விமர்சனம்
தயாரிப்பு - எஸ்எஸ்பிவி லேர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்
இயக்கம் - பாரி இளவழகன்
இசை - இளையராஜா
நடிப்பு - பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி
வெளியான தேதி - 2 ஆகஸ்ட் 2024
நேரம் - 2 மணி நேரம் 13 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5
தமிழகத்தில் உள்ள பாரம்பரியக் கலைகளைப் பற்றிய பதிவுகள் எப்போதோ ஒரு முறைதான் திரைப்படங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றில் சில படங்கள் மட்டுமே அவற்றை சரியான விதத்தில் பதிவு செய்கின்றன. அப்படிப்பட்ட படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, பல வருடங்களுக்குப் பிறகும் ரசிகர்கள் நினைவு கூறும் படங்களாக இருக்கின்றன.
இந்த 'ஜமா' படம் வசூல் ரீதியாக எப்படி வேண்டுமானாலும் இருக்க வாய்ப்புண்டு. ஆனால், காலம் கடந்த பிறகும் ரசிகர்களால் பாராட்டப்படும் ஒரு படமாக இருக்கும். அந்த அளவிற்கு அறிமுய இயக்குனரும், நடிகருமாக இந்தப் படத்தைப் பதிவு செய்திருக்கிறார் பாரி இளவழகன்.
வட தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தெருக் கூத்து கலைக்கு மிகவும் பிரபலமானது. கோவில் திருவிழாக்கள், ஊரில் திருவிழாக்கள் என்றால் 90கள் வரையிலும் தெருக் கூத்து இல்லாமல் அவற்றைப் பார்க்கவே முடியாது. ஊருக்கு ஊர் தெருக்கூத்து கலைஞர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். சில ஊர்களில் குழுவாக இருப்பார்கள். அப்படி இருப்பதற்குத்தான் 'ஜமா' என்று பெயர். அந்த ஜமாவில் நடக்கும் ஒரு அரசியலை உணர்வு பூர்வமாக அப்படியே பதிவு செய்திருக்கிறார் பாரி இளவழகன்.
திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிகொண்டா பட்டு என்ற ஊரில் ஒரு 'ஜமா'வை வைத்திருப்பவர் சேத்தன். அதில் பெண் வேடம் மட்டுமே ஏற்று நடிப்பவர் பாரி இளவழகன். பெண் வேடம் போடுபவர்கள் பெண்களைப் போலவே கூந்தல் வளர்த்திருப்பார்கள். தொடர்ந்து அப்படி நடிப்பதால் அவர்களிடம் பெண்மைத் தன்மையும் கலந்திருக்கும். அந்த ஒரு காரணத்தால் பாரிக்கு யாரும் திருமணத்திற்கு பெண் தர மறுக்கிறார்கள். அவர்கள் அதிகமாக நடத்து மகாபாரதக் கூத்தில் அர்ஜூனன் வேடம் ஏற்று நடிக்க ஆசைப்படுகிறார் பாரி. சேத்தனின் மகள் அம்மு அபிராமி பாரியைக் காதலிக்கிறார். தன் மகளை பாரி காதலிப்பதாலும், அர்ஜூனன் வேடம் போட பாரி ஆசைப்படுவதாலும் அவருக்கு எவ்வளவு பிரச்சனை தர முடியுமோ அவ்வளவையும் தருகிறார் சேத்தன். அவற்றை மீறி பாரி தன் ஆசையை நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தெருக்கூத்தில் பெண் வேடம் போடுபவர்களுக்கென ஒரு உடல் மொழி உண்டு. அவர்களது அங்க அசைவுகள் பெண்மையுடன் இருக்கும். அவர்கள் பேசுவதில் கூட அது இருக்கும். அவற்றை தன் நடிப்பில் அப்படியே கொண்டு வந்திருக்கிறார் பாரி இளவழகன். ஒரு அறிமுக நடிகர் அப்படி நடிப்பது ஆச்சரியமான ஒன்று. இங்கு சிறந்த நடிகர்கள் என்று பேசப்படும் சிலர் கூட இப்படியான கதாபாத்திரத்தை ஏற்று, இந்த அளவிற்கு நடிக்க வாய்ப்பில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். சேத்தன் தன்னை அவமானப்படுத்துவதைக் கண்டு கலங்குவது, காதலைச் சொல்லி கட்டாயப்படுத்தும் அம்மு அபிராமியை சமாளிப்பது, அம்மா ஆசைப்படுவதை தன்னால் செய்து முடிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவது, தன் நிலையை நினைத்து வருந்துவது என பல காட்சிகளில் அவருடைய நடிப்பு பாராட்ட வைக்கிறது. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் அடடா என சொல்ல வைக்கிறது.
