லக்ஷ்மி
விமர்சனம்
நடிப்பு - பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி தித்யா மற்றும் பலர்.
இயக்கம் - விஜய்
இசை - சாம் சி.எஸ்
தயாரிப்பு - பிரமோத் பிலிம்ஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ்
தமிழ் சினிமாவில் இசையும், நடனமும் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். நடனம் இல்லாத படங்கள் கூட வந்திருக்கின்றன. ஆனால், நடனத்தையே மையமாக வைத்த படங்கள் அபூர்வமாகத்தான் வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடனத்தை மையமாக வைத்து வந்துள்ள படம்தான் லக்ஷ்மி.
தமிழ் சினிமாவில் நடனம் என்றாலே உடனே ஞாபகத்திற்கு வருவது பிரபுதேவா தான். ஆனாலும், படத்தில் அவர் ஒரே ஒரு பாடலில்தான் இறங்கி நடனமாடுகிறார். மற்றபடி குழந்தைகளுக்கு நடனமாடக் கற்றும் தரும் குருவாக நடித்திருக்கிறார்.
2013ம் ஆண்டு பிரபுதேவா நடித்து ஹிந்தியில் எனிபடி கேன் டான்ஸ் என்றும், தமிழில் ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் டப்பிங் ஆகி வெளிவந்த படத்தையே பட்டி, டிங்கரிங், கட்டிங், வெட்டிங், ஒட்டிங் என செய்து லக்ஷ்மி ஆக மறு அவதாரம் எடுக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய். ஹாலிவுட் படங்களைத் தான் காப்பி அடித்து எடுப்பார் என்று பார்த்தால் இந்தியப் படங்களையே காப்பி அடித்து எடுக்க ஆரம்பித்துவிட்டார்.
படத்தின் இடைவேளை வரைதான் ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வு கொஞ்சமாவது இருக்கிறது. அதன்பின், ஒரு டிவி நடன ஷோவைப் பார்ப்பது போலத்தான் உள்ளது.
நடனம் என்றாலே பிடிக்காத அம்மா ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படிப்பட்டவருக்குத் தூங்கி எழுந்த உடனே நடனமாடத் துவங்கும் மகள் சிறுமி தித்யா. ரெஸ்டாரென்ட் நடத்தும் பிரபுதேவாவுடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார் தித்யா. அம்மாவுக்குத் தெரியாமல் பிரபுதேவாவை அப்பா என பொய் சொல்லி டான்ஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார் தித்யா. இந்திய அளவிலான டிவி நடனப் போட்டித் தேர்வில் சரியாக நடனமாடாததால், அந்த அகாடமியிலிருந்து வெளியேற்றப்படுகிறார் தித்யா. இதற்காக அகாடமிக்கு நியாயம் கேட்கப் போகும் பிரபுதேவாவைப் பார்த்து அகாடமியில் உள்ளவர்களும் டிவி குழுவினரும் அதிர்ச்சியடைகிறார்கள். அதன் பின், ஆம்..... நீங்கள் நினைப்பது சரிதான்... பிரபுதேவா மீண்டும் பாட்ஷாவாக திரும்பி வந்து என்ன செய்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் பிரபுதேவாவைக் காட்டிலும் சிறுமி தித்யாவிற்காகத்தான் பார்க்க வேண்டும். தமிழ் தெரியாமல், சிறு முகபாவங்களைக் கூட கச்சிதமாக வெளிப்படுத்தி, நடனத்தில் புயலாகவும், சுனாமியாகவும் சீறிப் பாய்கிறார்.
சிறுவர் சிறுமியர் நடிக்கும் படம் என்றால் காட்சிகளில் ஒரு கண்ணியம் இருக்க வேண்டாமா?. சிறுமி தித்யாவின் பக்கத்தில் உட்காருவதற்கும், அவர் பக்கத்தில் நடனமாடுவதற்கும் இரண்டு சிறுவர்களுக்கு இடையில் போட்டி என்று கொச்சைப்படுத்தலான காட்சிகள் எதற்கு இயக்குனர் விஜய் அவர்களே ?. அந்தக் காட்சிகள் படத்திற்கு எந்த விதத்திலும் தேவைப்படவில்லையே ?.
