4

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன்
இயக்கம் - ஷங்கர்
இசை - ஏஆர் ரகுமான்
தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 4/5

உலக அளவில் ஹாலிவுட் படங்களுக்கு என இருக்கும் பெயரே வேறு. அவர்கள் தரத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால், அப்படிப்பட்ட ஹாலிவுட்டிற்கே சவால் விடும் இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிலும் இருக்கிறார்கள் என்பதை இனி நாமும் பெருமைப்பட்டு சொல்லிக் கொள்ளலாம்.

தமிழ் சினிமாவை உலக அளவில் தலைநிமிர வைக்கும் படமாக 2.0 இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கற்பனைக்கும் எட்டாத காட்சிகள், எப்படி இப்படியெல்லாம் செய்தார்கள் என வியக்க வைக்கும் விஎப்எக்ஸ் காட்சிகள், என விஷுவலாக மிரட்டி இருந்தாலும் இந்த உலகத்திற்கும் ஒரு பெரிய வேண்டுகோளை வைக்கும் படமாக 2.0 அமைந்திருக்கிறது.

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் சேர்த்துதான் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நாமும் உணரும்படியான படம்தான் இது.

இயக்குனர் ஷங்கர் இதுவரை இயக்கிய படங்களைப் பார்த்தே இந்தியத் திரையுலகம் மிரண்டிருக்கிறது. இப்போது 2.0 படத்தைப் பார்த்த பிறகு இன்னும் அதிசயத்துப் போவார்கள். 2.0 மட்டுமல்ல 3.0, 4.0....என அடுத்தடுத்து எத்தனை பாகங்கள் வந்தாலும் பார்ப்பதற்கு நம் ரசிகர்கள் தயாராகவே இருப்பார்கள்.

செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் பறவை இனங்களுக்கு பாதிப்பு வருகிறது என பறவையியல் வல்லுனர் ஆன அக்ஷய்குமார், செல்போன் கம்பெனிகளுக்கு குறைவான அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், அலைவரிசையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார். ஆனால், அரசு அதை ஏற்க மறுக்கிறது. நீதிமன்றத்தை நாடி அங்கும் தோற்றுப் போகிறார். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின் ஆவியாக (?) வந்து பறவைகளின் சக்தியுடன் பறவை மனிதனாக மாறி மக்கள் பயன்படுத்தும் செல்போன்களை காணாமல் போகச் செய்கிறார். தன்னை எதிர்த்தவர்களையும் கொலை செய்கிறார். அது பற்றி கண்டுபிடிக்க அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி ரோபோ விஞ்ஞானி ரஜினிகாந்த், சிட்டி ரோபோவின் 2.0 வெர்ஷனை உருவாக்குகிறார். சிட்டி, பறவை மனிதனை அழித்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடிகர்களின் நடிப்பை விட காட்சிகள்தான் நம்மை கபளீகரம் செய்கின்றன. 3 டி- யில் வேறு படத்தைப் பார்ப்பதால் கண்கள் பிரம்மாண்டமாக விரிந்து நம்மை அந்த விஷுவல் மேஜிக்கை ரசிக்க வைக்கின்றன. இந்தப் படத்தைப் பார்த்தால் 3டியில் மட்டுமே பார்க்க வேண்டும். அப்போதுதான் அதற்காக படக்குழுவினர் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பது தெரியும்.

விஞ்ஞானி வசீகரன், சிட்டி 2.0 வெர்ஷன் என ரஜினிகாந்த். வழக்கம் போலவே அவருடைய ஸ்டைலான நடிப்பில் நம்மை கொள்ளை கொள்கிறார். அவர்களை விட கிளைமாக்சில் கொஞ்ச நேரமே வரும் கம்ப்ரெஸ்டு வெர்ஷன் 3.0 தனி ஸ்டைலில் அசத்துகிறது. அடுத்து 3.0 எடுப்பதற்கு இப்போதே இயக்குனர் ஷங்கர் கதையைத் தயார் செய்துவிட்டார் போலிருக்கிறது.

வசீகரனின் பெண் உதவியாளராக நிலா என்கிற ரோபோட் ஆக எமி ஜாக்சன். ஏற்கெனவே பார்ப்பதற்கு பொம்மை மாதிரி இருப்பார். இந்தப் படத்தில் நிஜ ரேபோட் ஆகவே மாறிவிட்டார். இப்படி ஒரு வாய்ப்பு எந்த ஒரு தமிழ் நடிகைக்கும், இந்திய நடிகைக்கும் கிடைக்கவில்லையே என்று யோசிக்க வைக்கவில்லை. எமியைத் தவிர இந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரும் சிறப்பாக செய்திருக்க முடியாது. இவர் செய்யும் நகைச்சுவையை இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்திருக்கலாம்.

