Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஐ,I
30 ஜன, 2015 - 12:28 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஐ

தினமலர் விமர்சனம்


பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கரின் மற்றுமொரு பிரமாண்ட படைப்பு, வித்தியாசம் என்றால் விக்ரம்., என்பதற்கு சான்றாக வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம், இசையால் வசமாகாத இதயத்திலும் வாசம் செய்யும் ஏ.ஆர்.ரகுமானின் இசை, நீண்ட இடைவெளிக்குப்பின் பி.சி.ஸ்ரீராமின் பிரகாசமான ஒளிப்பதிவு, இவை எல்லாவற்றிற்கும் மேல் மெகா பட்ஜெட் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரனின் தயாரிப்பு... என ஏகப்பட்ட சிறப்புகளுடன் வெளிவந்திருக்கிறது ஐ.


சின்னதாக ஒரு ஜிம்மை நடத்திக் கொண்டு மிஸ்டர் மெட்ராஸ் ஆக வேண்டும் மிஸ்டர் இந்தியா ஆக வேண்டும் எனும் பெரிதான லட்சியங்களுடன் வெயிட் லிப்ட்டும், பாடி பில்டப்புமாக சென்னை தமிழ் பேசிக் கொண்டு திரியும் லீ எனும் லிங்கேசன் விக்ரம், தன் ஆசைபடியே தடை பல கடந்து மிஸ்டர் மெட்ராஸ் ஆகிறார். கட்டுடலும், கம்பீரமுமாக திரியும் விக்ரமை ஒருநாள் அவரது நண்பர் சந்தானம், விக்ரமுக்கு பிடித்த மாடல் அழகி தியா எனும் நாயகி எமி ஜாக்சனின் பாதுகாப்பிற்காக விளம்பர பட ஷூட்டிங் ஒன்றிற்கு அழைத்து போக, அங்கு விக்ரமின் கைமாறு கருதாத அன்பை கவனத்தில் கொள்ளும் எமி, தன் சக மாடல் நடிகர் ஜானின் செக்ஸ் டார்ச்சர் பொறுக்க முடியாமல் ஜானுக்கு போட்டியாக விக்ரமை பெரிய மாடலாக்கிட சீனாவிற்கு ஒரு பெரும் விளம்பர படத்திற்காக கூட்டி போகிறார். மிஸ்டர் இந்தியா ஆசையை துறந்து விக்ரமும் சீனா சென்று எமியுடன் இணைந்து நடிக்கிறார்.


ரொம்பவும், ரொமான்ஸ் விளம்பர படமான அதில் பாடி பில்டர் விக்ரமுக்கு தன் இஷ்ட மாடல் நடிகை தியா-எமியுடன் இணைந்து இஷ்டப்படி கட்டிப்பிடித்து நடிக்க கூச்சமாகவும், தயக்கமாகவும் இருக்கிறது அவரது கூச்சத்தை போக்கிட, எமியை அந்த விளம்பர பட இயக்குநர், விக்ரமை நிஜமாக காதலிப்பது போல் நடி என அட்வைஸிக்கிறார். இதற்கு முதலில் மறுக்கும் எமி, விக்ரம் ஒழுங்காக நடிக்கவில்லை என்றால், தான் மீண்டும் ஜானுடன் இணைந்து நடிக்க வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்படும் என்பதால்., அந்த விரும்பதகாத சூழலை தவிர்க்க விரும்பி விக்ரமை நிஜமாக காதலிப்பது போல் நடிக்கிறார்.


ஆரம்பத்தில், நான் கூவம் நீங்கள் கோபுரம்.. என எமியிடம் காதலிக்க மறுக்கும் விக்ரம், ஒருகட்டத்தில், தன் இஷ்ட தேவதையே தன்னை காதலிப்பதாக தெரிந்ததும் நம்பமுடியாது... நம்பாமலும் இருக்க முடியாது... டபுள் சந்தோஷத்தில் சகஜமாக இணைந்து நடிக்கிறார். அந்த விளம்பர படம் இயல்பாக வௌிவந்து அந்நிறுவன வியாபாரம் பெருக பெரிதும் உதவுகிறது. இதற்குள் விக்ரம் - எமிக்கிடையே மெய்யாலுமே காதலும் மலருகிறது.


அதன்பின் ராசியான ஜோடியான விக்ரமும், எமியும் மீண்டும் மீண்டும் ஜோடி சேர்ந்து மாடலிங் உலகில் கொடி கட்டி பறக்கின்றனர். இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார் ஜான். அவரை மாதிரியே விக்ரம் மிஸ்டர் மெட்ராஸ் ஆனதால் பாதிக்கப்பட்டிருக்கிறார் பாடிபில்டர் பட்டினபாக்கம் ரவி.


