Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சி-3

சி-3,s 3
24 பிப், 2017 - 16:55 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சி-3

சிங்கம், சிங்கம்-2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா, அனுஷ்கா ஜோடியுடன் ஸ்ருதிஹாசனும் சேர்ந்து இன்னுமொரு நாயகியாக நடிக்க, ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜாவும், ஜெயந்திலால் தவலும் இணைந்து தயாரிக்க, இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் வந்திருக்கும் போலீஸ் ஆக்ஷ்ன் படமே "சி-3".

ஆஸ்திரேலியாவில் இருந்து கப்பல், கப்பலாக கண்டெயினர்களில் ஆந்திரா - விசாகப்பட்டினம் வரும் மருத்துவ கழிவுகளையும், கம்பியூட்டர் கழிவுகளையும் அழிக்காமல், அவற்றை இந்திய மனித உயிர்களை துச்சமென மதித்து சட்டத்திற்கு புறம்பாக வினியோகம் செய்து, மக்களை உபயோகிக்க செய்து, காசாக்கும் இண்டர்நேஷனல் மோசடி கும்பலுக்கும், நேர்மையான போலீஸ் அதிகாரி துரைசிங்கம் - சூர்யாவிற்க்குமிடையில் நடக்கும் ஆக்ஷன் அதிரடிகள் தான் "சி-3 " படத்தின் கதையும், களமும். இது கூடவே, இந்த எபிசோட்டில் சூர்யாவுடன் ஸ்ருதிஹாசனுக்கு ஏற்படும் காதலையும், முந்தைய சிங்கம், சிங்கம் - 2 படங்களின் வாயிலாக தொடரும் அனுஷ்காவின் மனனவி உறவு முறையையும் கலந்துகட்டி சி-3 படம் மொத்தத்தையும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்த முற்பட்டு அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருகின்றனர் சி-3 படக் குழுவினர்.

ஆந்திரா விசாகபட்டினத்திற்கு போலீஸ் கமிஷனரை கொன்றது யார்? என கண்டுபிடிக்க, ஸ்பெஷலாய் வருகிறார், தமிழ்நாட்டில் முந்தைய சிங்கம், சிங்கம்-2 படங்களில் சாதனைகள் பல செய்த போலீஸ் அதிகாரி துரைசிங்கம் - சூர்யா. சிங்கிளாக இரயிலில் தடபுடலாக வந்து இறங்கும் அவரை இரயில்வே ஸ்டேஷனிலேயே தீர்த்து கட்டவருகிறார்கள் சப் - வில்லன் ரெட்டியின் ஆட்கள். அத்தனை பேரையும் ஒன்றரை டன் வெயிட்டோடு ஒங்கி அடித்து ஓட விடும் துரைசிங்கமாக சூர்யா, வழக்கம் போலவே வாழ்ந்திருக்கிறார்.

ஆரம்ப காட்சியில் மட்டுமல்ல... அடுத்தடுத்த காட்சிகளிலும், "பொண்ணுங்க போலீஸ் ஸ்டேஷன் பக்கம் வரக்கூடாது..." என்றும், "நான் பார்த்ததை எல்லாம் திங்கும் ஓநாய் அல்ல... பசிச்சா மட்டும் திங்கும் சிங்கம்... இப்போ, கொலை பசில இருக்கேன்....", "ஒரு செக்யூரிட்டி பர்பஸுக்குக் கூட தாலிய கழட்ட மாட்டேன்னு சொன்ன என் ஓய்பை, நான் டிவர்ஸ் பண்ணிட்டதா சொல்ல வேண்டியதாயிடுச்சு..." என "பன்ச்" வசனங்கள் பேசியபடி பக்கா போலீஸாக வளைய வருகிறார்.

