
பிளாஷ்பேக்: நிஜ கலைஞர்கள் வழங்கிய நிழலோவியம் “நிழல் நிஜமாகிறது”
முற்போக்கு சிந்தனை, முழுமையான சமூக விழிப்புணர்வு, முற்றிலும் மாறுபட்ட வலுவான பெண் கதாபாத்திரம் போன்றவற்றை முதன்மைக் கருப் பொருளாக வைத்து, குடும்ப உறவுகளையும், மனித மனங்களின் சிக்கல்களையும், வறுமையையும், அரசியலையும், பெண் சுதந்திரத்தையும் துணிச்சலாக தனது திரை மொழியின் வாயிலாக எடுத்துச் சொன்ன இயக்குநர்தான் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர்.
ஆரம்ப காலங்களில் வெற்றி பெற்ற தனது மேடை நாடகங்களையே திரைப்பட வடிவமாக்கித் தந்து, தமிழ் திரையுலகில் தனித்துவ மிக்க ஒரு இடத்தைப் பிடித்திருந்த இவர், பின்னாளில் பிற மொழிகளில் அழுத்தமான கதை பின்னணியோடு வந்த, சில நல்ல வரவேற்புப் பெற்றிருந்த திரைப்படங்களை தமிழாக்கம் செய்தும் வெற்றி பெற்றிருக்கின்றார். அவ்வாறு பிறமொழிப் படமொன்றை தமிழாக்கம் செய்து இவர் இயக்கிய ஒரு திரைப்படம்தான் “நிழல் நிஜமாகிறது”.
1969ம் ஆண்டு இயக்குநர் கே எஸ் சேதுமாதவன் இயக்கி, மலையாளத்தில் வெளிவந்த “அடிமகள்” என்ற திரைப்படத்தை தமிழுக்கு ஏற்றவாறு தனக்கே உரிய தனித்துவத்துடன் சிற்சில மாற்றங்கள் செய்து, தமிழ் திரைப்பட ரசிகர்களும் கொண்டாடி மகிழும் ஒரு திரைப்படமாக இயக்குநர் கே பாலசந்தரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த “நிழல் நிஜமாகிறது”. 1977ல் வெளிவந்த “பட்டினப்பிரவேசம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒரு நடிகராக இயக்குநர் கே பாலசந்தராலேயே பிரவேசமான நடிகர் சரத்பாபு, "வெங்கடாச்சலம்" என்ற ஒரு முக்கிய கதாபாத்திரமேற்று நடித்து, தமிழ் திரையுலகில் நன்கு பிரபலமாவதற்கு காரணமாகவும் அமைந்த திரைப்படம்தான் இந்த “நிழல் நிஜமாகிறது”.
கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஷோபா, தமிழில் நாயகியாக அறிமுகமான திரைப்படமும் இந்த “நிழல் நிஜமாகிறது” திரைப்படமே. காரைக்குடி நாராயணன் இயக்கத்தில், நடிகை ஷோபா நடித்து, அப்போது உருவாகிக் கொண்டிருந்த “அச்சாணி” திரைப்படம், “நிழல் நிஜமாகிறது” திரைப்படத்திற்கு முன்பே வெளியானதால் “அச்சாணி” திரைப்படம் நடிகை ஷோபாவின் முதல் படமாக ஆனது.
பிரபல இயக்குநரும், நடிகருமான மவுலியின் நாடகங்களால் வெகுவாக ஈர்க்கபட்டிருந்த இயக்குநர் கே பாலசந்தர், தனது “நிழல் நிஜமாகிறது” திரைப்படத்திலும் சில நகைச்சுவை காட்சிகளை இணைக்க விருப்பப்பட்டு, அதற்காக நடிகரும், இயக்கநருமான மவுலியை அழைத்து, படத்தில் அவருக்கு விருப்பப்பட்ட இடங்களில் நகைச்சுவைக் காட்சிகளை வைப்பதற்கு முழு சுதந்திரமும் வழங்கி, அதற்கான வசனங்களையும் அவரையே எழுதச் செய்திருந்தார். அவ்வாறு இத்திரைப்படத்திற்காக மவுலி எழுதிய நகைச்சுவை வசனங்கள் இடம் பெற்றிருந்த காட்சிகளின் எண்ணிக்கை 16.
அதேபோல் “சம்பூர்ண ராமாயணம்” என்ற மேடை நாடகத்தில் நடித்த நடிகர் அனுமந்துவின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் கே பாலசந்தர், இத்திரைப்படத்தில் வரும் காது கேளாத, வாய் பேச இயலாத ஒரு குணச்சித்திரக் கதாபாத்திரத்திற்கு அவரை தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க, அந்தக் கதாபாத்திரத்தை நன்குணர்ந்து, அதற்கு நியாயம் செய்யும் விதமாக தனது அபார நடிப்பை வழங்கி, படத்திற்கு வலு சேர்த்திருப்பார் நடிகர் அனுமந்து.
இதன் மூலத் திரைப்படமான “அடிமகள்” என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகர் சத்யன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசனும், நடிகை ஷீலாவிற்கு இணையாக தமிழில் நடிகை சுமித்ராவும், நடிகை சாரதாவின் கதாபாத்திரத்தில் நடிகை ஷோபாவும், நடிகர் பிரேம் நஸீரின் கதாபாத்திரத்தில் நடிகர் அனுமந்துவும், நடிகர் ஜெஸியின் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்பாபுவும் நடித்திருந்த “நிழல் நிஜமாகிறது” திரைப்படத்தின் இசையை எம் எஸ் விஸ்வநாதன் கவனிக்க, பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
“கம்பன் ஏமாந்தான்”, “இலக்கணம் மாறுதோ” என படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களின் எண்ணிக்கை இரண்டு மட்டுமே. ஆனால் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாய் நின்றிருந்ததும் இவ்விரண்டு பாடல்கள் மட்டுமே என்றாலும் அதுவும் மிகையன்று. நிஜக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவான இந்த நிழலோவியம், 1978ம் ஆண்டு மார்ச் 24 அன்று வெளிவந்து, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று, ஒரு வெற்றிப் படமாக உருவாகியிருந்தது. இன்றும் நடிகர் கமல்ஹாசனின் சிறந்த பத்து படங்களைப் பட்டியலிடச் சொன்னால், அதில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்த திரைப்படமாக இருப்பது இந்த “நிழல் நிஜமாகிறது” என்றால் அதுவும் மிகையன்று.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!