தான் ஒரு சிறந்த நடன இயக்குனர், நடனக் கலைஞர் மட்டுமல்ல நடிகரும் கூட என்று பிரபுதேவா இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் பிரிவுக்கான காரணம் வசனங்களில் மட்டுமே வந்து போவதால் அவர்களின் பிரிவு அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை.
ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மாவாக நடித்தால் பெரிய பெயர் கிடைக்கும் என நினைத்து இந்தப் படத்திலும் நடித்துவிட்டார் போலிருக்கிறது. அம்மா கதாபாத்திரம் கூட உணர்வு ரீதியாக வடிவமைக்கப்பட்டிருந்தால் மக்களிடம் போய்ச் சேரும் என்பதை இந்தப் படத்தின் மூலம் புரிந்து கொண்டிருப்பார்.
டிவி ஷோ சம்பந்தப்பட்ட காட்சிகள் அமெச்சூர்தனமாக இருக்கின்றன. சாம் பால் அடிக்கடி டிஆர்பி, டிஆர்பி எனப் பேசுகிறார். அவர் சேனல் ஓனரா அல்லது சேனல் ஹெட்டா, நிகழ்ச்சி இயக்குனரா என்பதெல்லாம் இயக்குனருக்குத்தான் தெரியும். கோவை சரளா, கருணாகரன் செய்வது காமெடி என்று நம்புவோமாக.
பிரபுதேவாவை எதிர்த்து நடனமாட வேண்டும் என சல்மான் யூசுப் கான் என்பவரைத் தேடிப் பிடித்திருக்கிறார்கள். பிரபுதேவாவின் உதவியாளராக சோபியா பொறாமையான அம்மாவாகவும் நடித்திருக்கிறார். சென்னை, மும்பை இரு நடனக் குழுக்களில் இருக்கும் சிறுவர்கள், சிறுமியர்கள் அற்புதமாக நடனமாடுகிறார்கள்.
ஒரு டிவி ஷோ, அதற்கான போட்டி, தடங்கல், பொறாமை, வெற்றி என டெம்ப்ளேட் ஆன திரைக்கதையில் பெரிய விறுவிறுப்பு இல்லை. எப்படியும் கடைசியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால், வெற்றி பெறுபவர் எப்படி வெற்றி பெறுவார் என்பதில்தான் திரைக்கதையில் பரபரப்பு இருக்க வேண்டும். சிறுவர், சிறுமியரை மையப்படுத்திய படம் என்பதால் அதுவும் சிறுபிள்ளைத்தனமாகவே அமைக்கப்பட்டுள்ளது.
சாம் சி.எஸ். இந்தப் படத்திற்கு இசையமைப்பதற்கு முன்பு குலேபகாவலி படத்தின் குலேபா பாடலை ஒரு முறை கேட்டாவது, பிரபுதேவா படத்தின் பாடல்களுக்கு எப்படி இசையமைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டிருக்கலாம்.
பிரம்மாண்டமான ஒரு அரங்கில் பாதிப் படத்தை எடுத்துவிட்டு பிரம்மாண்டமான இந்தியப் படம் என்கிறார்கள். கதை, திரைக்கதை தான் ஒரு படத்தின் கரு என்பது அந்தப் பெயரிலேயே படத்தைக் கொடுத்துப் புரிந்து கொண்ட இயக்குனர் விஜய்க்கு இந்த லக்ஷ்மி அதை மீண்டும் புரிய வைப்பாள்.
லக்ஷ்மி - தேடி வந்தால் நல்லது.
லக்ஷ்மி தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
லக்ஷ்மி
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்