அதே நேரம், தமிழ்நாடு போலீஸை தரங்கெட்ட போலீஸ்... என பேசும் வில்லனின் ஆளை துப்பாக்கி முனையில் வீழ்த்துவதும், "போலீஸ்காரன் ஒதுங்கறான்னா பதுங்கறான்னு அர்த்தம்..., பதுங்கறான்னா... பாயப்போறான்னு அர்த்தம்..." எனப் "பன்ச்"சாக பேசும் போலீஸை சிலேகிக்கும் வசனங்களும் மட்டும், தியேட்டரில் டைமிங் காமெடியாகி சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. மற்றபடி, ஆஸ்திரேலியாவுல, அவர் பண்ணும் அதிரடிகள் எல்லாம் அசத்தல்.

இரு நாயகியரில் ஒருவராக ஒரு பக்கம் ஐபிஎஸ் படிக்கப் போறேன்... அதனால் ஆட்டோகிராப் வேணும் எனக்கேட்டு அலையும் பரபரப்பு பத்திரிகை யுவதி திவ்யாவாக ஸ்ருதிஹாசனும், மற்றொரு பக்கம், எங்க ஆபிஸ்ல இரண்டு சைன் பண்ணின செக் காணமப் போயிடுச்சு என... கணவரை சந்திக்க வரும் காவ்யாவாக அனுஷ்காவும் போட்டி போட்டு கதைக்கும் கவர்ச்சிக்கும் பயன்பட்டிருக்கின்றனர். அதிலும், கூடுதலாக, "யேய், எல்லோரையும் பார்க்கிறாரு, உன்னை பார்க்க மாட்டேங்கிறாரு...." எனும் தோழியிடம், "எல்லாரையும் பார்க்காம என்னைப் பார்த்தா நான் ஸ்பெஷல்.... எல்லாரையும் பார்த்து என்னை பார்க்காம போனா... நான் ரொம்ப ஸ்பெஷல்" என்ற படி சூர்யாவை ஜொள்விடும் ஸ்ருதிஹாசன், பெண் பத்திரிகை நிருபராக இப்படத்தில் கிளாமருக்கு மட்டும் பெரிதும் உதவியிருக்கிறார்.

கடலை உருண்டை, சுடலை உருண்டை, கமலா, விமலா, அமலா ஆரஞ்ச் மற்றும் ரெஸ்ட் ரூம் காமெடிகள் மூலம் வீரபாபு எனும் வீரமாக சூரி, காமெடி எனும் பெயரில் ஆங்காங்கே செமயாய் கடிக்கிறார். கூடவே ரோபோ சங்கரும், சாம்ஸும் சேர்ந்து கொண்டு கடிக்கின்றனர்.

"நீ குப்பைய நோண்டுனா, நான் உன் குடும்பத்துல நோண்டுவேன்...." என ஆஸ்திரேலியாவில் இருந்து அன்னோன் கால் செய்து, துரைசிங்கத்தை வம்பிற்கிழுக்கும் ஆஸ்திரேலியா அல்ட்ரா மார்டன் வில்லன் விட்டவாக வரும் புதுமுகவில்லன், "ரெட்டி இதுவரை போலீஸ் ஸ்டேஷன்ல கால்வச்சதுல்ல...." எனும் பில் - டப்புடன் வரும் ரெட்டியாக வரும் ஆந்திர வில்லன் நடிகர், அமைச்சராக வரும் சுமன், கம்பியூட்டரை ஹேக் பண்ணி சிங்கத்திற்கு உதவும் நிதின் சத்யா, ஆந்திர போலீஸ் உயர் அதிகாரி சரத்பாபு, போலீஸ் கணவரை பறிகொடுத்து பரிதாபமாய் பேசும் ராதிகா, சிங்கத்தின் அப்பாவாக ராதாரவி, மாமனாராக நாசர், ஆஸ்திரேலியாவில் டி.சி சூர்யாவுக்கு உதவும் இமான் அண்ணாச்சி, போண்டா மணி, கமிஷனர் ஜெயப்பிரகாஷ், ஆசிரியர் ஜோ மல்லூரி, துறைமுக அதிகாரி பிரேம், ஹரீஷ், ராமன், வெங்கட், நளினி, யுவராணி... உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பக்காவாக பளிச்சிட்டிருப்பது கச்சிதம்.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் "எஸ் சோனி சூப்பர் சோனி...", "முதன் முறையாக பெண்ணே உன்னைப் பார்த்தேன்..." உள்ளிட்ட பாடல்கள் முந்தைய சிங்கம் பட பாடல்கள் அளவுக்கு இல்லை என்றாலும், சிலேகிக்கும் படி இருப்பது ஆறுதல்!

