தங்கமீன்கள் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in