விக்ரம் - எமியின் நிஜக்காதலால், விக்ரம் மீதான தன் ஒரு தலைக்காதல் பாதிக்கப்பட்ட வருத்தத்தில் இருக்கிறார் விக்ரமின் காஸ்ட்லி மேக்கப் மென் அண்ட் வுமன், நச்சு தன்மையுள்ள குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்து, அதுப்பற்றி தொலைக்காட்சிகளில் பேட்டியும் கொடுத்த விக்ரமால் பெரிதும் நஷ்டமடைகிறார் விக்ரமை வளர்ந்துவிட்ட தொழில் அதிபர் ராம்குமார்(நடிகர் திலகத்தின் மூத்த வாரிசேதான்...), எமி ஜாக்சனின் பேமிலி டாக்டர் சுரேஷ் கோபிக்கு விக்ரமால் எமி மீது தனக்கு இருக்கும் வயதுக்கு மீறிய காதல் நிறைவேறாமல் போகும் வருத்தமும் இருக்கிறது.


இந்த ஐந்து பேரும் சேர்ந்து வெளி உலகுக்கு தெரியாமல் விக்ரமை ஒழித்துகட்ட போடும் திட்டம் தான் ஐ எனும் வைரஸ்! சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்கப்படும் ஐ வைரஸ், இந்த ஐவரால் விக்ரமின் உடம்பிற்குள் அவருக்கே தெரியாமல் ஊசி மூலம் ஏற்றிவிடப்பட, விளம்பரப் படவுலகில் முடிசூடா மன்னனாக இருந்த விக்ரம் முடி இழந்து முகம் இழந்து, பல் இழந்து, சொல் இழந்து, கூன் விழுந்து..., கொடூரமாக மாறுகிறார். எமியுடன் திருமணம் நடக்க இருக்கும் தருவாயில் கார் விபத்தில் இறந்ததாக கணக்கு காட்டிவிடடு, தன் பால்ய சிநேகிதன் சந்தானத்தின் உதவியுடன், தன் இந்த நிலைக்கு காரணமான ஐவரையும் அவர்கள் பாணியிலேயே கொலை செய்ய பிளான் செய்து நிலைகுலைய வைக்க எடுக்கும் அவதாரமும் ஆக்ரோஷமும் தான் ஐ படம் மொத்தமும்!


விக்ரம் வழக்கம்போலவே வித்தியாசமும் விறுவிறுப்பும் காட்டி அதற்கும்மேல... கிட்டத்தட்ட உயிரையும் கொடுத்து நடித்திருக்கிறார். ஜிம்மில் ஆரம்பத்தில் பளு தூக்கும் கம்பியின் இருபுறமும் ஆஜானுபாகுவான ஆட்கள் தொங்க, அவர் பாடி பில்டர்களை அடிக்கும் அதிரடி ஃபைட்டில் தொடங்கி கூன் முதுகுடன் ஓடும் ரயிலில் மாடல் ஜானுடன் சண்டை போடுவது வரை... ஆக்ஷனில், ஜாக்கி சானாக தூள் பறத்தியிருக்கிறார். ஆக்ஷன் படமென்றாலும் ஷங்கர் படமென்பதால் ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லை. எமியுடன் காதல் காட்சிகளிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் மனிதர். பாடல் காட்சிகளிலும் விக்ரம் பளிச்! ஒருத்தன் வாழ்ந்தால் யாருக்கும் பிடிப்பதில்லை... எனும் பஞ்ச் வசனங்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். ஒவவொரு கெட்-அப்பிலும் விக்ரம் உயிரை கொடுத்து நடித்திருப்பது அவரது நடை-உடை-பாவனைகளில் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிவது ஐ யின் பெரும் பலம்.


எமிஜாக்ஸன் இங்கிலாந்து பெண்ணா, இந்திய நடிகையா? எனக்கேட்கும் அளவிற்கு இயல்பாக, இளமையாக, இனிமையாக இருக்கிறார், ஹைகிளாஸ் இந்திய மாடலாகவும் வாழ்ந்திருக்கிறார்.


சந்தானம் தான் இதுமாதிரி சீரியஸ் சப்ஜெக்டு படங்களை போரடிக்காமல் எடுத்து செல்ல உதவும் சரியான சப்போர்ட் காமெடி சாய்ஸ் என்பதை ஐ படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஐந்து வில்லன்களும் விக்ரமின் அதிரடியால் கெட்-அப் மாறியதும் அவர்களை தினுசு தினுசாக நக்கல் அடித்து வெறுப்பேற்றுவதில் தொடங்கி, ஒவ்வொரு சீனிலும் சந்தானம் என்ட்ரி கொடுக்கும் போதெல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. அப்ளாஸ் அள்ளுகிறது!.


"மேக்அப் " போட்டவுடன் மெசேஜ்... என விக்ரமை, சந்தானம் கிண்டல் அடிப்பதில் தொடங்கி, கேப் கிடைத்தால் கிடா வெட்டுவது மாதிரி... கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் யதார்த்தமாக காமெடி பண்ணுவது வரை... சந்தானத்திற்கு நிகர் சந்தானம் தான்.