ப்ரியனின் ஒளிப்பதிவில் பாரின் லொகேஷன்களிலும், பனிப் பிரதேசங்களிலும் பாடல் காட்சிகளும், சிலபடக்காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கும் பளிச், பளிச் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

கனல் கண்ணனின் அதிரடி அனல் பறக்கும் சண்டை காட்சிகளும் அப்படியே! கே.கதிரின் கலை இயக்கம் டபுள் ஒ.கே. வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய் இருவரது படத்தொகுப்பில், "இவர் வெட்டுவார்... என அவரும், அவர் வெட்டுவார்... என இவரும் நிறைய வளவள காட்சிகளை கத்திரிக்காமல் விட்டிருப்பது...." ரசிகனுக்கு ஒரு மாதிரி பின் பாதியில் பெரும் சோர்வை தருவதை இயக்குனர் ஹரியும், மேற்படி, படத்தொகுப்பாளர்களும் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.

"ஆம்பளைங்கள காட்டிக் கூடுக்கக் கூடாது... பொம்பளைங்களை கூட்டிக் கொடுக்கக் கூடாது..." என்றபடி எக்கச்சக்கமாய் பேசும் நாயகி ஸ்ருதிஹாசனில் தொடங்கி, "உன் உடம்புக்கு நல்ல ஆளுங்க கிடைக்கும் உன் காயத்துக்கு நல்ல சிகிச்சையும் கிடைக்கும்..." என தன்னால், அடிபட்ட வெளிநாட்டுப் பெண்ணைப் பார்த்து வில்லன் விட்டல் வரை... டபுள், டிரிபிள் மீனிங்கில் அடிக்கடி பலரும் பேசுவது ஹரியின் எழுத்து, இயக்கத்தில் இது காவல்துறை சம்பந்தப்பட்ட படம் தானா? என சந்தேகத்தை கிளப்புகிறது.

சரியாக புரிந்து கொள்ளாது, தவறாக செய்தி பிரசுரித்த தன்னை அரெஸ்ட் செய்யும் சூர்யாவை பார்த்து ஐ லவ் யூ சொல்லும் ஸ்ருதியைப் பார்த்து, ரசிகனுக்கு தியேட்டரில் சிரிப்பு தான் வருகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக., மாநிலங்கள் பல கடந்து பயணிகள் விமானத்தில் ஏறி தப்பிக்கும் வில்லனை, ரன்வேயில் பறக்கத் தயாராகி பாயும் விமானத்தை காரில் சேஸ் பண்ணி வில்லன் விமான ஜன்னல் வழியாக பார்க்க, முந்தி சென்று விமானத்தை தாண்டி சென்று எதிரில் திரும்பி வந்து காரை நிறுத்தி கைது செய்வதெல்லாம் ஒவரோ ஓவராகத் தெரிவது மட்டுமின்றி ரசிகனுக்கு குபீர் சிரிப்பைத் தருகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேல், "சிங்கம் தன் வேட்டையைத் தொடரும்...." எனும் எழுத்துக்களுடன் சிங்கம் - 4 க்கு கட்டியம் கூறி முடியும் சி-3-யின் எண்ட் கார்டு ரசிகனை மேலும் சிரிப்பில் தள்ளுவது க்ளைமாக்ஸ் காமெடி!

