Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

கபாலி

கபாலி,Kabali
ரஜினியை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் படம் இது.
06 ஆக, 2016 - 10:55 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கபாலி

தினமலர் விமர்சனம்
உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிக்க, அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வி கிரியேஷன்ஸ் பேனரில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வழங்க, ஜாஸ் சினிமாஸ் வாங்கி வெளியிட்டிருக்கும் மிகப் பிரமாண்டப்படமே கபாலி .


மலேசியாவில் தமிழர்கள், பெரும்பாலும் அடிமை நிலையில் வாழ்வதாலும், தமிழனுக்கு தமிழனே வில்லாதி வில்லனாய் மாறிடுவதாலும் அப்பாவி தமிழர்களுக்கு ஒரு மீட்பராக மாறுகிறார் ரஜினி. இதுதான் கபாலி திரைப்படம் மொத்தமும்!


கதைப்படி, இந்தியாவில் தமிழகத்தில் திண்டிவனம் பகுதியில் இருந்து இரண்டு தலைமுறைக்கு முன் மலேசியாவில் தோட்ட தொழிலாளர்களாக வேலைக்குப் சென்று, அங்கேயே செட்டில் ஆன பரம்பரை கபாலி ரஜினியினுடையது. மலேசியாவில், சீனர்களின் இனவெறியை எதிர்த்து போராடியதற்காகவும், சீனர்களுடன் சேர்ந்து, தமிழர்கள் சிலர் , தாங்கள் செய்யும்போதை மருந்து கடத்தலுக்கு எதிரானவர் ரஜினி என்பதாலும் வசமாக ரஜினியை கொலை செய்யக் கூட்டிப் போய் கொலையாளியாக்கி போலீஸில் காட்டிக் கொடுத்த சக கூட்டாளிகளின் கைங்கர்யத்தால் 25 ஆண்டுகளாக சிறையில் இருந்த ரஜினிகாந்த்.., சிறையில் இருந்து ஆரம்ப காட்சியிலேயே விடுதலையாகிறார்.


அவ்வாறு , விடுதலையான பின்னர், தான் இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்க முயற்சிக்கிறார். என்ன ஆச்சர்யம் இறந்து போனதாக ரஜினி கருதும் அவரது மகள், நிறை மாதகர்ப்பிணி மனைவி.... உள்ளிட்ட உயிர் சொந்தங்கள் ஒவ்வொருவராக கிடைக்க, அவரது மகளையும், மனைவியையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் சூழலில் தள்ளப்பட்டு, மீண்டும் ஒரு தாதாவாக மாறுகிற ரஜினி, தன் பழைய விரோதிகளை துரோகிகளை பழிவாங்கினாரா? இல்லையா ....? என்பது தான் கபாலி படத்தின் கரு , கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.


2 மணி நேரம் 30 நிமிடம் 20 நொடிகள் ஓடக்கூடிய யு சான்றிதழ் படம் எனும் சென்சார் சர்டிபிகேட் போட்டு முடிந்ததும்., வழக்கமான சமீபகால ரஜினி படங்கள் போலவே பிளாக் பேக் டிராப்பில் புள்ளி புள்ளி ப்ளூ லைட்டிங்கில் சூப்பர் ஸ்டார் எனும் ஆங்கில எழுத்துக்கள் மின்ன சூப்பருக்கும் , ஸ்டாருக்குமிடையில் ரஜினி என தமிழில் பளீர் வெள்ளை எழுத்துக்கள் மின்ன ., "கபாலி "என தமிழிலும் ஆங்கிலத்திலும் டைட்டில் கார்டு போடும் போதே தியேட்டரில் ரசிகர்களின் விசில் சப்தமும், கரகோஷமும், ஆட்டம் பாட்டமும் . விண்ணை பிளக்க எல்லோரிடமும் தொற்றிக் கொள்கிறது உற்சாகம்.


