சாமி 2
விமர்சனம்
நடிப்பு - விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர்
இயக்கம் - ஹரி
தயாரிப்பு - தமீன்ஸ் பிலிம்ஸ்
இசை - தேவிஸ்ரீபிரசாத்
வெளியான தேதி - 21 செப்டம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 37 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
2003ம் ஆண்டில் வெளிவந்த 'சாமி' படத்தின் தொடர்ச்சியாக 15 வருடங்கள் கழித்து 'சாமி ஸ்கொயர்' இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
இரண்டாம் பாகத்தில் த்ரிஷா நடிக்க சம்மதிக்கவில்லை என்பதற்காக இதில் முதல் பாகத்தின் கதையைச் சுருக்கமாகச் சொல்வதற்காக த்ரிஷாவுக்குப் பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷை கிராபிக்ஸ் மூலம் மாற்றி இடம் பெறச் செய்து அதிர்ச்சியளித்துவிட்டார்கள்.
15 வருடங்கள் ஆனாலும், முதல் பாகத்தில் இருந்த அதே பரபரப்பு, விறுவிறுப்பு, ஆவேசம், கோபம் ஆகியவற்றை இந்த இரண்டாம் பாகத்திலும் அதிகப்படியான கமர்ஷியல் ஐட்டங்களுடன் சேர்த்திருக்கிறார் இயக்குனர் ஹரி.
கதைக்காகவெல்லாம் அவர் பெரிதாகக் கவலைப்படவில்லை. திரைக்கதையில் உள்ள டிவிஸ்ட்டுகளுக்குத்தான் யோசித்து யோசித்து காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்.
முதல் பாகத்தில் வில்லன் பெருமாள் பிச்சையைக் கொலை செய்கிறார் டெபுடி கமிஷனரான ஆறுச்சாமி. ஆனால், காவல் துறை ஆவணத்தில் பெருமாள் பிச்சை காணாமல் போய்விட்டதாகத்தான் இருக்கிறது. அவனைக் கொன்றதை ஆறுச்சாமி மறைத்துவிட்டார். காணாமல் போன அப்பாவைத் தேடி இலங்கையிலிருந்து அவருடைய மகன்கள் ஓஏகே தேவர், ஜான் விஜய், பாபி சிம்ஹா ஆகியோர் திருநெல்வேலி வருகிறார்கள். அண்ணன் தம்பிகளில் பாபி சிம்ஹா தான் அதிரடி ஆக்ஷனில் இறங்குபவர். அப்பா காணாமல் போகவில்லை, ஆறுச்சாமியால் கொல்லப்பட்டுவிட்டார் என்பதைக் கண்டுபிடிக்கிறார். அதோடு, ஆறுச்சாமியையும் அவருடைய மனைவியையும் கொலை செய்கிறார். 28 வருடங்களுக்குப் பிறகு ஆறுச்சாமியின் மகன் ராமசாமி ஐபிஎஸ் படித்து முடித்துவிட்டு திருநெல்வேலிக்கு வந்து போலீஸ் அதிகாரியாகப் பதவி ஏற்று பெருமாள் பிச்சையின் வாரிசுகளைப் பழி வாங்கினாரா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.
சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால் அப்பாவைக் கொன்றவரை வில்லன் பழி வாங்குகிறார். பதிலுக்கு அப்பாவைக் கொன்ற வில்லனை ஹீரோ பழி வாங்குகிறார், அவ்வளவுதான். இதைத்தான் நீட்டி முழக்கி 2 மணி நேரம் 37 நிமிடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹரி.
சும்மா சொல்லக் கூடாது, வயதானாலும் அதைத் துளியும் காட்டிக் கொள்ளாமல் 30 வயது இளைஞன் போல தன்னுடைய பரபரப்பான நடிப்பால் ராமசாமி கதாபாத்திரத்தை அவ்வளவு உயிர்ப்புடன் காட்டியிருக்கிறார் விக்ரம். 2003ல் ஆறுச்சாமியைப் பார்த்தற்கு எப்படி இருந்தாரோ அப்படியேதான் இந்த 2018லும் இருக்கிறார் ராமசாமி. முதல் பாகத்தின் த்ரிஷா மாற்றத்திற்காக இரண்டாம் பாகத்தில் வரும் முதல் பாகத்திற்காக ஐஸ்வர்யாவுடன் 'மொளகா பொடி' எனக் கொஞ்சி டூயட் பாடுகிறார் விக்ரம். ஆனால், த்ரிஷா பெயர் வாங்கிய அந்த 'மாமி' கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா துளி கூட செட் ஆகவில்லை. விக்ரமிற்கும், ஐஸ்வர்யாவிற்கம் துளி கூடப் பொருந்தவில்லை. அதே சமயம் விக்ரம், கீர்த்தி சுரேஷ் காதல் அந்த 'சாமி' விக்ரம், த்ரிஷா காதல் போல கொஞ்சம் சுவாரசியமாகவே இருக்கிறது.
