Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பூஜை

பூஜை,Poojai
04 நவ, 2014 - 13:50 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பூஜை

தினமலர் விமர்சனம்


ஹரி இயக்கத்தில், தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால் நடித்திருக்கும் திரைப்படம், விஷால்-ஸ்ருதிஹாசன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம், விஷால் சொந்தமாக தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தீபாவளி விருந்தாக வந்திருக்கும் படம் தான் பூஜை.


கோயம்புத்தூரில் பெரிய பெரிய பிஸினஸ் எல்லாம் செய்யும் பெரிய குடும்பத்து வாரிசு, வாசு எனும் விஷால். ஆனால் ஒருசின்ன மனவருத்தத்தில் குடும்பத்தை பிரிந்து காய்கறி மார்க்கெட்டில் வட்டிக்கு விட்டு பக்காவாக சொந்தக்காலில் வாழுகிறார் விஷால். எதிர்பாராமல் ஷாப்பிங் மால் ஒன்றில் சந்திக்கும் திவ்யா எனும் ஸ்ருதிஹாசன் உடன் முதலில் நட்பும், அதன்பின் காதலும் கொள்கிறார் மனிதர்.


பொள்ளாச்சியில் பெரிய மனிதர் அந்தஸ்த்துடன் வாழும் கூலிப்படை தலைவன் அன்னை தாண்டவம் எனும் வில்லன் முகேஷ் திவாரியிடம் மோதுகிறார். சொந்த பகைக்காவும், அதேநேரம் விஷாலின் குடும்பத்துடனான பெரும்பகைக்காவும் விஷாலை தீர்த்துக்கட்ட துடிக்கும் முகேஷ், விஷாலை வென்றாரா.? விஷால், முகேஷை கொன்றாரா.? எனும் அதிரடி ஆக்ஷ்ன் கதையுடன், விஷால்-ஸ்ருதியின் காதல் களியாட்டத்தையும் கலந்துகட்டி அதிரடியாக, அதேநேரம் லவ், காமெடி, சென்ட்டிமென்ட் என ஜனரஞ்சகமாக தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி, பூஜை போட்டிருக்கிறார் இயக்குநர் ஹரி!


வாசு எனும் வாசுதேவனாக விஷால், செய்யாத குற்றத்திற்காக குடும்பத்தை பிரிந்து தாயின் அன்பிற்கு ஏங்கும் காட்சிகளிலாகட்டும், ஸ்ருதிஹாசன் உடனான காதல் காட்சிகளாகட்டும், ஒற்றை ஆளாய் 30-40 ஆட்களை அடித்து துவம்சம் செய்வதிலாகட்டும், சூரியுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் கலக்குவதிலாகட்டும்... அனைத்தையும் அசால்ட்டாக செய்து சக்கைபோடு போட்டிருக்கிறார். கீப்ட்-அப் விஷால்!


ஸ்ருதி, திவ்யாவாக நடிப்பிலும், இளமை துடிப்பிலும், 16 அடி, இல்லை இல்லை... 32 அடி பாய்ந்திருக்கிறார். அம்மணி காட்டுவது ஓவர் கிளாமர் என்றாலும் அது ஓவராக தெரியாதது ஸ்ருதியின் ப்ளஸ்!


பரோட்டா சூரி - பிளாக் பாண்டி - இமான் அண்ணாச்சி கூட்டணி, கவுண்டமணி-செந்தில் அண்ட் கோவினரை நம் கண்முன் ரொம்ப நாளைக்கு அப்புறம் நிறுத்துகிறது என்றால் மிகையல்ல. அதிலும் அந்த உரித்த வாழைப்பழ காமெடி செம சிரிப்பு.


விஷால் - ஸ்ருதி - சூரி அண்ட் கோவினர் மாதிரியே, போலீஸ் ஆபிசராக வரும் சத்யராஜ், விஷாலின் அம்மாவாக வரும் ராதிகா, சித்தாரா, ரேணுகா, கெளசல்யா(பழைய கதாநாயகிகள் மீது இயக்குநர் ஹரிக்கு அப்படி என்ன ஈர்ப்போ...?), தலைவாசல் விஜய், ஜெய்பிரகாஷ், பிரதாப் போத்தன், வில்லன் முகேஷ் திவாரி உள்ளிட்ட ஒவ்வொரு கேரக்டரும் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், இப்படியே... என தொடங்கும் பாடல் உள்ளிட்ட 6 பாடல்களும் நச் என்று இருக்கிறது. ப்ரியனின் ஒளிப்பதிவு, வி.டி.விஜயன்-டி.எஸ்.ஜாய் இருவரது படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், பூஜைக்கு மாவிலை தோரணம் கட்டியிருக்கின்றன.


ஹரியின் எழுத்து-இயக்கத்தில், பூஜை படம் படு ஸ்பீடாக செல்வது, இந்த தீபாவளி ரேசில், இளைய தளபதியை காட்டிலும், புரட்சி தளபதியின் படத்திற்கு மவுஸை கூட்டியிருக்கிறது.


ஆகமொத்தத்தில், விஷால்-ஹரி கூட்டணியின் பூஜை - ஆர்டினரி பூஜை அல்ல, அசத்தும் அதிரடி ஆயுத பூஜை!---------------------------------------------------------------------குமுதம் சினி விமர்சனம்
அம்மா ராதிகாவால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வீட்டை விட்டு விரட்டப்படும் விஷால், அதே அம்மாவைச் சுற்றி ஒரு பிரச்னை எழும்போது மீண்டும் வீட்டுக்கு அழைக்கப்படும் சின்னக் கதைதான்.


ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடம்பு, அதிரடி ஆக்ஷன் என்று பார்ப்பவர்களையெல்லாம் ஒற்றை ஆளாக நின்று பொளந்து கட்டுகிறார் விஷால். நடுவில் பயபக்தியாக காதலும் செய்கிறார். அம்மா சென்டிமெண்ட் வேறு போதாதா?


பசுமையான கிராமம், சர்சர்ரென சீறிப்பாயும் கார்கள், அரிவாள்கள் என்றே அடையாளம் காணப்பட்ட ஹரிக்கு இந்த முறையும் அதே களம்தான். என்ன, லாஜிக்தான் கொஞ்சம் மிஸ்ஸிங்.


முறைப்பெண்ணிடம் தான் தவறாக நடக்கவில்லை என்று அம்மாவிடம் விஷால் ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா என்ன?


பளிச்சென்று இருக்கிறார் ஷ்ருதிஹாசன். பாடல் காட்சிகளில் கூடுதல் பளிச். "இத பாரு, நானும் உன்னைக் காதலிக்கிறேன். ஆனா உன்னைவிட பெட்டரா ஒருத்தன் கிடைச்சா போய்டுவேன் ஓ.கேவா? என்று அவர் பேசுவது அதிர்ச்சி என்றாலும் ரசிக்கத்தான் வைக்கிறது.


சத்யராஜை டம்மியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். "கடைசியில என்னை செத்த பொணத்தைச் சுட வச்சுட்டியேடா மட்டும் பஞ்ச்!


சூரி பழைய காமெடிகளை சுட்டே காலத்தை ஓட்டுகிறார். அவமானப்பட்டு ஒன்றுமே அறியாதது போல் வந்து விசாரிப்பது மட்டும் கிச்! கிச்!


"இப்படியே எங்க வேணா தூக்கிக்கிட்டு போ! (ஒரு) பாடலில் யுவன் தெரிகிறார்.


பூஜை - ரத்த பூஜை!


குமுதம் ரேட்டிங்: ஓகேவாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

பூஜை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in