ஓப்பனிங் சீனிலேயே மலேசிய சிறையில் இருந்து மிடுக்காக ரிலீஸ் ஆகும் ரஜினி, ஜான் விஜய் உள்ளிட்ட தன், பட்டாளங்களுடன்... நேரே, வில்லனைத் தேடி, வில்லனின் ரைட் ஹேண்ட் வைத்திருக்கும் செல்லப் பிராணிகள் விற்பனை நிலையமான பெட்ஷாப்பிற்கு போகிறார். அங்கு கெக்கே பிக்கே... என சிரித்தபடி, ரஜினியை நக்கலாய் வரவேற்கும் கட்டுமஸ்து இளைஞன் சீனி, அட, வா லா, அப்பக் கோழிக்கறி தான் ... என கிண்டலாய் கூறியபடி., அப்புறம் எதுனா சாப்படுறீங்களா ? என ரஜினியைப் பார்த்துக்கேட்க., ரஜினியின் அருகில் நிற்கும் ஜான் விஜய், சூடா டீ தண்ணீ கிடைக்குமா ..? சீனி கொஞ்சம் கம்மியா .... என்றபடி, ரஜினியை பார்க்க அவர் முறைக்க, வேணா இல்ல வேணாம்... என ஜான் பதற.,, அந்த கட்டுமஸ்து இளைஞன் சீனி, "நேரா இங்க தான் வர்றீங்க போல ... சொல்லுங்க கேட்போம் ..." மீண்டும் கெக்கே, பிக்கே சிரிப்புடன் நக்கல் நையாண்டி செய்ய ., ரஜினியின் அருகில் நிற்கும் உதவி ஜான் விஜய் ,தன் ,பின்புற இடுப்பில் செருகி இருக்கும் துப்பாக்கியை உருவ முயற்சிக்க ., சோபாவில் அமர்ந்திருக்கும் ரஜினி , தன் இடது கை அசைவால் அவரைக் கட்டுப்படுத்திவிட்டு ஒரு மாதிரி அந்தகட்டுமஸ்து இளைஞனை இளக்காரமாக பார்க்கிறார். இதில் வெறியாகும் இளைஞன் சீனி ., சுற்றிலும் இருக்கும் தன் ஆட்களைப் பார்த்தபடி ., அப்ப சாவு .... என்றபடி சோபாவில் அமர்ந்த நிலையிலேயே தன் இடுப்பில் இருக்கும் ஆயுதத்தை உருவி ரஜினியை குறி பார்த்து பாய எத்தனிக்க ., ஒரு நொடியில் தன் வலது கையை நீட்டி கோட் சூட்டுக்குள்ளிருந்து நீளும் இரும்பு ராடால் அந்தஎதிராளியை அடித்து கீழே உருட்டி விட்டு , பாய்ந்து வரும் அவனது ஆட்களையும் ரஜினி பாய்ந்து பந்தாடுவது பார்த்து அட்டக் கத்தி தினேஷ் உள்ளிட்ட எதிராளியின் இளம் கூலி ரவுடிகள் விக்கித்துப் போய் நிற்க, அடித்து துவைத்து போட்ட அந்த இளம் எதிராளி சீனியை காலல் உதைத்து உருட்டி ., "கபாலின்னதும் தமிழ்படங்கள்ள இந்த கன்னத்தோரம் மருவச்சுக்கிட்டு மீசையை முறுக்கிட்டு வர்ற நம்பியார் கூப்பிட்டதும் ., சொல்லுங்க எசமான்னு கூனி குறுகி வந்து நிக்கிற கபாலினனு நினைச்சியா .....கபாலிடா ....போய் உன் பாஸ் டோனி லீ கிட்டேயும் வீரசேகரன் கிட்டேயும் சொல்லு 25 வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ .... அப்படியே கபாலி திரும்ப வந்திருக்கிறேன்னு சொல்லு .... அவங்க இரண்டு பேரும் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தேடிப் பிடிச்சு கொல்வேன்னு சொல்லு ......" என ரஜினி கர்ஜிக்கும் ஒரு காட்சி போதும் . ரஜினியின் நடிப்புக்கும் , ஸ்டைலுக்கும் ஒரு சோற்று பதம் சொல்வதற்கு ...வாவ் , இந்த வயதிலும் என்ன ஒரு ஸ்டைல் ,என்ன ஒருநடிப்பு ! வாரே வா ...!