போலீஸ் கதாபாத்திரம் என்றால் இப்படித்தான் நடிக்க வேண்டும் என சிலர் ஏற்கெனவே ஒரு உருவாக்கத்தை இங்கே விட்டிருக்கிறார்கள். அதில் 'தங்கப்பதக்கம்' சிவாஜிகணேசன், 'மூன்றுமுகம்' ரஜினிகாந்த், 'சாமி' விக்ரம் ஆகியவை மறக்க முடியாத போலீஸ் கதாபாத்திரங்கள். ஹரி, மூன்று முறை 'சிங்கம்' படத்தை உருவாக்கினாலும் இந்த 'சாமி' முன் அந்த சிங்கங்கள் கூட பின் வாங்கும் அளவிற்கு ஆவேச ஆக்டிங்கில் அதிரடி காட்டியிருக்கிறார் விக்ரம். சண்டைக் காட்சிகளில் தனி ஆர்வத்துடன் நடித்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷுக்கு அதிக வேலையில்லை. மத்திய மந்திரியின் மகளான அவர், விக்ரமை ஒரே ஒரு காட்சியில் புரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். அதன் பின் தமிழ் சினிமா காதல் கதாநாயகிகளின் விதிப்படி நாயகனையே துரத்திக் கொண்டிருக்கிறார்.
வில்லனாக பாபி சிம்ஹா, இது மாதிரியான அதிரடி ஆக்ஷன் படங்களில் வில்லன் கதாபாத்திரம் பவர்புல்லாக இருந்தால்தான், நாயகன் கதாபாத்திரமும் எடுபடும். பாபி சிம்ஹாவின் வில்லத்தனம் பத்து தெலுங்குப் பட வில்லன்களைப் பார்ப்பது போல உள்ளது. தமிழ் சினிமாவில் இளம் வில்லன்களுக்கு நிறையவே பஞ்சம். பாபி சிம்ஹா அந்த வெற்றிடத்தை தாராளமாக நிரப்பிவிடலாம்.
சூரிக்குத் தனியாக நடிக்கும் போது நகைச்சுவை துளியும் வருவதில்லை. படத்தில் அவர்தான் சிரித்து விழுந்து புரண்டு நடிக்கிறார். நமக்குத்தான் துளி கூட சிரிப்பு வர மாட்டேன் என்கிறது. விரைவில் நல்ல நகைச்சுவை எழுத்தாளர்களை சூரி அணுகுவது அவருக்கு நலம். ஓஎகே தேவர், ஜான் விஜய் டம்மி வில்லன்கள். இவர்களைக் கொல்ல விக்ரம் திட்டம் தீட்டும் காட்சிகள் அற்புதமான பிளான்கள். மத்திய மந்திரியாக பிரபுவும் படத்தில் இருக்கிறார்.
திருநெல்வேலி, இலங்கை, டில்லி, ராஜஸ்தான் என பல முக்கிய இடங்களில் பயணிக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சிகளின் ஆக்ஷன் பிரம்மாண்டம் இதுவரை தமிழ் சினிமாவில் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். படத்தில் ஆகாவென ஆச்சரியப்பட வைக்கும் உழைப்பு ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா மற்றும் அவருடைய குழுவினருக்குச் சொந்தம்.
தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடல்களில் இரைச்சல் அதிகம். ஹரி சொன்ன கதையைக் கேட்டதுமே பத்து பாலகிருஷ்ணா தெலுங்குப் படத்திற்கான பின்னணி இசையையும், அதிரடியான பாடல்களையும் கொடுத்துவிட்டார் போலிருக்கிறது. பல காட்சிகளில் தமிழ்ப் படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லை.
ஹரி படத்தில் இவைதான் இருக்கும் என்று தெரிந்தே படம் பார்க்கச் செல்பவர்கள் ஒரு கமர்ஷியலான ஆக்ஷன் படத்தைப் பார்க்கலாம். இந்த 'சாமி ஸ்கொயர்' முடிவில் 'சாமி க்யூப்'புக்கும் 'லீட்' வைத்துவிட்டார்கள்.
சாமி ஸ்கொயர் - ஆக்ஷனில் மட்டும் இரு மடங்கு
சாமி 2 தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
சாமி 2
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
விக்ரம்
நடிகர் விக்ரமின் இயற்பெயர் ஜான் கென்னடி. 1966ம் ஆண்டு ஏப்ரல் 17ம்தேதி பரமக்குடியில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். விக்ரமின் ரசிகர்கள் அவரை சீயான் என்ற பட்டப் பெயருடன் அழைக்கிறார்கள். பிதாமகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். ராவணன் படத்தின் மூலம் இந்தியிலும் நடிக்கத் தொட்ங்கிய விக்ரம், தனது தனிப்பட்ட வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்தவர்.