இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி பந்தா பண்ணும் பேர் வழிகளுக்கு பாடம் புகட்டும் விதமாக வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் வெத்துவேட்டு! தாஜ்நூரின் இசை, வெத்துவேட்டு படத்தை அதிர்வேட்டாக கவனிக்க வைத்திருப்பது சிறப்பு!
கதைப்படி, மச்சக்காளை எனும் ஹீரோ ஹரீஷ், ஊரில் எதிர்படும் இளம் பெண்களை எல்லாம் அவ என்னோட ஆளு... இவ என்கிட்டே விழுந்துட்டா... என தன் நண்பர்களிடம் தான் அந்த மாதிரி விஷயத்தில் கிங் என எதுவுமே நடக்காமல், எக்கச்சக்க பில்-டப் கொடுத்து வருகிறார். ஒருநாள் வௌியூரில் தங்கி படித்துவிட்டு ஊருக்கு திரும்பும் அழகான ஹீரோயின் மகா எனம் மாளவிகா மேனனையும் பார்த்து, தான் அவரது கதையை முடித்துவிட்டதாக கதைகட்டி விடுகிறார். சந்தர்ப்பமும், சூழ்நிலைகளும் மச்சக்காளை - ஹரீஷ் சொல்வது நிஜம்! என நண்பர்களை நம்ப வைக்கிறது. இது நாயகிக்கும் தெரியவருகிறது.
இந்நிலையில் ஒருநாள் நாயகி கர்ப்பமாகிறார். வீட்டில் உள்ளவர்கள் அதட்டி கேட்டதும், தன் இந்த நிலைக்கு காரணம், மச்சக்காளை தான் என மனம் திறக்கிறார். மகாவின் பெற்றோர் மச்சக்காளையிடம் நியாயம் கேட்க, தான் அதற்கு காரணம் இல்லை... என்கிறார். பஞ்சாயத்து கூடுகிறது, பஞ்சாயத்து தலைவர் ஆடுகளம் நரேன், மச்சக்காளையை மகாவின் கழுத்தில் தாலி கட்ட சொல்கிறார், தட்டிகழிக்க முடியாமல் தாலி கட்டும் மச்சக்காளை தன் மனைவியின் கர்ப்பத்திற்கு காரணம் யார்.? என்று கேட்டு புலம்பி தவிக்கிறார். மச்சக்காளைக்கு விடை தெரிந்ததா.? மகாவின் இந்தநிலைக்கு காரணம் யார்? என்பது புரிந்ததா.? எனும் கதையுடன் வெட்டி பந்தா பேசுபவர்களுக்கு சரியான பாடத்தையும் புகட்டியிருக்கும் படம் தான் வெத்துவேட்டு!
மச்சக்காளையாக ஹரீஷ், நன்றாகவே நடித்திருக்கிறார். ஆட்டம், பாட்டம், வெட்டி பந்தாவில் மட்டுமின்றி ஒரு பைட் சீனிலும் மனிதர் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
மகாலட்சுமியாக மகாவாக மாளவிகா மேனன், தன் முந்தைய விழா, இவன் வேற மாதிரி படங்களை காட்டிலும் வித்தியாசமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
இளவரசு, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக் பாண்டி, கோபால், மணி, மாக்கான், கிரேன் மனோகர், போண்டா மணி, வெங்கல்ராவ், சின்னசில்க் உமா, நந்தகுமார், கம்பம் மீனா, நாஞ்சில் சரண் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தில், பிளாக் பாண்டி கோஷ்டி மட்டும் காமெடி என்ற பெயரில் கடிக்கிறது.
காசியின் ஔிப்பதிவு ஓஹோ, யுகபாரதியின் பாடல் வரிகள் ஆஹா! தாஜ்நூரின் இசையில், வாங்கடி வாங்கடி..., உன்னை நினைத்தாலே..., அடியே செல்ல தங்கம்..., ஆறுகுளம் தேவையில்லை... உள்ளிட்ட ஐந்து பாடல்களும் ஆஹா, ஓஹோ! ஆக்ஷ்ன் பிரகாஷின் சண்டைக்காட்சியும் வெத்துவேட்டுக்கு பெரும் ப்ளஸ்! ஆனாலும் எஸ்.மணிபாரதியின் எழுத்து, இயக்கத்தில் இதுமாதிரி பாதிக்கப்பட்ட பெண்கள் கைகாட்டும் ஆண்களை கட்டி வைக்கும் பஞ்சாயத்தும், ஊரும் எங்கிருக்கிறது.? எனும் கேள்வி எழுவது மட்டும் மைனஸ்!
இதுமாதிரி குறைகளால் அதிர்வேட்டாக ஒலித்திருக்க, ஜொலித்திருக்க வேண்டிய வெத்துவேட்டு, கொஞ்சமே கொஞ்சம் இப்பட டைட்டிலுக்கு ஏற்பவே முடிகிறது!