2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர்
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கார்த்திக் நரேன்
இசை - ஜேக்ஸ் பிஜாய்
வெளியான தேதி - 21 பிப்ரவரி 2020
நேரம் - 1 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

துருவங்கள் 16 படம் மூலம் இளம் வயதில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி, இரண்டாவது படமாக வெளிவந்துள்ள படம்தான் மாஃபியா.

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்தல் ஆகியவற்றை மையமாக வைத்து சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 80களில் இப்படியான கடத்தல் படங்கள் நிறையவே வந்தன. அப்படியான ஒரு கதைதான் இந்தப் படமும், ஆனால், இந்தக் காலத்திற்கு ஏற்றபடி லேசாக மாற்றி மேக்கிங்கில் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

நான்கே முக்கிய கதாபாத்திரங்கள்தான் படத்தில். காதல் காட்சிகள் கிடையாது, டூயட் பாடல்கள் கிடையாது, மொக்கை ஜோக்குகள் கிடையாது என சில கிடையாதுகள் படத்தில் இருக்கின்றன. இருந்தாலும் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படத்தை நம் பொறுமையை சோதிக்காமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் அதிகாரியாக இருப்பவர் அருண் விஜய். அவருடைய சகோதரர் போதைப் பொருள் வாங்கச் சென்ற சமயத்தில் மரணமடையவே, போதைப் பொருள் இல்லாத நகரத்தை உருவாக்க வேண்டுமென நினைப்பவர். அவருடைய மேலதிகாரி, பக்கத்து வீட்டில் வசிக்கும் சமூக சேவகர் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். போதைக் கடத்தலை யாரோ ஒரு முக்கியப் புள்ளிதான் தலைமை ஏற்று நடத்துவதாக அருண் விஜய் நினைக்கிறார். அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி அது பிரசன்னாதான் என்றும் கண்டுபிடித்து விடுகிறார். அவரிடமிருந்து ஒரு லாரி போதைப் பொருளைக் கைப்பற்றுகிறார் அருண். பதிலுக்கு அருண் குடும்பத்தினரைக் கடத்தி வைத்துக் கொள்கிறார் பிரசன்னா. இவர்களது பூனை, எலி விளையாட்டில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இப்படியான படங்களில் இடம் பெறும் சில வழக்கமான காட்சிகள் படத்தில் இருப்பது சுவாரசியத்தைக் குறைக்கிறது. அருண் விஜய், பிரசன்னா இடையே அடிக்கடி பூனை, எலி விளையாட்டு நடக்கும் என்று எதிர்பார்த்தால் அதை ஒரு ஆட்டத்துடன் முடித்துவிட்டு, கிளைமாக்சுக்கு நகர்ந்து விடுகிறார்கள்.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக அருண் விஜய். வித்தியாசமான ஹேர் ஸ்டைல், தாடி, விறைப்பான நடை என அந்தக் கதாபாத்திரத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். ஆனால், எப்போதுமே முகத்தையும் விறைப்பாக வைத்துக் கொள்ளத் தேவையில்லையே ?.

அருண் விஜய்யின் உதவியாளர்களில் ஒருவராக பிரியா பவானி சங்கர். அருண் விஜய் சொல்வதைக் கேட்டு அதை மட்டுமே செய்கிறார். ஒரே ஒரு முறை மட்டும் லேசான காதல் பார்வை பார்க்கிறார். துப்பாக்கி எடுத்து சுட்டுத் தள்ளுகிறார். அத்துடன் அவர் வேலை முடிகிறது.

அருண் விஜய்யின் மற்றொரு உதவியாளராக நடித்திருப்பவரும் கொடுத்த வேலையை சரியாகச் செய்து முடிக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக பரத் ரெட்டி.

பிரசன்னா தான் படத்தின் வில்லன். நடுத்தர மல்டி மில்லியனர் தோற்றத்தில் அசத்துகிறார். அவருடைய குரலே அவருடைய கதாபாத்திரத்திற்கு தனி அடையாளத்தைக் கொடுக்கிறது. எப்போது பார்த்தாலும் சுருட்டு பிடிக்கும்படி வைத்ததைத் தவிர்த்திருக்கலாம்.

ஒரு வீடு, ஒரு குடோன், ஒரு ஸ்டார் ஹோட்டல் அறை என சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே படத்தின் காட்சிகள் அதிகம் நகர்கிறது. சமூக சேவகர் என ஒருவரைக் காட்டும் போதே அவரைக் கொன்று விடுவார்களே என யூகிக்க முடிகிறது.

ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது. கோகுல் பினாய் ஒளிப்பதிவில் படத்திற்கான லைட்டிங், கலர் பொருத்தமாக அமைந்துள்ளது.

போலீஸ் அதிகாரி ஒருவர் பிரசன்னாவிற்கு உதவியாக இருப்பது, பிரசன்னாவைத் தேடி அருண் விஜய் ஹோட்டலுக்குப் போகும் போது அங்கு இன்ஸ்பெக்டர் பரத் ரெட்டி யதேச்சையாக வருவது போலக் காட்டுவது, அருண் விஜய் முதன் முதலில் குடோனில் துப்பாக்கியில் சுட்டுத் தாக்குதல் நடத்தும் போது அந்த சத்தம் கேட்டு கூட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யாருமே வராதது போன்ற சில பல வழக்கமான காட்சிகள் இந்தப் படத்திலும் இருக்கிறது.

கார்த்திக் நரேன் படம் என்பதால் படத்தின் காலை காட்சிக்கே தியேட்டரில் கூட்டம் நிறையவே இருந்தது. அவர்களின் நம்பிக்கையை கார்த்திக் இன்னும் கூடுதலாகக் காப்பாற்றியிருக்கலாம்.

மாஃபியா - பாதி மிரட்டல்

 

மாஃபியா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மாஃபியா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