அதன் பின் ., உள்ளூர் தமிழன் , வெளிநாட்டு வாழ் தமிழன் .. எல்லோருக்கும் தெரிந்த காலை வாரிவிடும் "நண்டு கதை சொல்கிறார் கபாலி" ரஜினி . அப்பாலே, ரஜினி, தன் தலைவராக கருதும் தமிழ்நேசன் -நாசர். "சீனாகாரனோடு தங்கள் சுயநலத்திற்காக சேர்ந்த தமிழர்கள் சிலரின் துரோகத்தால் கொல்லப்படுகிறார் தட்டிக் கேட்க களமிறங்குகிறார் கபாலி" ரஜினி. மேலும், சீனாக்காரனுக்கு வழங்கும் சம்பளம் போலவே., அதிகம் அந்த உழைக்கும் மலேசிய தமிழனுக்கும் அதிக அளவு சம்பளம் வழங்க வேண்டும் என போராடுகிறார் கபாலி ரஜினி .


கபாலி கதை மொத்தமும் மலேசியாவில் தமிழர்கள் எதிர்கொண்ட , எதிர்கொள்ளும் அரசியல் பற்றியது! என்பதால் ., இதுவரை தமிழ்நாட்டை காப்பாற்றிய ரஜினி, இப்போது மலேசியாவை சீனார்களின் போதை வலையில் இருந்து காப்பாற்றுகிறார். இதுவரை எல்லா தமிழர்களுக்கும் தலைவராக இருந்தார். இப்போது மலேசியா வாழ் தமிழர்களுக்கு தலைவர் ஆக தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார் கபாலியில் ரஜினி என்றால் மிகையல்ல.


இதற்கெல்லாம் மேல், இன்னொரு பக்கம்., அது நாள் வரை உயிரோடு இருக்கிறார்களா ? இல்லையா ...? என்பது தெரியாது சிதறி கிடக்கும் தன் குடும்பத்தை மீட்கவும் பெரிதாக போராடுகிறார் கபாலி ரஜினி. எல்லாவற்றிலும் தன் ஸ்டைல் மேனரிசங்களால் ரசிகனை சீட்டோடு கட்டி போடுவது படத்திற்கு பெரும் பலம் .


ஆனாலும் ., க்ளைமாக்ஸில் நாங்கள் உனக்கெதிரில் உட்கார்ந்தா பிடிக்காதா ? கோட் சூட் போட்டா பிடிக்காதா ? கால் மேல் கால் போட்டுக் கொண்டால் பிடிக்காதா? வாழ்ந்தால் பிடிக்காதா ..? கடைசி வரை நாங்கள் அப்படியே தான் இருக்க வேண்டுமா ... ? இனி , அப்படி முடியாது ... உனக்கு பிடிக்கலைன்னா செத்துப் போ ....என சீன வில்லன் டோனிலீ யிடம் பேசிய படியே சுட்டுத்தள்ளுவது செம காமெடி . இங்கு ஏதோ உயர் ஜாதி தலைவரிடம் தன் ஜாதிக்கு உரிமை கேட்டு போராடுவது போல்., லீ யிடம் சரளமாக தமிழில் பேசுவது ஏதோ லோக்கல் ஜாதி பாலிடிக்ஸ ரஜினிய வச்சு ., இயக்குனர் இரஞ்சித்., சைல்டிஸ்ஸாக மலேசியா வரை கொண்டு சென்று தீர்த்துக் கொள்ளப் பார்த்திருப்பதாகவே படுகிறது . சூட் , கோட், கூலிங் கிளாஸ் , சால்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் ,வெள்ளை தாடி இவை எல்லாவற்றையும் தாண்டி ரஜினியின் முதுமையை சில சீன்களில் அவரது முகம் காட்டிக் கொடுப்பது ரசிகனுக்கு வருத்தம்.