ஆகமொத்தத்தில், "சீரியஸாய் முடிந்திருக்க வேண்டிய ஆக்ஷ்ன் படமான ‛சி-3, இப்படி, சிரிப்பாய் முடிவது, அவ்வளவு சிறப்பாய்... செழிப்பாய்... தெரியவில்லை! "சி-3 - சா பூ திரி!"
-------------------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்
வெளிநாடுகளில் இருந்து சட்டத்திற்கு விரோதமாக மருத்துவ மற்றும் மின்னணு கழிவுகளை, இந்தியாவில் கொண்டு வந்து கொட்டும் கும்பலுக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் போராட்டம் சிங்கம் - 3.

ஆநதி்ரா போலீஸ் கமிஷனரைக் கொன்ற மர்மநபர்களைக் கண்டு பிடிக்கத்தான். தமிழகத்திலிருந்து அழைக்கப்படுகிறார் துரைசிங்கம் (சூர்யா). கொன்றவர்கள் யார் என்பதை மட்டும் கண்டுபிடிக்காமல், அவரைக் கொல்ல என்ன காரணம் அதன் பின்னணியில் உள்ள சர்வதேச சதிக் கும்பல் எது? என்று ஆணிவேர் வரை கண்டுபிடிக்கும் சிங்கமாய் கர்ஜிக்கிறார் சூர்யா. வில்லன்களை ஒன்றரை டன் வெயிட்டோடு ஓங்கி அடித்து ஓடவிடும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டல்.

ஆட்டோகிராப் வாங்கும் சாக்கில் சூர்யாவை ஒருதலையாக லவ்வும் ஸ்ருதி, சங்கம் - 2வில் ஹன்ஸிகா ஜெராக்ஸ், அனுஷ்கா சிங்கம் 1, 2ல் காதலி இதில் மனைவி. கவர்ச்சிக்கும் டான்ஸுக்கும் பயன்படுத்தியதுபோல சறுக்குகிறார்கள் இருவரும்.

ஆந்திரா லோக்கல் தாதா எம்.எஸ். ரெட்டிக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. சர்வதேச வில்லனாக வரும் தாக்கூர் அனூப்சிங்கிடம் மிரட்டல் உண்டு என்றாலும் தமிழ் சினிமாவுக்கான வில்லத்தனம் மிஸ்ஸிங்.

சூரி, ரோபோஷங்கர், இமாம் அண்ணாச்சி இருந்தும் பெரிதாக எடுபடவில்லை காமெடி.

வசனங்களும் பின்னணி இசையும் காதைக் கிழிக்கின்றன. ஏன் இந்த கொலைவெறி?

படத்தின் கூடுதல்பலம் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும்தான் மூன்று மணி நேரப்படமா என்று சொல்லும் அளவிற்கு புல்லட் வேகம்.

விறுவிறுப்பான மசாலா படத்தைக் கொடுத்திருக்கிறார் என்றாலும் மருத்துவக் கழிவுகளை மையப்படுத்தி ஒரு சமூக அக்கறையை ஊட்டியுள்ளதற்காக இயக்குநர் ஹரிக்கு பாராட்டுகள்.

சிங்கம் - 3 : கர்ஜனை

குமுதம் ரேட்டிங் - ஓகே
--------------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்
பழைய சிங்கங்கள் வெற்றியடைந்தன. சரி, அதற்காக அச்சு அசலாக அதே ஃபார்முலாவில் இனனொரு சிங்கமா? இன்னும் வரும் என்று மேலம் திகிலூட்டுகிறீர்களே நியாயமா?

தற்கால மரபுப்படி இதிலும் ஒரு சமூகத் தீமை (மருத்துவ மற்றும் மின்னணுக் கழிவுகள் பிரச்னை); அதை எதிர்த்து வெற்றி பெறும் கதாநாயகன்; நூல் பிடித்து லேசாகத் துப்பறிதல்; சடாரென்று வெட்டி வெட்டி இழுக்கும் சில நடனங்கள்; நம்பவே முடியாத அசுர பலச் சண்டைகளுக்கு நடுவே துளியூண்டு கதை என்று ஜல்லியடித்திருக்கிறார்கள்.