தெருக்கூத்து பற்றி அறிந்தவர்கள், அந்த வாழ்வியலைப் பார்த்தவர்கள்தான் இப்படத்தில் ஒன்றி நடிக்க முடியும். படத்தில் கூத்து வாத்தியாராக, ஜமாவை நடத்துபவராக நடித்திருக்கும் சேத்தன் அப்படியான வாழ்வியலைப் பார்க்காதவர். ஆனால், இப்படத்திற்காக படப்பிடிப்புக்கு முன்பே அந்த ஊருக்குச் சென்று அவற்றைப் பார்த்து பயின்று ஒரு வாத்தியார் எப்படியிருப்பாரோ அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். இப்படியான கதாபாத்திரங்கள் ஒரு நடிகருக்கு எப்போதோ ஒரு முறைதான் கிடைக்கும். அப்படி கிடைத்த அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சேத்தன். வாத்தியாரின் நடிப்புக்கு விருதுகளை தேடி வரலாம்.
பாரியை விரட்டி விரட்டி காதலிப்பவராக அம்மு அபிராமி. தான் ஆசைபட்டபடி படிக்கக் காரணமாக இருந்த பாரியை அவர் காதலிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், படித்த அம்மு தன்னை விட சிறந்த ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விலகியே இருக்கிறார் பாரி. இருந்தாலும் மனதுக்குப் பிடித்தவனை கைபிடிக்கத் துடிக்கிறார் அம்மு. குறைவான காட்சிகள் என்றாலும் நிறைவான ஒரு நடிப்பு.
பாரியின் அம்மவாவாக நடித்திருக்கும் மணிமேகலை, அப்பாவாக நடித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண தயாள், ஆதரவாக இருக்கும் சக கலைஞன் வசந்த் மாரிமுத்து ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.
தனக்கான ஒரு படம் கிடைத்துவிட்டால் அதில் முழு ஈடுபாட்டுடன் தன் இசையைத் தருபவர் இளையராஜா. இந்தப் படத்தில் அவருக்காகவே உருவாக்கப்பட்ட பல உணர்ச்சிகரமான காட்சிகள் இருக்கின்றன. அவற்றை தன்னுடைய இசையால் இன்னும் உயர்த்திக் காட்டியிருக்கிறார். 'நீ இருக்கும் உரசத்துல' பாடல் மென்மையாய் வருடிச் செல்கிறது.
திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகொண்டா பட்டு கிராமம், கூத்து நடக்கும் இரவு நேரக் காட்சிகள் ஆகியவற்றை அதன் இயல்புடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கோபால் கிருஷ்ணா.
இடைவேளைக்குப் பிறகு வரும் பிளாஷ்பேக் காட்சிகளின் நீளம் சற்றே அதிகம். அவற்றை சுருக்கமாய் சொல்லியிருக்கலாம். அதோடு முதல் பாதியில் இருந்த தெளிவான திரைக்கதை அமைப்பு, இரண்டாம் பாதியில் தடுமாறுகிறது. இப்படியான சில குறைகளைத் தவிர்த்திருக்கலாம்.
ஜமா - கிரீடம்