அதே நேரம், "மலேசியாவுல சரக்குன்னா பொம்பள மேட்டர் ...இங்க சென்னையில் தண்ணி ய்யாம்மா ....", என வெள்ளந்தியாக வளர்ந்த மகள் தன்ஷிகாவிடம் சொல்லி சிரிக்கும் ரஜினியின் இயல்பான நடிப்பு, "இப்பதாமா நான் வாழுற வாழ்க்கைக்கு முழு அர்த்தம் கிடைச்சுருக்கு ... என கனவில் தன்னுடன் வாழும் மகள் கிடைத்து ., மனைவியும் கிடைக்க போகும் சமயத்தில் நெஞ்சம் நெகிழ்ந்து பேசுமிடம், "என் வாழ்க்கையில் இன்னும் எவ்வளவு கொடுமையெல்லாம் பார்க்கணும்னு தெரியலை... " என சோகத்தில் புலம்பும் இடம் , "உலகம் மாறிட்டுருக்கு... ஆனா பிரச்சனைகள் அப்படியே இருக்கு ஆனா நம் தமிழ் இனத்துக்குள்ள ஒற்றுமை இந்த மார்த்தாண்டம் மாதிரியே இருக்கு.... என 25 வருட சிறை வாழ்க்கையில் இருந்து வெளிவந்ததும் தன் சமூகத்திற்காக சுவலைபடும் காட்சி ...எல்லாவற்றிலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியது மாதிரியே அசால்ட்டாக அசத்துகிறார் மனிதர்.


குமுதவள்ளியாக நிறை மாத கர்ப்பிணியாக , பின் காதோர கேசத்தில் நரை விழுந்த நடுத்தர வயது பெண்மணியாக ராதிகா ஆப்தே ஹாசம். ரஜினியைப் பார்த்து இவர் பேசும் " உன் கண்ணை 2 நிமிஷம் பார்த்து நான் மயங்கிட்டேன ...உன் சிரிப்பில் நான் மூழ்கிப் போகிறேன் ,உன் கருப்பு கலர் அப்படிய எடுத்து என் உடம்பு முழுதும் பூச ஆசை" எனும் காதல்மொழி சிலீரிடச் செய்கிறது..... ரஜினியை மட்டுமின்றி ரசிகனையும் . யெஸ்!


ஒடும் பிள்ளை மாதிரி ரஜினியின் பின்னாலேயே ஓடி தன்ஷிகாவின் காதலனாக அடையாளப்படுத்தப்பட்டு, அக்காதல் நிறைவேறாமலேயே ... அகால மரணமடையும் அட்டகத்தி தினேஷ் , ரஜினியை தவறாக புரிந்து கொண்டு எதிர்த்து பின் ஏற்கும் மெட்ராஸ் கலையரசன், ரஜினியின மகளாக, ஆக்ஷன் ராணியாக தன்ஷிகா , மெட்ராஸ் ரித்விகா , வில்லா தி வில்லன் சைனா மேட் டோனி லீ , டோனியின் பார்ட்னர் கிஷோர் , மலேசிய தமிழர்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட தமிழ் நேசனா க நாசர், ரஜினியின் நெருங்கிய விசுவாசியாக ஜான்விஜய் ,போதை கடத்தல் மினி டானாக மைம் கோபி, அசால்ட்டாக சொன்னதை செய்யும் கபாலி கேங் ஆள் சம்பத் ராம் , சங்கிலி முருகன் .... உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்கள பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.


சந்தோஷ் நாராயணனின் இசையில் நெருப்புடா..., "நெஞ்சமெல்லாம் ..., " "வீரத்துறந்திரா ....." உள்ளிட்ட பாடல்கள் படத்தோடு கேட்கும் போது பார்க்கும் போது பெரும் பலம் . முரளியின் ஒளிப்பதிவில் அடிக்கடி காட்டப்படும் அழகிய மலேசியாவின் ஏரியல் வியூவும் ரஜினியின் நடை , உடை , பா வனை ஸ்டைல் களும் பிரமாதம், பிரமாண்டம் .


