Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

தாண்டவம்

தாண்டவம்,Thandavam
07 அக், 2012 - 18:03 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தாண்டவம்

   

தினமலர் விமர்சனம்



"தெய்வத்திருமகள்" திரைப்படத்திற்குப்பின் விக்ரம், இயக்குநர் விஜய், அனுஷ்கா கூட்டணியில் தடை பல கடந்து ஒரு வழியாக ஒய்யாரமாக திரைக்கு வந்திருக்கும் படம்தான் "தாண்டவம்!" "சீயான்" விக்ரம் சின்சியராக, சீரியஸ்ரோலில் நடித்திருக்கும் படங்களில் தாண்டவமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது!

கதைப்படி லண்டனில் வசிக்கும் பார்வையற்ற விக்ரம், ஒரு தேவாலயத்தில் இசை கோர்ப்பாளராக ஜெபம் செய்யும் நேரங்களில் பணிபுரிவதோடு, பல நேரங்களில் சிலரை துரத்தி துரத்தி கொலையும் செய்கிறார். பார்வையற்றவர் என்றாலும் மிகவும் புத்திசாலியான அவர், கொலை செய்ய புறப்படும் சமயங்களில் எல்லாம் அவருக்கு வா‌டகை டாக்ஸி ஓட்டி வந்து வகையாக போலீசில் சிக்கி கொள்ளும் கேரக்டர் சந்தானத்திற்கு! ஒருகட்டத்தில் சந்தானத்தின் மூலம் விக்ரம் அடையாளம் காட்டப்பட, நாசர் தலைமையிலான ‌லண்டன் போலீஸ் டீமின் சந்தேக வளையத்திற்குள் சாட்சியங்களுடன் சிக்குகிறார் விக்ரம். இதுஒருபுறமென்றால் மற்றொரு பக்கம் எக்கோ லொகேசன் எனும் ஒலியை பயன்படுத்தி தன் காதுகளையே கண்களாக்கி பார்க்கும் திறன் கொண்ட புத்திசாலி விக்ரம் மீது போலீஸ் ஆபிஸர் நாசரின் நண்பரும், டாக்டரின் மகளுமான லண்டன் அழகி எமி ஜாக்ஸனுக்கு காதல்! கட்டுக்கடங்காத அந்த காதலை எமி வெளிப்படுத்தும் தருவாயில் விக்ரமின் கொலைகளும், அதற்கான நியாயமான காரணங்களும் வெளிவருகின்றன!

இந்தியாவின் தலைநகரம் டில்லியில் "ரா" போலீஸ் பிரிவில் உயர் அதிகாரியாக ஆபத்தான பதவியில் அழகான மனைவி அனுஷ்காவுடன் வாழும் விக்ரம், லண்டன் வரக்காரணம்? அவரது அம்சமான கண்களும், அழகிய மனைவியும் பறிபோக காரணம்? விக்ரம் கொலையாளியாக திரியக் காரணம்....? என ஏகப்பட்ட காரணங்களுக்கு தாண்டவம் படத்தின் மீதிக்கதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது!

விக்ரம், லண்டனில் கண் தெரியாத கெனியாகவும் சரி, இந்தியாவில் "ரா" பிரிவு போலீஸ் உயர் அதிகாரியாக மிடுக்கான பார்வை, துடுக்கான நடை, உடை, பாவனை என்று வலம் வரும் சிவக்குமார் பாத்திரத்திலும் சரி, வழக்கம் போலவே தன் நடிப்பை வாரி வழங்கி பாத்திரத்தை பளிச்சிட செய்திருக்கிறார். அதுவும் அனுஷ்காவுடன் கல்யாண காட்சிகளிலும், முதலிரவிற்காக காத்திருக்கும் காட்சிகளிலும் பலே சொல்ல வைக்கிறார் விக்ரம் என்றால் மிகையல்ல! அதேநேரம் "டயட்" எனும் பேரில் உடம்பை ஓவராக இளைத்து, அதனால் முகமும் சற்றே களைத்துபோன மாதிரியே தெரிவது அவ்வளவாக நல்லாயில்லை.., விக்ரம் என்றும் சொல்ல வைக்கிறது!

அனுஷ்கா, எமிஜாக்சன், லட்சுமிராய் என ஏகப்பட்ட நாயகிகள். எல்லாரையும் ஓரங்கட்டிவிடுகிறார் "நான் உன் அம்மாடா..." என்று திருமணமே வேண்டாம் என "எஸ்" ஆகும் விக்ரமிற்கு காதும் காதும் வைத்தமாதிரி திருமணத்தை நடத்தி முடிக்கும் சரண்யா பொன்வண்ணன்!

விக்ரம், கூட இருந்தே குழிபறிக்கும் வில்லன் ஜகபதிபாபு, இலங்கை தமிழ்பேசியபடி, லண்டன் போலீஸ் அதிகாரி வீரகத்தியாக வரும் நாசர், விக்ரமின் சீனியர் சாயாஜி ஷிண்டே, மினிஸ்டர் கோட்டா சீனிவாசராவ், ஒரு சில சீன்களில் பார்வையற்ற விக்ரமிற்கு எகோ லொகேஷன் பயிற்சி தரும் டேனியல் கிஷ், தன் "நச்-டச்" காமெடியால் முன்பாதி படத்தை முடிந்த வரை போரடிக்காமல் நகர்த்தும் சந்தானம் உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர்!

