யானை
விமர்சனம்
தயாரிப்பு - டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஹரி
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி
வெளியான தேதி - 1 ஜுலை 2022
நேரம் - 2 மணி நேரம் 35 நிமிடம்
ரேட்டிங் - 3/5
தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக கமர்ஷியல் படங்களையே மட்டும் இயக்கி வரும் இயக்குனர்களில் ஹரியும் ஒருவர். நெல்லை, தூத்துக்குடி சுற்றுவட்டாரங்கள் மட்டுமே அவரது படங்களின் கதைக்களமாக இருக்கும். இந்தப் படத்தில் ராமேஸ்வரத்தை கதைக்களமாக்கி இருக்கிறார். அது மட்டுமே அவரது முந்தைய படங்களில் இருந்து கொஞ்சம் மாறியிருக்கிறது. மற்றபடி அதே குடும்பம், ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் என படம் நகர்கிறது. இருந்தாலும், எந்த இடத்திலும் தொய்வில்லாமல் பரபரப்பாக திரைக்கதையை நகர்த்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
ராமேஸ்வரத்தில் பிவிஆர் குடும்பம் என பல தொழில்களைச் செய்யும் பெரிய குடும்பம் ராஜேஷ் குடும்பம். மறைந்த முதல் மனைவி மகன்கள் சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ், இரண்டாவது மனைவி ராதிகாவின் மகன் அருண் விஜய். பிவிஆர் குடும்பத்திற்கும், சமுத்திரம் என்பவரின் குடும்பத்திற்கும் நீண்ட நாள் பகை. அருண் விஜய் அதிரடியான இளைஞராக இருப்பதால் பிவிஆர் குடும்பத்திற்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் சமுத்திரக்கனியின் மகள் அம்மு அபிராமி, முஸ்லிம் இளைஞர் ஒருவரைக் காதலித்து அவருடன் ஓடி விடுகிறார். அம்முவின் காதல் பற்றி தெரிந்தும் அதை தன்னிடம் மறைத்ததற்காக அருண் விஜய்யை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் சமுத்திரக்கனி. ராதிகாவும் மகனுடன் போய்விடுகிறார். அம்மு அபிராமி எங்கே சென்றார் என்பது யாருக்கும் தெரியவில்லை. சமுத்திரக்கனி சாதிப் பாசத்தால் அம்முவைக் கொல்ல நினைக்க, அவரைக் காப்பாற்ற நினைக்கிறார் அருண் விஜய். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஹரியின் படங்களில் பொருத்தமான கதாபாத்திரத் தேர்வு இருக்கும். அது இந்தப் படத்திலும் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். தன்னுடைய முந்தைய படங்களின் காட்சிகள் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் புதிய காட்சிகளை யோசித்திருக்கிறார் ஹரி.
தனது மாமா ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் முதல் முறையாக இணைந்திருக்கும் படம். அருண் விஜய்யை தன்னுடைய இயக்கத்தில் எப்போதோ நடிக்க வைத்திருக்கலாம் ஹரி என படம் பார்த்ததும் சொல்ல வைக்கிறது. ஹரியின் இயக்கத்தில் விக்ரம், சூர்யா எந்த அளவிற்கு ஆக்ஷனில் நடித்திருந்தார்களோ அதே அளவிற்கு அருண் விஜய்யும் நடித்திருக்கிறார். முறுக்கேறிய உடம்புடன் தன் குடும்பத்தைக் காப்பாற்ற எப்போதுமே துடிப்புடன் இருக்கிறார் அருண் விஜய். அண்ணன்கள் மீது வைத்திருக்கும் பாசம், அண்ணன் குழந்தைகள் மீது வைத்திருக்கும் பேரன்பு, பிரியா பவானி சங்கர் மீதான காதல், எதிரிகள் யாராக இருந்தாலும் தூக்கிப் போட்டு மிதிக்கும் தைரியம் என அருண் விஜய் ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக இந்தப் படத்தில் உயர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான, பாந்தமான ஹீரோயின்களில் ஒருவர் பிரியா பவானி சங்கர். எந்தவித கிளாமரும் காட்டாமல் தன் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்தால் ஒரு நடிகை பெயரெடுக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். தான் துரோகம் செய்துவிட்டதாக அருண் விஜய் கூறும் காட்சியில் அவருக்குப் பதிலடி கொடுத்து உண்மையைப் பேசும் காட்சியில் பிரியா பிரமாதப்படுத்திவிட்டார்.
கேஜிஎப் வில்லன் ராமச்சந்திர ராஜு இரண்டு வேடங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். அதிக வேலையில்லை, ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்து நடந்துவிட்டுப் போகிறார். அருண் விஜய் அண்ணனாக சாதிப் பாசம் மிக்கவராக சமுத்திரக்கனி, மற்ற அண்ணன்களாக போஸ் வெங்கட், சஞ்சீவ். ராஜேஷ், ஜெயபாலன், தலைவாசல் விஜய், ஐஸ்வர்யா ஆகியோரும் படத்தில் உண்டு. அருண் விஜய்யின் அம்மாவாக ராதிகா, சமுத்திரக்கனியின் மகளாக அம்மு அபிராமி. மற்ற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் வாயந்த காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.
யோகி பாபு படம் முழுவதும் வருகிறார். ஒரு சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். புகழ் கதாபாத்திரம் திணித்தது போலவே இருக்கிறது. இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை நீக்கியிருந்தாலும் பரவாயில்லை.
ஜிவி பிரகாஷ் இசையில், 'சண்டாளியே…' பாடல் ரசிக்க வைக்கிறது. ராமேஸ்வரம் சுற்று வட்டாரங்களை வளைத்து வளைத்து படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத். ஆண்டனியின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறது.
வழக்கமான ஆக்ஷன் படம்தான் என்றாலும் சரியான சென்டிமென்ட், அளவான காதல் என தனது டிரேட் மார்க் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.
யானை - பலத்துடன்…
யானை தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
யானை
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்