பா. இரஞ்சித்தின் இயக்கத்தில், "காந்தி சட்டையை கழட்டியதற்கும் , அம்பேத்கர்கோட்டு போட்டதுக்கும் ...நிறைய வித்தியாசமும் காரணமும் இருக்கு ", நம்ம நாட்டுக்காரங்க எங்க போனாலும்ஜாதி , மதம் னு தான் பிரச்சினை பண்றாங்க...", "பயத்தை வெளியில காட்டிக்கக்கூடாது ... எதிராளிக்கு நாம பயப்படறது தெரிஞ்சா., அது நமக்கு பலவீனம் ..." , "ஒவ்வொரு பறவையும் ஒரு விதையை சுமந்துட்டு போகுது ... ஒவ்வொரு விதையிலும் ஒரு வனம் இருக்குதுன்னு நம்பணும்...." என்பன உள்ளி ட்ட பன்ச் டயலாக்குகளும் அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் சிட்சுவேஷன்களும் பிரமாதம். அதே நேரம் , மருந்துக்கு கூட காமெடி என்பது படத்தில் எங்கும் இல்லை என்பதும் ., கபாலி, 2 சீன் சென்னையிலும் 2 சீன் பாண்டிச்சேரியிலும் 2 சீன் தாய்லாந்திலும் படமானது போக, முழுக்க முழுக்க நம்மூர் சாமான்ய ரசிகனுக்கு ரொம்பவும் அந்நியமான மலேசியாவில் படமான தமிழ் படம் என்பதும் சற்றேபலவீனம்.


மற்றபடி, பல காட்சிகளை, முன்பே யூகிக்க முடிவது வருத்தம் . மாபியா சீனியை தன்ஷிகா தீர்ப்பது பிரமாதம் ., மகிழ்ச்சி ! அதே நேரம் ,அவர்தான் ரஜினியின் மகள் என்பதை அந்த சீனுக்கு முன் யூகிக்க முடிவது ., ரஜினி இண்டர்வெல்லுக்கு முன்., நெஞ்சில் தொடர் குண்டடிப்பட்டு விழும்போதே ரஜினி மீண்டும் உயிர்த்தெழுவார் என்பது தெரிவது.... மலேசிய போலீஸ் துரத்தலில் கண் எதிரே பக் என பற்றி எரிந்த காரில் இருந்து வில்லன் டோனி லீயும் தப்பி பின்னாளில் கபாலி ரஜினி , மனைவி ராதிகா ஆப்தே மாதிரியே திரும்பி உயிருடன் வருவது உள்ளிட்ட நம்ப முடியாத லாஜிக் ஹம்பக்குகள் கபாலி ரஜினியின் ஸ்டைலுக்கு முன் அவரது ரசிகர்களுக்கும், பிற ரசிகர்களுக்கும்.... பெரிதாக தெரியாதது படத்திற்கு பெரிய ப்ளஸ்.


ஆக மொத்தத்தில், கபாலி, முன்பாதி , ரஜினியின் பழைய காளி! ஜாலி..! பின்பாதி, மலேசிய வாழ் தமிழ் தோட்டத்தொழிலாளிகளின் நலம் விரும்பும் போராளி! எனும் அளவில் ரஜினி ரசிகர்களுக்கு முதலாளி!!


--------------------------------------------------------


குமுதம் விமர்சனம்
ஒரே ஒரு ட்விட்டில் சொல்லி விடக்கூடிய கதைதான் கபாலி. மலேசியத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி சிறை சென்று 25 வருடங்களுக்கப் பின் வௌ்ளைத் தாடியுடன் வெளியே வருகிறார் கபாலீஸ்வரன். அத்தனை அண்டர்கிரவுண்ட் அட்ராசிட்டிகளையும் கச்சிதமாக செய்து கொண்டிரக்கும் 43 கேங் எனப்படும் மாஃபியாவை அடித்து துவம்சம் செய்கிறார். அங்கங்கே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை குறித்துப் பேசுகிறார். மனைவியைத் தேடி அலைகிறார். கடைசியில் சீனாக்கார வில்லனைப் போட்டுத் தள்ளுகிறார். எழுத்து, இயக்கம்; பா. இரஞ்சித் என்ற டைட்டில் கார்டுடன் முடிகிறது படம்.

