நடிகர்கள் : ராதிகா ஆப்தே, சத்யதீப் மிஸ்ரா
இயக்கம் : பவன் கிர்பிலாணி
ரஜினியின் கபாலி பட நாயகி ராதிகா ஆப்தே, ஹிந்தியில் நடித்து வெளிவந்துள்ள சைக்லாஜிக்கல் த்ரில்லர் படம் தான் 'ஃபோபியா'. ராகினி எம்எம்எஸ் படத்தின் இயக்குநர் பவன் கிர்பிலாணி இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு மிரட்டியது என்று இனி பார்ப்போம்...
'ஃபோபியா' கதைப்படி மேகா எனும் ராதிகா ஆப்தே திறமையான பெண், நன்கு ஓவியம் வரையக்கூடியவர். ஒருநாள் தன் வீட்டிற்கு டாக்ஸியில் வரும் போது அந்த டாக்ஸி ஓட்டுனர் ராதிகாஆப்தேவை பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார். இந்த சம்பவம் ராதிகாவிற்கு மிகப்பெரிய பயத்தை கொடுக்கிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத அவர் எதைக்கண்டாலும் பயப்பட தொடங்குகிறார். சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் பயப்படும் ராதிகாவின் நிலையை கண்டு அவரின் நண்பரான ஷான் எனும் சத்யதீப் மிஸ்ரா, ராதிகாவிற்கு ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக அந்த வீட்டிலிருந்து வேறு ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பில் குடியமர்த்துகிறார். அப்போது ராதிகாவின் உறவினர் ஒரு ராதிகா ஆப்தே குடிவருதற்கு முன்னர் அங்கு தங்கியிருந்த ஜியா என்பவர் காணாமல் போய்விட்டதாகவும், அவரைப்பற்றிய தகவல் ஏதுவும் இல்லை என தெரிவிக்கிறார். இதனையடுத்து காணாமல் போன ஜியாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் ராதிகா ஆப்தே. இறுதியில் ராதிகா ஆப்தே, ஜியாவை உயிரோடு கண்டுபிடித்தாரா.? என்பதை சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாக விவரிக்கிறது 'ஃபோபியா' படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
படத்தின் பெரிய பலமே ராதிகா ஆப்தே தான். தனி ஆளாய் நின்று படம் முழுக்க மிரட்டியிருக்கிறார் மிரட்டி. அவருக்கு பக்கபலமாக சத்யதீப் மிஸ்ரா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் நடிப்பில் அசத்தியிருக்கின்றனர்.
ராகினி எம்எம்எஸ்., எனும் ஹிட் படத்தை கொடுத்த பவன் கிர்பிலாணி தான் 'ஃபோபியா' படத்தின் இயக்குநரும். அவரின் திரைக்கதையில் படம் த்ரில்லிங்கா ரசிகர்களை மிரட்டியிருக்கிறது மிரட்டி. அந்தவகையில் பவன் நிச்சயம் பாராட்டத்தக்கவர். அவருக்கு பலம் சேர்க்கும் விதமாக ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவையும் பக்கபலமாக இருக்கிறது. ஆனால் படத்தின் பின்னணி இசை கொஞ்சம் இரைச்சலை ஏற்படுத்துகிறது.
'ஃபோபியா' படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவழைப்பது படத்தின் பலம், அதேசமயம் க்ளைமாக்ஸில் கதையில் காணப்படும் குழப்பம் படத்திற்கு சற்றே பலவீனம். ஆனாலும் பவனின் த்ரில்லான திரைக்கதை மற்றும் ராதிகா ஆப்தேவின் மிரட்டலான நடிப்பிற்காக 'ஃபோபியா' படத்தை நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.
மொத்தத்தில், ''போபியா - செம த்ரில்லர்(யா)!''