அகிலன் (2023)
விமர்சனம்
தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா
இயக்கம் - கல்யாணகிருஷ்ணன்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர்
வெளியான தேதி - 10 மார்ச் 2023
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
ஒரு திரைப்படத்திற்கு கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு கதைக்களமும் முக்கியம். சினிமாவில் அதிகம் சொல்லப்படாத கதைக்களங்களில் கடலும் கடல் சார்ந்த இடமும் இருக்கிறது. குறிப்பாக, துறைமுகம். பல படங்களில் ஒரு சில காட்சிகளாக மட்டுமே வந்து போன ஒரு இடத்தை இந்தப் படத்தில் முழுமையாகப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் கல்யாணகிருஷ்ணன். கதைக்களத்தோடு கொஞ்சம் கதையையும் சேர்த்திருந்தால் இந்த 'அகிலன்' அகிலம் முழுவதும் பேசப்பட்டிருப்பார்.
சர்வதேச அளவில் கடல் வழியாக பலவிதமான சட்ட விரோதச் செயல்களை ஒரு கும்பல் செய்து வருகிறது. அந்த கும்பலுக்கு சென்னை துறைமுகத்தில் ஒரு ஆளாக இருந்து பல வேலைகளைச் செய்பவர் ஹரிஷ் பெரடி. அவரிடம் அடியாளாக வேலை பார்ப்பவர் ஜெயம் ரவி. ஒரு கட்டத்தில் ஹரிஷ் பெரடியை மீறி அந்த சர்வதேச கும்பலின் தலைவனான தருண் அரோராவை சந்திக்க ஆசைப்படுகிறார். அந்தத் தலைவனது கவனத்தை ஈர்த்து அவனையும் சந்தித்து, ஹரிஷ் பெரடி இடத்தைக் கைப்பற்றுகிறார் ஜெயம் ரவி. தனியாக கப்பலை வாங்கி அதன் மூலம் பொதுச் சேவை செய்யவும் ஆசைப்படுகிறார். அதற்குத் தடையாக பாதுகாப்பு அதிகாரி சிராக் ஜானி இருக்க, தருண் அரோராவும் ஜெயம் ரவிக்குச் சொந்தமான கப்பல் இயங்க விடாமல் தடுக்க அடுத்து என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஆரம்பம் முதல் கடைசி வரை படத்தில் நம்மால் அந்த அளவுக்கு ஒன்றி ரசிக்க முடியாமல் போகிறது. கதையிலும், கதாபாத்திரங்களிலும் ஒரு அழுத்தம் இல்லாமல் இருப்பதே அதற்குக் காரணம். ஆனால், படம் முழுவதையும் தன் தோளில் சுமந்து முடிந்தவரை காப்பாற்றுகிறார் ஜெயம் ரவி. அடியாளாக மட்டும் இல்லாமல் தனது மூளையைப் பயன்படுத்தி எப்படி உயர்வது என அடிமேல் அடி எடுத்து வைத்து அதிரடியாக மேலேறுகிறார் ஜெயம் ரவி. அதிரடி கை கொடுத்த அளவுக்கு கதையும், திரைக்கதையும் அகிலனுக்குக் கை கொடுத்திருந்தால் கைத்தட்டி இருக்கலாம்.
ஜெயம் ரவிக்கு சரியான 'டப்' கொடுப்பவராக துறைமுக பாதுகாப்பு அதிகாரியாக சிராக் ஜானி நடித்திருக்கிறார். ஜெயம் ரவி கதை சொன்னாலும் நம்புகிறார், வில்லன் தருண் அரோரா சொன்னாலும் நம்புகிறார். அதனால், அவரது கதாபாத்திரம் கொஞ்சம் பேலன்ஸ் இழந்து தடுமாறுகிறது.
ஜெயம் ரவியின் காதலியாக பிரியா பவானி சங்கர். துறைமுக காவல் நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டர். ஜெயம் ரவியின் சில திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார். ஏதோ பெரிதாகச் செய்வார் என்று எதிர்பார்த்தால் நான்கைந்து காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். பிளாஷ்பேக்கில் அப்பா ஜெயம் ரவி, அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன்.
சாம் சிஎஸ் பின்னணி இசை சில படங்களில் ரசிக்க வைக்கிறது, சில படங்களில் கத்துகிறது. இந்தப் படத்தில் அடிக்கடி 'டரரரரர்ரர்ர்ர்ரரரரரர' என உச்சஸ்தாயியில் கத்துவதை பின்னணி இசையாக சேர்த்திருக்கிறார்.
படத்தின் கதாநாயகனை ஆரம்பம் முதல் கெட்டவனாகக் காட்டிவிட்டு கடைசியில் அவன் பொது சேவை செய்கிறான் என்பதெல்லாம் 90களில் முடிந்து போன ஒரு அரதப்பழசான பார்முலா. என்னமோ சொல்ல வந்து எதையெதையோ சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.
அகிலன் - ஆகிலன்
பட குழுவினர்
அகிலன் (2023)
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
ஜெயம் ரவி
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி. அப்படம் வெற்றி அடையவே ஜெயம் ரவி ஆனார். 1980ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தவர். எடிட்டர் மோகனின் வாரிசான இவர், தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, பேராண்மை, தில்லாலங்கடி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குநர் ஜெயம் ராஜா இவரது அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது