வழக்கம் போலவே ஹாரிஸ் ஜெயராஜின் இசையை நம்பி உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நாயகராகவும் நடித்திருக்கும் படம் தான் கெத்து".
ஹாரிஸின் இசைக்கு அடுத்து, வழக்கமாக காமெடியை நம்பும் உதயநிதி., இந்தப் படத்தில் ஆக் ஷனை நம்பி அகலக்கால் வைத்திருப்பதில் வெற்றி கண்டிருக்கிறாரா ? தோல்வி தழுவியிருக்கிறாரா ..? பார்ப்போம் ....
கதைப்படி ., சேது எனும் உதயநிதி ஸ்டாலினின் அப்பா துளசி ராமன், குமுளி - முல்லை பெரியாறு பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர். மாணவர்களுக்கு தொந்தரவாக பள்ளிக்கு அருகே இருக்கும் மதுக்கடை பார் ஒன்றை காலி செய்ய சொல்லி போலீஸில் புகார் கொடுக்கிறார். அதில் கடுப்பாகும் ரவுடி பார் உரிமையாளருக்கும். துளசி ராமனுக்குமிடையில் ஏற்படும் முட்டல், மோதலில் கோபத்தில் பார் உரிமை ரவுடியை கொன்னுடுவேன்... என்கிறார் துளசி ராமன்.
அடுத்த நாளே அருகில் இருக்கும் அருவிப்படுகையில் அந்த ரவுடி பிணமாக போலீஸ் கையில் சிக்க, துளசி ராமனை விசாரிக்கிறது போலீஸ்... கூடவே துளசியை தீர்த்து கட்ட துடிக்கிறார் இறந்த ரவுடியின் கவுன்சிலர் அண்ணன். அப்பாவி அப்பாவை அந்த கொலைகார கும்பலிடமிருந்து காபந்து செய்யகளமிறங்கும் நூலக உதவியாளரான சேது - உதயநிதி, தன் லைப்ரரி புக் திருடி -நந்தினி எமி ஜாக்ஸனுக்கு நூல் விட்டுக் கொண்டே அப்பாவை காபந்து செய்வதுடன், சர்வதேச தீவிரவாதி டேவிட் எனும் விக்ராந்தால் கொல்லப்பட இருக்கும் வி.வி.ஐ-பியான இந்திய விஞ்ஞானி ஒருவரையும் காபந்து செய்து தேசப்பற்றாளனாக ரசிகனை ராயல் சல்யூட் அடிக்க வைப்பது தான் "கெத்து படத்தின் மொத்த கதையும்!
சேதுவாக உதயநிதி செம தோதாக தனக்கேற்ற ஒரு ஆக் ஷன், ரொமான்ஸ் , சென்டிமென்ட் கதையை தேர்ந்தெடுத்திருப்பதில் ஜெயித்திருக்கிறார். ஆனால் ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்த்து வரும் காமெடி அவ்வளவாக இப்படத்தில் இல்லாதது பலவீனம்.
அதே மாதிரி பட காட்சிகளிலும், ஏன்? பாடல் காட்சிகளிலும் கூட., அலட்டி கொள்ளாமல் அசால்ட்டாக பர்பாமென்ஸ் காட்டும் உதயநிதி ,ஆக்ஷன் சீன்களில் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பது அவரது அந்தந்த ஆக் ஷன் சீன் முக பாவங்களில் வெளிப்படுவது ... பாவம் ரசிகன் .. என முனுமுனுக்கவைக்கிறது. நீங்களும் இஷ்டமில்லாமல் கஷ்டப்பட்டு ரசிகனையும் கஷ்டப்படுத்துவதை விட ., லவ், ரொமான்ஸ் , காமெடி ,சென்டிமென்ட் ... என்று உங்களுக்கு ஈஸியாக வருவதை செய்யலாமே உதயநிதி .?!
நந்தினி எனும் நந்தினி ராமானுஜமாக டி.டி.டி.வி காம்பயர் ஆகும் ஆசையுடன் லைப்ரரி புத்தகங்களை லவட்டிக் கொண்டு போகும் திருட்டு மேனியா உடைய நாயகியாக எமி ஜாக்ஸன். லைப்ரரி புக்ஸ் , உதயநிதியின் மனசு உள்ளிட்டவைகளுடன் ரசிகர்களையும் லாவகமாக லவட்டுகிறார். பேஷ், பேஷ்!
வில்லன் விக்ராந்த் , டேவிட் டாக இப்பட பாத்திரத்தின் மூலம்தன் நடிப்புடார்கெட்டை ஒரளவு அடைந்திருக்கிறார்... எனலாம்.
கருணாகரன் , கான்ஸ்டபிளாக காமெடியில் டிரபிள் தராததே ஆறுதல். ராஜேஷ் , சச்சு , பிரகதி, வாசு விக்ரம் ,அனுராதா , உமாபத்மநாபன் ,மைம் கோபி , ஐ - எம்.விஜயன், அவினா ஷ் , சூப்பர் குட் சுப்பிரமணி ,கே.எஸ்.ஜி . வெங்கடேஷ் , டேனியல் , ஸ்டில்ஸ்விஜய் , தீபிகா உள்ளிட்டோருடன் பெசன்ட் நகர் ரவி , ஆடுகளம் நரேன், சரத் ஹக்ஸர் ஆகியோரும் அவர்களது பாத்திரங்களும் கச்சிதம்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை யில் கெத்து கித்து காட்டலை ... உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும் சுபராகம்.
எம்.சுகுமாரின் குமுளி மலையும் , மலை சார்ந்த இடமுமான இயற்கை எழில் கொஞ்சும் ஒளிப்பதிவு இதம் , பதம் , இப்படத்திற்கு பெரும் பலம்! பி.தினேஷின் படத்தொகுப்பு ஓ.கே.
கே.திருக்குமரனின் எழுத்து, இயக்கத்தில், இந்திய வுக்கு எதிரான சர்வதேச சதி பின்னலை சரியாக சொல்ல முயற்சிக்காத , கெத்து, ரொம்ப சத்தும் அல்ல... வெத்தும் அல்ல... ஜாலி கும்மாங்குத்து!