பேட் மேன் (ஹிந்தி),Pad Man

பேட் மேன் (ஹிந்தி) - பட காட்சிகள் ↓

Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு : அக்ஷ்ய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர்
இயக்கம் : பால்கி
தயாரிப்பு : டுவிங்கிள் கண்ணா

“மாதவிடாய்” பிரச்னையின் போது பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை குறைந்த விலையில் தயாரித்து கொடுத்த தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு, அதில் முருகானந்தம் ரோலில் அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பேட் மேன்.

இதற்கு முன்பு டாய்லெட் பிரச்னையை கையிலெடுத்த அக்ஷ்ய், இம்முறை பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் தொடர்பான விஷயத்தை தைரியமாக கையிலெடுத்து, அதுப்பற்றிய ஒரு விழிப்புணர்வு படமாகவும் கொடுத்த அக்ஷ்ய் (நடிப்பு - தயாரிப்பு) மற்றும் இயக்குநர் பால்கியை முதலில் பாராட்ட வேண்டும்.

மத்திய பிரதேசம் மாநிலம், மகேஸ்வரில் வசிப்பவர் வெல்டர் லக்ஷ்மிகாந்த் சவுகான் எனும் அக்ஷ்ய் குமார். இவரது மனைவி காயத்ரி (ராதிகா ஆப்தே). இவர் மாதவிடாய் பிரச்னையை எதிர்கொள்ளும்போது அழுக்கான துணியை பயன்படுத்துவதை அறிந்து, சானிட்டரி நாப்கின் வாங்க மெடிக்கல் ஷாப் செல்கிறார். அதன் விலையோ அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் அதை வாங்கி செல்கிறார்.

ராதிகாவோ விலையை கேட்டுவிட்டு திருப்பிக் கொடுக்க சொல்கிறார். இதையடுத்து, குறைந்த செலவில் மனைவிக்கு தானே நாப்கின் தயாரித்து கொடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதற்காக, அவர் செய்யும் வேலைகளை கண்டு ஊரே கேலி செய்கிறது.

ஒரு கட்டத்தில் அவருக்கு எதிராகவும் திரும்புகிறது. மனைவி ராதிகாவும் அவரை விட்டு சென்று விடுகிறார். ஆனாலும் அக்ஷ்ய் பின்வாங்கவில்லை, தொடர்ந்து நாப்கின் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார். அவருக்கு துணையாக பரி எனும் சோனம் கபூரும் உதவுகிறார்.

இறுதியில் அக்ஷ்ய் குமார், குறைந்த விலையில் நாப்கினை தயாரித்து வெற்றி பெற்றாரா.?, அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடிந்ததா.? அதற்காக அவருக்கு ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்பதை அழகாகவும், சமூக நோக்கத்துடனும் விவரிக்கிறது பேட் மேன்.

படத்திற்கு படம் வித்தியாசத்தையும், அதனூடாக ஒரு சமூக கருத்தையும் வலியுறுத்தும் அக்ஷ்ய் குமார், பேட்மேன் படத்தில் லக்ஷ்மிகாந்த் சவுகானாகவே (அருணாசலம் முருகானந்தம்) வாழ்ந்திருக்கிறார். மனைவியுடனான காதலாகட்டும், மனைவிக்காக நாப்கின் வாங்க கடைக்காரரிடம், சொல்லி வாங்குவதிலாகட்டும், நாப்கின் தயாரிப்பது, எப்படி பயன்படுத்துவது என அவர் தன்னையே சுயபரிசோதனை செய்து கொள்வது, மனைவி உட்பட ஊரே எதிர்க்கும் சூழலில் நம்பிக்கையை விடாமல் உழைப்பது என ரசிகனின் கைதட்டலை அள்ளுகிறார்.

அக்ஷ்ய் மனைவியாக வரும் ராதிகா, அக்ஷ்ய்க்கு துணையாக வரும் சோனம், தங்கள் ரோலை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். அமிதாப்பச்சனின் சிறப்பு தோற்றமும் அருமை.

இது போன்ற ஒரு உணர்வுப்பூர்வமான படத்தை எப்படி சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நன்கு உணர்ந்து, அதை சிறப்பாக இயக்கி, மக்களிடம் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளார் இயக்குநர் பால்கி. காதல், நகைச்சுவை என சினிமாவிற்கு தேவையான அம்சங்களையும் சரியான விதத்தில் கலந்திருக்கிறார்.

அமித் திரிவேதியின் இசையில், ஆஜ் சே தெரி... பாடல், ரசிகனை ஈர்க்கிறது. பிசி.ஸ்ரீராமின் ஓவிய ஒளிப்பதிவு, சந்தன் அரோராவின் படத்தொகுப்பு, பால்கியின் தத்துவம் பொதிந்த வசனங்கள் படத்திற்கு பக்க பலமாய் அமைந்து பேட்மேனை, ஸ்ட்ராங் மேனாக்கி உள்ளன.

யாரும் தொட நினைக்காத கதையை தொட்டதை பாராட்ட வேண்டும். ஒரு மிகப்பெரிய, அதிகம் பேசப்படாத, இன்னும் சொல்லப்போனால், பேசுவதற்கு அசூயைப்படும் விஷயத்தை கையில் எடுத்து, ஒரு காவியமாக்கி இருக்கிறார்கள். நாப்கின்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லாத, வடஇந்திய கிராம மக்களுக்கு, இந்தப் படம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதையும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சேர்த்து குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படமாக்கி இருக்கிறார்கள்.

மொத்தத்தில், பேட் மேன் - சூப்பர் மேன்

 

பட குழுவினர்

பேட் மேன் (ஹிந்தி)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

அக்ஷ்ய் குமார்

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷ்ய் குமார். 1967ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். ராஜீவ் ஹரி ஓம் பாத்தியா இவரது இயற்பெயர். சினிமாவுக்காக அக்ஷ்ய் குமாராக மாறினார். சவுகாந்த் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அக்ஷ்ய். தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அக்ஷ்ய். ஆக்ஷ்ன், காமெடி என பல்வேறு ரோல்களில் அசத்தி வருகிறார் அக்ஷ்ய். சமீபத்திய இவரது படங்கள் பெரும்பாலும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விமர்சனம் ↓