பேட்டரி
விமர்சனம்
தயாரிப்பு - ஸ்ரீ அண்ணாலையார் மூவீஸ்
இயக்கம் - மணிபாரதி
இசை - சித்தார்த் விபின்
நடிப்பு - செங்குட்டுவன், அம்மு அபிராமி
வெளியான தேதி - 29 ஜுலை 2022
நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
த்ரில்லர் சீசன், மருத்துவக் குற்றங்கள் சீசன், தமிழ் சினிமாவில் வந்துவிட்டதோ என ஆச்சரியப்படும் அளவிறகு சமீப காலங்களில் த்ரில்லர் படங்கள்தான் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் இதுவரை சொல்லாத எதையாவது சொல்ல வேண்டும் என படத்தின் இயக்குனர்களும் நிறையவே மெனக்கெடுகிறார்கள்.
இந்தப் படத்தில் பேட்டரி மூலம் கொலை நிகழ்வுகளை மட்டும் வித்தியாசமாகக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மணிபாரதி. த்ரில்லர் படங்கள் ஒரு நாவல் படிப்பது போல பரபரப்பாக நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். பல வெற்றிப் படங்களில் பல இயக்குனர்களுக்காக பல ஆலோசனைகளை வழங்கியவர் இயக்குனர் மணி பாரதி. அவருடைய இயக்கத்தில் வரும் படத்திற்கு இன்னும் தனித்துவமாக யோசித்திருக்கலாம்.
சென்னையில் அடுத்தடுத்துது சில கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகள் அனைத்துமே ஒரே விதமாக செய்யப்பட்டுள்ளன. ஆனால், தடயங்கள் அதிகம் கிடைக்கவில்லை. அதைப் பற்றி புதிதாக சப் இன்ஸ்பெக்டராகப் பதவியேற்கும் செங்குட்டுவன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் உதவி கமிஷனரும் அந்த விசாரணையில் இறங்க, கொலைகளுக்கான குற்றவாளிகளைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அறிமுகப் படத்திலேயே போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு சவாலான விஷயம். அறிமுக நாயகன் செங்குட்டுவன் அதில் ஓரளவு தேறியிருக்கிறார். அவரது உயரமும், உடல்மொழியும் போலீஸ் கதாபாத்திரத்திற்கு 'பிட்'டாகவே இருக்கிறது. அவரது கதாபாத்திரம் பற்றிய சஸ்பென்ஸ் உடையும் போது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
சில படங்களில் இரண்டாம், மூன்றாம் கதாநாயகியாக நடித்த அம்மு அபிராமிக்கு இந்தப் படத்தில் பிரமோஷன். அவர்தான் ஒரே கதாநாயகி. செங்குட்டுவனுக்கும் அவருக்கும் ஜோடிப் பொருத்தம் உயரத்தால் இடிக்கிறது. இருப்பினும் வழக்கம் போல தனது நடிப்பில் சமாளிக்கிறார் அம்மு அபிராமி.
வில்லன்களாக நாகேந்திர பிரசாத், அபிஷேக். படத்தின் மெயின் வில்லன்கள் இவர்கள்தான் என்றாலும் அதிக முக்கியத்துவம் இல்லை. உதவி கமிஷனராக பொருத்தமாக நடித்திருக்கிறார் தீபக். பிளாஷ் பேக் காட்சிகளில் வழக்கம் போல முத்திரை பதிக்கிறார் எம்எஸ் பாஸ்கர்.
சித்தார்த் விபின் பின்னணி இசை படத்திற்குப் பெரிதாக கை கொடுக்கவில்லை. படத்தில் ஓரளவிற்காவது சில தெரிந்த முகங்களை நடிக்க வைத்திருந்தால் அது படத்திற்கு உதவியாக இருந்திருக்கும்.
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைக்கப்படுவது 'பேஸ் மேக்கர்' கருவி. அதில் கூட இந்த அளவிற்கு போலிகளும், அதை வைத்து பெருமளவில் குற்றங்களும் நடக்கிறதா என்பது ஆச்சரியம்தான். மக்களுக்கு அதிகம் தெரியாத ஒரு விஷயத்தை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் மணி பாரதி. ஆனாலும், திரைக்கதையில் ஒரு நேர்த்தி இல்லாதது படத்திற்கு குறையாக அமைந்துவிட்டது.
பேட்டரி - சார்ஜ் குறைவு