தியேட்டரில் இருந்து வெளியே வரும் ரஜினி ரசிகர்களின் முகங்களைத் தான் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. ஏமாத்திட்டியே தலைவா என உரக்க கத்துகின்றனர்.


ஜெயிலில் இருந்து ரஜினி ரிலீஸ் ஆகும் அந்த மாஸ் ஓபனிங் தொடங்கி ஒரு சண்டை கடந்து ஒரு பாட்டு முடியும் வரை ரஜினி கரென்ட் தியேட்டர் முழுவதும் பரவிப் படர்கிறது. அதன்பின், கதை சொல்லத் தொடங்கிய கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ரசிகர்கள் முகத்தில் வோல்டேஸ் டிராப்.


இது வழக்கமான ரஜினி படமல்ல; இது வேற என்று நிமிர்ந்து உட்காருகிறான் பொதுவான சினிமா ரசிகன். தன் இமேஜில் இருந்து விலகி மாத்தி யோசிக்க வேண்டும் என்ற ரஜினியின் மன மாற்றத்துக்கு முதலில் ஒரு பூங்கொத்து. கண் அசைவில், சிறு புன்னகையில் மின்னல் பாய்ச்சுகிறார் சூப்பர் ஸ்டார். மனைவியை தேடி சென்னை, பாண்டிச்சேரி என்று அலையும் காட்சிகளில் கபாலியின் பதட்டத்தை பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் ரஜினி. குமுதவல்லியாக குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாகச் செய்திருக்கிறார் ராதிகா ஆப்தே. 25 ஆண்டுகளுக்கு பிறகு கணவனைக் கண்டதும் கதறும் அந்த ஒரு காட்சி போதும், கிரேட் ஜாப்.


கபாலி - குமுதவல்லி கேரக்டர்களைத் தவிர வேறெந்த கதாபாத்திரங்களும் மனதில் நிற்கவில்லை. வில்லன்கள் எல்லாம் காமாசோமா ரகம். ரஜினியை எதிர்த்த நிற்கும் டான், சும்மா ட்னடடான்னு இருக்க வேண்டாமா? மெட்ராஸ் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களையும் இதில் நடிக்க வைத்திருப்பதில் நிலைய வித்வான்கள் நெடி.


காந்தி கோட்ட கழட்டினதுலயும், அம்பேத்கர் கோட் போட்டதுலயும் அரசியல் இருக்கு என்பது போன்ற வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகிறது.


படம் தொடங்கிய பத்து நிமிடங்களில் அந்த ஸ்கிரிப்ட் ரசிகர்களை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கபாலியிலோ அரை மணி நேரமாகியும் ரசிகர்களால் படத்துடன் கனெக்ட் ஆக முடியவில்லை. 20 வருஷத்துக்கு முந்தைய சீன டப்பிங் படத்தைப் பார்த்த உணர்வு எழுவதைத் தடுக்க முடியவில்லை. கதைக் களம் அழுத்தமாகச் சொல்லப்படாததும், ஸ்டன்னிங்கான காட்சி அமைப்புகள் இல்லாததும் வீக்கான மேக்கிங்குமே படத்தின் பெரிய பலவீனம்.


ரஜினி படமாகவும் இல்லாமல், ரஞ்சித் படமாகவும் இல்லாமல் பாவம் இடையில் சிக்கிக் கொண்டுவிட்டான் கபாலி.


கபாலி: மகிழ்ச்....சே!


குமுதம் ரேட்டிங் - ஓகே
------------------------------------------


கல்கி விமர்சனம்
மிகச் சாதாரண கதையைக் கூட தேர்ந்த நடிகர்களால் உயர்த்திவிட முடியும் என்பதற்கு உதாரணம் கபாலி. மலேசியத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடும் ரஜினி, இருபதாண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வருவதில் இருந்து படம் தொடங்குகிறது. ஆனால், வெளியே சூழல் மாறவில்லை. கெட்ட காரியங்கள் மேலும் வலுவாகத் தொடர்கின்றன. வில்லன்களின் அட்டூழியம் தலை விரித்தாடுகிறது. அவர்களை எல்லாம் எப்படி கபாலி பந்தாடுகிறார் என்பதுதான் மெயின் கதை. அதில் ரஜினியின் வழக்கமான் ஆக்ஷன், ஸ்டைல், வசனங்கள் என்று ரசிகர்களைக் கட்டிப்போடும் அம்சங்கள் நிறையவே உண்டு.