படத்தின் வில்லன் என அக்ஷய்குமாரைச் சொல்ல முடியாது. வெட்டிப் பேச்சுக்கெல்லாம் அடிக்கடி செல்போனைப் பயன்படுத்தும் நாம்தான் வில்லன்கள். செல்போன் பயன்பாட்டைக் குறையுங்கள், பறவைகளையும் வாழவிடுங்கள் என்ற நல்லெண்ணத்துடன் போராடுகிறார் அக்ஷய்குமார். பிளாஷ்பேக்கில் வயதான பறவையியல் வல்லுனராக உருக வைக்கிறார். பின்னர், பறவை மனிதனாக (பேயாக) மாறி உலுக்கி எடுக்கிறார்.

வசீகரன் ரஜினிகாந்தை எதிர்க்கும் சுதன்ஷு பான்டே, அமைச்சர் கலாபவன் ஷாஜோன் ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் குறிப்பிட வைக்கிறார்கள்.

ஏஆர் ரகுமான் பின்னணி இசையில் மேலும் பிரமிப்பூட்டுகிறார். படத்தில் புல்லினங்காள் பாடல் மட்டுமே கொஞ்ச நேரம் வருகிறது. எந்திர லோகத்து பாடலை படம் முடிந்த பின் சேர்த்திருக்கிறார்கள். படம் அதோடு முடிந்தது என எழுந்துவிடாதீர்கள். அதன்பின் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத் தொகுப்பு, முத்துராஜின் அரங்க அமைப்பு மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தில் குறிப்பிட வேண்டியவர்கள். குறிப்பாக விஎப்எக்ஸ் வேலையைச் செய்தவர்கள் ஒரு தமிழ்ப் படத்தை ஹாலிவுட்டை மிஞ்சும் அளவிற்குக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்வதைவிட ஒரு தமிழ்ப் படத்தை உலக அளவில் பேச வைக்கும் படமாகக் கொடுத்தற்கு படக்குழுவினரைத் தாராளமாகப் பாராட்ட வேண்டும். இனி, தமிழ் சினிமாவை 2.0 படத்திற்கு முன், பின் எனப் பிரித்துப் பேசுவார்கள்.

பாகுபலி படத்தையே பார்த்து பிரமித்த நமக்கு அதைவிட பன்மடங்கு பிரமிப்பை இந்தப் படம் தரும். குழந்தைகளுடன் பார்த்து ரசிக்கலாம்.

2.0 - சக்சஸ்புல் வெர்ஷன்!

 

2.0 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

2.0

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

ரஜினிகாந்த்

1950-வது வருடம் டிசம்பர் 12-ந்தேதி பிறந்தவர் ரஜினி. பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினி நடிப்பு தாகத்துடன் சென்னை வந்து சினிமா வாய்ப்புக்காக அலைந்தபோது, 1975ம் ஆண்டு தான் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை வில்லனாக அறிமுகம் செய்தார் கே.பாலசந்தர். அதோடு ஏற்கனவே சிவாஜி என்ற பெயரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்ததால் சிவாஜிராவ் என்ற பெயர் அவருக்கு சரிவராது என்று ரஜினிகாந்த் என்றும் மாற்றி வைத்தார் பாலசந்தர்.


அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்தாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அவர், முதல் படத்திலேயே ரசிகர்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்ததால், அவரது நடிப்புக்கு வரவேற்பு ஏற்பட்டது. பின்னர் சில படங்களில் வில்லனாக நடித்த ரஜினி, அதையடுத்து ஹீரோவாக அவதரித்தார். சில படங்களிலேயே அவருக்கென்று ஒரு தனி பாணி உருவாகியதால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் பெற்றார். அப்படி சினிமாவில் நடிக்க வந்த ரஜினி இன்றுவரை முடிசூடா மன்னராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த மன்னனுக்கு இன்று(டிச., 12ம் தேதி) 69வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு அவரது லிங்கா படமும் வெளிவர இருக்கிறது. அதனால் இந்தாண்டு ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.

மேலும் விமர்சனம் ↓