பரோட்டா சூரியின் கோணங்கித்தனங்கள் அபத்தத்தின் உச்சம். அதிலும் அருவருப்பான கெட்ட வார்த்தையின் ஓரெழுத்தை மாற்றி அவர் உச்சரிப்பது கொடுமை. பீப் ஆர்வலர்களே! எல்லோரும் எங்க போயிட்டீங்க?

ரோபோ சங்கரை குணச்சித்திர நடிகராக்க முயற்சி நடந்திருக்கிறது. கோன் ஐஸ் கோப்பையில் குண்டு மிளகாய் பஜ்ஜி பொருந்துமா. சொல்வீர்!

படத்தில் தேவையே இல்லாத பாத்திரம் ஸ்ருதிஹாசன். அதிலும் அவரது கரகரத்த குரலும், ஆடை வடிவமைப்பும் தாங்கலைடா சாமி!

வேகமான படம் என்று காண்பிக்க மிக விரைவாய் காட்சிகளைத் தொகுத்திருப்பது வேகமாக ஓடும் ரயிலுக்குள் அமர்ந்திருப்பவர்களை வெளியிலிருந்து ஜன்னல் வழியாகப் பார்ப்பதுபோல இருக்கிறது. துளிகூட சஸ்பென்ஸ் என்பதே இல்லாமல், வில்லன்கள் எல்லோரையும் ஆரம்பத்திலேயே காண்பித்துவிடுகிறார்கள். அவர்கள் செய்யும் குரூரமான பாதகச் செயல்களில் ஒரே ஒரு கொலையை மட்டும் கண்டுபிடிக்க ஆந்திரா போலீஸில் யாருமே இல்லாமல் நமது துப்பறியும் சிங்கம் அழைக்கப்படுகிறதா'க்கும்'!

தேவையில்லாமல் வெளிநாட்டுக் காட்சிகளுக்குப் பணத்தை கொட்டியிருக்கும் அக்கறையில் கொஞ்சமாவது ஆந்திர சட்ட சபைக் காட்சிக்கு மெனக்கெட்டிருக்கலாம்.

நகைச்சுவை என்ற பெயரில் நளினியை நடனமாட விட்டிருப்பது கற்பனை வறட்சி.

சூர்யா அடித்து வீசும் ஆள் ஒருவர் எடைபோடும் தராசில் விழ, அது ஒன்றரை டன்னைக் காண்பிப்பது நுட்பம்!

ரயில் நிலையத்தில் இறங்கும் சூர்யாவின் சண்டை முடிந்ததும், சாவகாசமாக ஆந்திர போலீஸ் ஸ்பாட்டுக்க வருகிறது. (திரைப்படப் போலீஸ் என்றாலே அப்படித்தானோ?)

சூர்யாவுக்கு போலீஸ் வேடம் கனகச்சிதம். என்னவொரு மிடுக்கு! நடையுடை பாவனை எல்லாமே அசத்தல்.

அடிவயிற்றில் இருந்து கூக்குரல் இடும் தீம் சாங் இதிலும் உண்டு. பிரியனின் ஒளிப்பதிவு சூப்பர்! மிக அதிநவீனத் தொழில் நுட்பதஙண்களை அட்டகாசமாகக் கையாண்டிருக்கிறார்கள். அதற்கும் ஒரு சபாஷ்!

வில்லனிடம் தொலைபேசியில் சூர்யா, 'நான் உங்கள் ஆள்' என்கிறார். ஜெகஜ்ஜால வில்லன் அதை அப்படியே நம்பிவிடுகிறாராம். காதில் ஒரு கூடைப் பூ!

விமானம், ஹெலிகாப்டர், கார், ஆட்டோ, கப்பல், லாரி, இரு சக்கர வாகனங்கள் எனப் படத்தில் திறமையாக நடித்திருக்கும் பாத்திரங்கள் அநேகம்!

மொத்தத்தில் சிங்கம்: சுமார் ரகம்!வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in