ஆனால், ஆச்சர்யப்படுத்தம் துணைக்கதையும் நடிப்பும்தான் படத்தின் ஹைலைட். வயதான 'டான்' பாத்திரத்தை அவ்வளவு அழகாக செதுக்கியுள்ளார் ரஜினி. நடையில் சோர்வு, பேச்சில் நிதானம், பார்வையில் கனிவு, சிறைவாழ்வு தந்த தனிமையின் பாதிப்புகள்... என்று ரஜினி, கபாலி பாத்திரம் கேட்கும் குணங்களோடு பட்டையைக் கிளப்பியுள்ளார். சிறையிலிருந்து வந்த பின்னர் மனைவியைத் தேடி அலையும் துணைக்கதை, உண்மையில் நெகிழ்ச்சிக் கவிதை.


மலேசியாவிலிருந்து இந்தியா வந்து, புதுச்சேரியில் ஒரு வீட்டில் வேலையாளாக மனைவி குமுதவள்ளி (ராதிகா ஆப்தே) இருப்பதை தெரிந்து கொண்டு, அங்கே போய் பார்க்க விரைகிறார் கபாலி. புதுச்சேரி வரை வந்தாச்சு. இரவாகிவிட்டதால், மனைவி தங்கியுள்ள வீட்டுக்குப் போக முடியவில்லை. இரவு கழிய வேண்டும். காத்திருக்கிறார் கபாலி. இரவு முழுவதும் பாலகனியில் நின்றுகொண்டே நினைவுகளை அசைபோடுகிறார். மகள் வந்து படுத்துக் கொள்ள அழைக்கும்போது, 'இங்க எங்கேயோ பக்கத்துலதான் வள்ளி இருக்கா... அவளோட வாசனை எனக்குத் தெரியுது' என்று உருகுவார். உணர்வுகளின் நேர்த்தி, காட்சியில் கவிதை. இந்த ஒரு காட்சிக்காகவே கபாலியின் அத்தனை ரத்தக்களறியையும் அசட்டுத் தனங்களையும் மன்னித்துவிடலாம்!


பாடல்கள் ஏற்கெனவே பயங்கர பாப்புலர்! அதில், மாயநதி பாடல் எடுக்கப்பட்ட விதம், அருமை. ராதிகா ஆப்தே ஒரு சில காட்சிகள் மட்டும் தோன்றினாலும் அவ்வளவு புத்துணர்ச்சி. லேடி ஜேம்ஸ்பாண்ட் போன்று கலக்குகிறார் தன்ஷிகா. ஒளிப்பதிவும் சண்டைக்காட்சிகளும் ரசிகர்களைக் கட்டிப்போடுவது உறுதி.


வழக்கமான ரஜினி படத்துக்குண்டான இலக்கணங்களில் ஓரளவுக்கேனும் மாறுதலைக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் பா. இரஞ்சித். நகைச்சுவை கிடையாது. குத்தாட்டம் கிடையாது. பஞ்ச வசனம் கிடையாது. அடுக்கடுக்கான சம்பவங்களோ, திருப்பங்களோ கிடையாது. ஆனால், ரஜினி என்ற கலைஞனை முன்னிலைப்படுத்தியுள்ள விதத்தில் இரஞ்சித் பாராட்டுக்குரியவர். இன்னும் வலுவான கதைகளை ரஜினி தோளில் ஏற்றலாம். மற்றொரு அமிதாப்பச்சனாக ரஜினியை மெருகேற்றலாம் என்று நம்பிக்கையளித்துள்ளார் இயக்குநர்.
கபாலி - மாஸ் அண்ட் கிளாஸ்!வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
கபாலி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in