படத்தில் ஐ வைரஸால் ஹீரோ விக்ரமின் முதுகெலும்பு வளைந்துபோகிறது... ஐ எனும் வினோதமான எழுத்து மாதிரியே விக்ரமின் முகமும் அடிக்கடி மாறிப்போகிறது. இதுமாதிரி சமயத்தில் சற்றே போரடிக்கும் ஐ படத்தை, சந்தானத்தின் சரவெடி காமெடி "பஞ்ச்கள்" தான் முதுகெலும்பாக இருந்து பெரிதாக போரடிக்காது தூக்கி நிறுத்தி இருக்கிறது என்பதை தியேட்டரில் சந்தானம் வரும் சீனின் போதெல்லாம் பறக்கும் விசில் சப்தங்கள் உறுதி செய்கிறது. வாவ்!.


கிட்டத்திட்ட தொழில்அதிபர் விஜய் மல்லையா கெட்-அப்பில், நடிகர் திலகத்தின் மூத்தவாரிசு ராம்குமார், நல்ல தனத்திலும், வில்லத்தனத்திலும் சபாஷ் வாங்கிவிடுகிறார்!. அதிலும், லட்சம் தேனீக்கள் கொட்டி உடம்பெல்லாம் வீங்கிய நிலையில் சந்தானத்தின் வாய்ஸ்படி "பிள்ளையார் மாதிரி இருந்த நீங்க...பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை மாதிரி" கெட்-அப்பில் வரும்போது... தியேட்டரில் கெக்கே பிக்கே சிரிப்பை ஏற்படுத்துகிறார். ஆமாம்., இவர் தயவில்தானே படத்தில் தியா எனும் எமி ஜாக்சன் பிரபல மாடல் ஆனார்... அப்புறம் ராம்குமாரிடம்(அதுவும் மல்லையா நடை உடை பாவனையில் இருக்கும்...) எமி எப்படி? தப்பித்தார்..? எனும் கேள்வி ரசிகர்களுக்கு எழாமல் இருந்தால் சரி!.


ராம்குமார் மாதிரியே , விக்ரமுக்கு மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் அணிவிக்கும் மாஜி மிஸ்டர் மெட்ராஸ் சரத்குமார் (சும்மா நட்புக்காக...), நான்கு சீனிலேயே வந்தாலும் வயிறு குலுங்க வைக்கும் பவர்ஸ்டார், மாடலிங் கோஆர்டினேட்டர் மாயா, விக்ரமின் அப்பா, அம்மா-கலா, வில்லன்கள் புதுமுகம் ஜான், எமியின் ஃபேமிலி டாக்டராக வந்து அதுக்கு மேல...மேல என்றபடி விக்ரமின் உடம்பில் ஐ வைரஸை செலுத்தும் சுரேஷ்கோபி, அந்த மேக்கப் மேன்-உமன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே சொல்லவும் வைக்கின்றனர்.


ஏ.ஆர். ரகுமானின் இசையில், மெர்சலாயிட்டேன்..., பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்..., என்னோடு நீயிருந்தால்..., அயில அயிலா... உள்ளிட்ட ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகம், சுபராகம்.


பி,.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, இன்றைய டிஜிட்டல் உலகத்திலும் சற்று இடைவேளைக்கு பின் பிலிம்மில் அழகாக பதிவு செய்யப்பட்டிருப்பது, அழகிய, அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு லொகேஷன்களுடன் ஐ யை மேலும் , மேலும் மேலும் நம் ஜஸ்களுக்கு விருந்து ஆக்குகிறதென்றால் மிகையல்ல!.


ஷங்கரின் இயக்கத்தில் ஒரு இடத்திலும் ஓட்டை விழாத கோட்டை விடாத ஸ்கிரின்பிளே சூப்பர்! அதேநேரம் சமீபத்தில் லிங்கா படத்தில் ரஜினியை லிங்கேஸ்வரனாக பார்த்தோம்... இதில் விக்ரம் லீ எனும் லிங்கேசன் என்பது (என்னதான் லிங்காவிற்கு ரொம்ப முன்பே "ஐ" ஆரம்பிக்கப்பட்ட படமென்றாலும்...) கொஞ்சம் உறுத்துகிறது. விக்ரம் "நச்சு தன்மையுள்ள குளிர்பானத்தில் நடிக்க மாட்டேன்.." என்று சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஒரு படத்தின் ஹீரோவை தாக்குவது மாதிரியான டயலாக் பேசுவது... உள்ளிட்ட குறைகளை களைந்து விட்டு பார்த்தால் ஐ ரொம்பவே "ஹை!."


மொத்தத்தில், சந்தானம் இப்படத்தில் சொல்வது மாதிரியே, "ஐ" - "ஐத்தலக்கா ஐ" மட்டுமல்ல "ஹைத்தலக்கா" "ஹையும் கூட...!!




ரேட்டிங் - 4/5



குமுதம் விமர்சனம்


சியான் விக்ரம், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் படம் எப்படி? மெர்சலா இருக்கா?


அதுக்கும் மேல!


குமுதம் ரேட்டிங் - சூப்பர்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

ஐ தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in