3

விமர்சனம்

Advertisement

"காட்டுல இருக்குற எல்லோரும் மிருகமும் இல்ல... நாட்டுல இருக்குற எல்லாப் பேரும் மனுஷனும் கிடையாது..." எனும் மெஸேஜோடு, பிக் ஸ்டுடியோஸ் வழங்க ஏ.எல்.அழகப்பன் தயாரிப்பில், விஜய், எழுத்து - இயக்கத்தில், ஜெயம் ரவி - சாயிஷா ஜோடியுடன் பிரகாஷ்ராஜ், வருண், தம்பி ராமைய்யா, தலைவாசல் விஜய், சண்முகராஜன், வேல ராமமூர்த்தி, ராம்யா, அர்ஜுன், ஷாம்பால்... ஆகியோர் நடிக்க, ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், அவரது 50-வது படமாக வந்திருக்கும் படம் தான் "வனமகன்".

அந்தமான் காட்டிற்கு தனி ஹெலிஹாப்டரில் டூர் போகும் பணக்கார நாயகியும், அவரது தோழர்களும், எக்குத்தப்பாக தங்கள் காரில் விழுந்து அடிபடும் காட்டுவாசி நாயகரை, தாங்கள் காட்டிலாக்கா அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவரது மயக்க நிலையிலேயே யாருக்கும் தெரியாமல் தூக்கி வந்து சென்னையில் சிகிச்சை அளித்து பிழைக்க வைக்கின்றனர். தன் இனம், மொழி இல்லா சூழலில் பித்து பிடித்தவர் போல் திரியும் நாயகர், நாயகிக்கு அவரை சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார்? கெட்டவர் யார்..? என்பதை கற்றுத் தர, நாயகியும் நாயகருக்கு நகரத்து நல்லது, கெட்டதுகளை சொல்லித் தந்து ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்படும் சூழலில், நாயகரை, தேடி வரும் அந்தமான் அதிகாரிகள்., அவரை அப்படியே அள்ளிப் போகின்றனர். அதன்பின், நாயகியும் அவரைத் தேடி அந்தமான் போகிறார். நாயகரும், நாயகியும் மீண்டும் சந்தித்தனரா..? காட்டு மற்றும் நாட்டுத் தடைகளைத் தாண்டி இருவரும் காதலில் சேர்ந்தனரா...? என்பது தான் "வன மகன்" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்.... எல்லாம்!

சாரா எனும் வாசியாக காட்டுவாசியாக ஜெயம்ரவி., நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் காட்டிற்குள் காட்டுவாசியாக அவர் கர்ஜிக்கும் அளவிற்கு, முன் பாதியில் மொழி தெரியாத நாட்டிற்குள், முழித்துக் கொண்டும், முறைத்துக் கொண்டும் திரிவது அவ்வளவு ஈர்ப்பாக இல்லாதது பலவீனம். ஆனாலும் ஆக்ஷன் காட்சிகளிலும், ரம்யாவை அவர் கணவரிடம் சேர்க்க தூக்கிக் கொண்டு ஓடும் சீன்களிலும் மிரட்டியிருக்கிறார் மனிதர்.
காவ்யாவாக கதாநாயகியாக அறிமுகம் சாயிஷா அசத்தல் முகம். பெரிய பணக்கார வீட்டு பெண்ணாக அம்மணி ரவியை மட்டுமல்ல நம்மையும் வசீகரிக்கிறார். நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் ஈர்க்கிறார். வாவ்!

நாயகியின் அப்பாவைக் கொன்று அவரை தன் மகனுக்கு கட்டி வைக்கத் துடிக்கும் பிரகாஷ்ராஜ், அவரது மகன் விக்கிபாக வரும் வருண், சமையல்காரர் பாண்டியாக தம்பி ராமைய்யா, நாயகியின் சித்தப்பாவாக வரும் "தலைவாசல்" விஜய், போலீஸ் ஆபிஸர் சண்முகராஜன், ரவியின் காட்டு தந்தை வேல ராமமூர்த்தி, காம்பயர் ராம்யா, அர்ஜுன், ஷாம்பால்... ஆகியோர் இயக்குனர் சொன்னதை இயல்பாய் செய்திருக்கின்றனர்.

ஸ்டண்ட் சில்வாவின் சண்டை பயிற்சி வன மகனுக்கு வலு கூட்டியிருக்கிறது.
ஆண்டனியின் படத்தொகுப்பில், முன்பாதி பாடாவதி என்றாலும், பின்பாதி பக்கா பகுதி எனலாம்.

எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், சூரிய வெளிச்சத்தில் கருடப் பருந்து பறக்கும் காட்சி உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், அவரது 50 வது படமாக வந்திருக்கும் இந்த, "வனமகன்" படத்தில், கார்கியின் வரிகளில், "முரடா முரடா...", "எம்மம்மா....", "சிலுசிலுவென்று..", "பச்சை உடுத்திய காடு... " பாடல்களும், பின்னணி இசையும் மிரட்டல்!

விஜய்யின் எழுத்து, இயக்கத்தில், ஒரு சில லாஜிக் குறைகள் இருந்தாலும், "மனித இனம் இப்பூமியில் எப்படி தோன்றியதோ.., இன்னமும், அப்டியே வாழும் அந்தமான் காட்டுவாசி மனிதர்களை பேசியிருக்கும் "வன மகன் - ஒரு மாதிரி வரவேற்பிற்குரியவன்!"

 

பட குழுவினர்

வனமகன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி. அப்படம் வெற்றி அடையவே ஜெயம் ரவி ஆனார். 1980ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தவர். எடிட்டர் மோகனின் வாரிசான இவர், தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, பேராண்மை, தில்லாலங்கடி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குநர் ஜெயம் ராஜா இவரது அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் விமர்சனம் ↓