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும்(கவனிக்கவும், நா.முத்துக்குமாரின் நீ பாதி கதவு, நான் பாதி கதவு... எனும் பாடல் தவிர மற்ற பிற பாடல்களும் அதன் இசையும் அல்ல) படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றன. ஆண்டனியின் எடிட்டிங் இதில் மிஸ்ஸிங்! நம்பமுடியாத லாஜிக் இல்லாத கதை, நான்கைந்து படங்களை ஒரே நேரத்தில் பார்த்த திருப்தியை தருவது பலமா? பலவீனமா? என்பதை இயக்குநர் விஜய் தான் சொல்ல வேண்டும்!!

ஆக மொத்தத்தில், "தாண்டவம், கோர தாண்டவமும் இல்லை, ஆனந்த தாண்டவமும் இல்லை! விஜய் - விக்ரம் தாண்டவம்! எனத் தாண்டுவோம்!!"




-------------------------------------------------


குமுதம் விமர்சனம்


டாப் ரா ஏஜெண்டாக இருக்கம் விக்ரம், லண்டனுக்கு சென்று ராணுவ ரகசியம் கை மாறுவதை கண்டுபிடிக்கும்போது நடந்த குண்டு வெடிப்பில் கண் போன்ற தன் மனைவியையும், தன் கண்களையும் பறி கொடுக்க எதிரிகளை பந்தாடுவது தான் தாண்டவம். ( அது சரி, இந்த கதைக்காகவா இரண்டு பேர் சட்டையை எல்லாம் கிழித்து கொண்டார்கள்?)

கண் தெரியாத பாத்திரம் மூலம் காசியில் உருக்கத்தை பிழிந்த விக்ரம், இதிலே அதே கண் பார்வைக் குறைபாட்டை ஒலியால் வெல்கிறார். அதாவது ஓசை எழுப்பி அந்த ஒலியலைகளை உணர்ந்து எதிரில் இருக்கும் எதன் மீதும் மோதாமல் இரவில் கூடப் பறந்து செல்லும் வெளவால் பயிற்சி ஏஜெண்டாக காட்டும் மிடுக்காகட்டும், கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு அனுஷ்காவை பார்த்ததும் ஏற்படும் பிடிப்பாகட்டும்,  கண் தெரியாமல் போன பிறகு எதிரிகள் ஒவ்வொருவரையும் திட்டம் போட்டு தீர்க்கும் துடிப்பாகட்டும் விக்ரம் ஸ்டைலிஷ் (இயக்கம் விஜய்) சிக்ஸ் பேக்கில் உடம்பை கட்டுக்கோப்பாக விக்ரம் வைத்திருந்தாலும் க்ளோஸப் காட்சிகளில் முகத்தில் வயது தெரிகிறது. ஜாக்கிரதை  நாய்க்குக் குடை கொடுத்து விட்டு, மழையில் நனையும் ஜிலீர் காட்சியில் அனுஷ்கா தோன்றும்போதே தியேட்டரில் கைத்தட்டுகிறார்கள். தமிழர்கள் காய்ந்து கிடக்கிறார்கள் என்பது புரிகிறது.

அனுஷ்கா, கண் டாக்டராம். ஆனால், அது விக்ரமுக்கு தெரியாதாம். விக்ரம், ரா ஏஜென்டாம்,ஆனால் அது அனுஷ்காவுக்கு தெரியாதாம். இப்படியெல்லாம் காதில் புய்ப்பம் சுற்றினாலும் அந்த மௌனராக காதல் செமை டேஸ்ட். அந்த கவிதை போன்ற காட்சிகளில் விக்ரம் டயலாக் பேசாமலே ஸ்கோர் செய்கிறார். லண்டனுக்கெல்லாம் விமானம் ஏறாமல் இந்த காதலே படம் முழுக்க இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஹிஹி, அனுஷ்காவின் தங்கச்சியாக சில காட்சிகளில்  தலை காட்டும் அந்த குட்டி யாருங்கோவ்? அடுத்த ஹீரோயின் நீங்கதாங்கோய்.

எமி ஜாக்ஸன் அழகு பதுமையாக கேட்வாக் போய் வருகிறார்.

விக்ரமின் நண்பனாக வரும் ஜெகபதிதான் (இல்ல கஜபதியா?) வில்லன் என்பது சுலபமாக தெரிந்து விடுகிறது.

லண்டனில் டாக்ஸி டிரைவராக சந்தானம். ஒவ்வொரு முறை கொலை நடக்கும்போதும் சந்தானம் சம்பந்தமில்லாமல் மாட்டிக்கொள்ள, போலீஸ் அதிகாரி நாஸர், போன தடவை விசாரையிலயும் இதே தானே நீ சொன்னே? என்று மிரட்ட நீங்களும் இதே கேள்வியை தானே கேட்டீங்க கொஸ்டினை மாத்தி கேளுங்க. வெரைட்டியா பதில் சொல்றேன். என்று சந்தானம் கூறுவது புன்னகைக் கீற்று.

சரண்யா, பட்டாபி பாஸ்கர், தம்பிராமய்யா மூன்று சிங்கங்களையும் தீப்பெட்டிக்குள் அடக்கியிருக்கிறார்கள். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் லண்டனும், தமிழக கிராமமும் மனதை அள்ளுகின்றன. ஆனால் அந்த குண்டுவெடிப்பு காட்சியை சி.ஜி.யில் காட்டி கடுப்பேத்தியிருக்க வேண்டாம்.

ஜி.வி.பிரகாஷின் யாரடி மோகினி, உயிரின் உயிரே இரண்டு பாடல்களும் தேன். ஆர். ஆர்ரில் விக்ரமின் காது செவிடாகும்போது நம்முடைய காதையும் பஞ்சாரக்கத்தான் வேண்டுமா?

ஆனந்த தாண்டவம் பாதி. ருத்ர தாண்டவம் மீதி

நன்றி: குமுதம்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

தாண்டவம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in