அன்னமைய்யா, ராமதாசு, ஸ்ரீரடி சாய், போன்ற பக்தி படங்களில் நடித்து வெற்றி கண்ட நாகார்ஜூனா பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.ராகவேந்திர ராவ் இயக்கும் பக்தி படத்தில் ஹாத்தி ராம் பாபா எனும் பெருமாள் பக்தர் வேடம் ஏற்று நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரைக்கு வந்துள்ள நாகார்ஜூனாவின் பக்தி படம் எந்தளவிற்கு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது என பார்ப்போம்.
ராம் எனும் பெருமாள் பக்தரான நாகார்ஜூனா சிறு வயதிலிருந்தே பெருமாள் மீது ஈடுபாடு கொண்டவராக வளர்கின்றார். பின்னர் திருமலையில் பத்மானந்த சுவாமி(சாய் குமார்) நடத்தி வரும் மடத்தில் சேர்ந்து வேதங்களை கற்று தெளிகின்றார். மேலும் அதீத பக்தியை உணர திருப்பதி கோயிலுக்கு சென்று வெளிபடுகின்றார் ராம். இதற்கு இடையூராக சில பிரச்சனைகளுக்கும் ராமிற்கு நடக்கின்றன. இவற்றை களைந்து ராம் பரிபூரண பக்தி மார்க்கத்தில் இணைந்து ஹாத்தி ராம் பாபாவாக எப்படி மாறுகின்றார். பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்கின்றார் என்பதே ஓம் நமோ வெங்கடேஷாய படத்தின் இரண்டாம் பாதி.
தோழா படத்தில் பார்த்த நாகார்ஜூனாவா இது என வியக்கும் அளவிற்கு ஹாத்தி ராம் வேடத்தில் நாகார்ஜூனாவின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கின்றது. நாகார்ஜூனாவின் திரை உலக வாழ்க்கையில் இப்படம் முக்கிய இடத்தைப்பிடிக்கும். கடவுளை காண்பதற்கான அவரது ஆன்மீக பயணமும் அதற்கான தவிப்பை வெளிப்படுத்தும் முகபாவமும் தேர்ந்த நடிகராக நாகார்ஜூனாவிற்கு கைத்தட்டல்களை பெற்று தந்துள்ளது. குறிப்பாக கிளைமேக்ஸிற்கு முந்தய காட்சிகளும், கிளைமேக்ஸ் காட்சிகளும் நாகார்ஜூனா நடிப்பிற்கு சபாஸ் போடசெய்துள்ளன.
பெருமாள் வேடத்திற்கு ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் சௌரப் ராஜ் கனகச்சிதமாக பொருந்தியுள்ளார். அவருக்கும் நாகார்ஜூனாவிற்கும் இடையேயான கெமிஷ்ட்ரி நன்றாக வேலை செய்துள்ளது. அனுஷ்காவிற்கு சிறிய வேடம் என்ற போதிலும் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
பக்தி படங்களை இயக்கி அனுபவம் கொண்டுள்ள பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.ராகவேந்திர ராவ், ஓம் நமோ வெங்கடேஷாய படத்தில் கமர்ஷியல் விஷயங்களையும் சேர்த்து, ஹாத்தி ராம் பாபாவின் வாழ்க்கை வரலாறை தெளிவாக விளக்கியுள்ளார். விஷுவல் எஃபெக்ட் வாயிலாக படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளார். அழகாக வந்து செல்லும் ப்ரக்யா ஜெய்ஸ்வாலிற்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. தனது வில்லதனத்தால் மீண்டும் ஸ்கோர் செய்திருக்கின்றார் ராவ் ரமேஷ்.
வலுக்கட்டாயமாக ஜெகபதி பாபுவின் கதாபாத்திரத்தை சேர்த்திருப்பது திரைக்கதையின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றது. அவரது கதாபாத்திரம் அதனைத் தொடர்ந்து வரும் அனுஷ்கா மற்றும் ஜெகபதி பாபுவின் பாடலும் இடையூராகவே அமைகின்றன.
முதலில் மெதுவாக செல்லும் இரண்டாம் பாதி, இறுதிக்காட்சிகளை நெருங்கும் போது வேகமெடுக்கின்றது. ராகவேந்திர ராவின் பழைய படங்களை நிணைவூட்டும் வகையில் பல காட்சிகள் இடம்பெறுவது பலவீனம்.
திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளமைக்கு ஒளிப்பதிவாளரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். கீரவாணியின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைகின்றது. ஜெகபதி பாபுவின் காட்சிகளை கத்தரித்திருந்தால் எடிட்டிங்கும் முழு சிறப்படைந்திருக்கும்.
பக்தி படங்களை இயக்க தன்னை விட்டால் ஆள் இல்லை என மீண்டும் ஒருமுறை தனது திறமையை நிரூபித்துள்ளார் இயக்குனர் கே.எஸ்.ராகவேந்திர ராவ். இருப்பினும் யூகிக்க முடிந்த திரைக்கதை அமைப்பு சலிப்பை ஏற்படுத்துவதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். பக்தி படங்களுக்கான மவுசு குறைந்து வரும் சூழலில் ராகவேந்திர ராவ் - நாகார்ஜூனாவின் முயற்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது.
ஓம் நமோ வெங்கடேஷாய - பக்தி மழை