ட்ரிப்,Trip

ட்ரிப் - பட காட்சிகள் ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - யோகிபாபு, கருணாகரன், சுனைனா
தயாரிப்பு - சாய் பிலிம் ஸ்டுடியோஸ்
இயக்கம் - டென்னிஸ் மஞ்சுநாத்
இசை - சித்துகுமார்
வெளியான தேதி - 5 பிப்ரவரி 2021
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் பேய்ப் படங்களைப் பார்த்து ரசிகர்களுக்குப் போரடித்துவிட்டது என நினைத்து பேய்க்குப் பதிலாக மனிதர்களையே கொன்று சாப்பிடும் ஹாலிவுட் கேனிபால்ஸ் வகை படம்தான் இது. எப்படியும் சில ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்துத் தான் இந்தக் கதையை உருவாக்கியிருப்பார்கள் என்பது படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே புரிந்து விடுகிறது.

இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் முடிந்த அளவிற்கு நமக்கு திகில் அனுபவத்தைக் கொடுக்க நினைத்திருக்கிறார். ஆனால், நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் அந்தத் திகில் காட்சிகளை அப்படியே நகைச்சுவைக் காட்சிகளாக மாற்றி அந்தக் திகிலையே கெடுத்து விடுகிறார்கள்.

சுனைனா மற்றும் அவருடைய நண்பர்கள், நண்பிகள் ஒரு குழுவாக மலைப்பிரதேசம் ஒன்றிற்கு வருகிறார்கள். வழியில் யோகி பாபு, கருணாகரன் ஆகியோரைப் பார்த்து கொலைகாரர்கள் என நினைத்து விடுகிறார்கள். காட்டிற்கு நடுவில் உள்ள ஒரு பழங்கால வீட்டை ரிப்பேர் செய்யச் செல்லும் யோகிபாபு, கருணாகரன் ஆகியோரைப் பார்த்து சுனைனா நண்பர்கள் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ஒரு இரவில் தனியாக வரும் சுனைனான அவர்களைப் பார்த்து மயங்கி விழ, அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைக்கிறார்கள். சுனைனா அவர்களிடம் சிக்கிவிட்டதாக நினைத்து அவரது நண்பர்கள் அவரை மீட்க முயற்சிக்கிறார்கள். அந்த சமயத்தில் நண்பர்கள் குழுவில் இருவர் கொல்லப்படுகிறார்கள். பின்னர் தான் ரத்த வெறி பிடித்த மனித மாமிசம் சாப்பிடும் சிலர் அதற்கெல்லாம் காரணம் எனத் தெரிய வருகிறது. அந்த மனிதர்களிடமிருந்து அனைவரும் தப்பினார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தக் கதையைப் படித்ததுமே இது என்ன ஹாலிவுட் படம் என பலரும் கூகுளில் தேட முயற்சிப்பார்கள். ஹாலிவுட் படங்களை எதற்குத் தேட வேண்டும். இதற்கு முன் வந்த எத்தனையோ தமிழ்ப் பேய்ப் படங்களில் இருந்தே கதையை எடுத்திருக்கலாம். பேய்க்குப் பதிலாக மனித மாமிசம் சாப்பிடும் நபர்கள் என்றால் கதை புதிதாக மாறிவிடப் போகிறது.

ஒன்று படத்தை முழுவதும் திகிலுடனேயே காட்டியிருக்க வேண்டும். அல்லது நகைச்சுவையுடனேயே காட்டியிருக்க வேண்டும். ஒருவர் கொல்லப்பட்டால் ஒரு நிமிடம் மட்டும் நண்பர்கள் அழுதுவிட்டு அடுத்த பலிக்குத் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்கிறார்கள். பார்த்தாலே சிரிப்பு வரும் யோகி பாபு, கருணாகரன் ஆகியோரைப் பார்த்து சுனைனா மற்றும் நண்பர்கள் பயப்படுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

ஒரு மலைப் பிரதேசத்தில் ஒரு பழைய வீட்டை செட் போட வசதியாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து அந்த இடத்திலேயே மொத்தப் படத்தையும் முடித்திருக்கிறார்கள். படத்தின் பட்ஜெட் என்று பார்த்தால் யோகி பாபுவின் சம்பளம் மட்டும்தான் அதிகமாக இருந்திருக்கும். எல்லாருக்கும் போட்டிருக்கும் ஒரே ஒரு டிரஸ்தான். ஒரு மூணு ஜீப், அனைவர் மீதும் தெளிப்பதற்கு ரத்தக் கறை மேக்கப் அதுதான் செலவு, அப்புறம் அந்த பழைய வீடு செட்.

யோகி பாபு, கருணாகரன் இருவரது பெரையும் சேர்த்தே டைட்டிலில் போடுகிறார்கள். அதற்கேற்றபடி இருவரும் படம் முழுவதும் இணை பிரியாமலேயே இருக்கிறார்கள். யோகி பாபுவுக்கு அழகன் என்ற பெயரும், கருணாகரனுக்கு அமுதன் என்ற கதாபாத்திரப் பெயர்களை வைத்திருக்கிறார் இயக்குனர். கிடைக்கிற கேப்பில் இருவரும் கமெண்ட்டுகளை அடித்து சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். கடைசியில் துப்பாக்கியை எடுத்து தாங்கள் தான் படத்தின் ஹீரோக்கள் என உணர்த்துகிறார்கள்.

இவர்களிருவரைத் தவிர படத்தில் தெரிந்த முகம் சுனைனா, மொட்ட ராஜேந்திரன். சுனைனா ஏதோ ஹீரோயினிசம் செய்யப் போகிறார் என எதிர்பார்த்தால் ஆரம்பத்தில் அடிக்கடி மயங்கி விழுகிறார். கிளைமாக்சில் சரி, ஹீரோயினிசம் செய்யப் போகிறார் போலிருக்கிறது என எதிர்பார்த்தால் காலில் ஏதோ குத்தி தடுக்கி விழுகிறார். கடைசி வரை அவரை ஹீரோயினிசம் செய்ய விடாமலேயே படத்தை முடித்துவிட்டார் இயக்குனர். கிளைமாக்சில் அந்த வீட்டைக் கொளுத்தும் வேலையையாவது கொடுத்திருக்கலாம்.

ஆரம்பத்தில் வந்த மொட்ட ராஜேந்திரனை படத்தின் நடுவில் மீண்டும் அழைத்து வருகிறார்கள். சரி அவரும் ஏதோ செய்யப் போகிறார் எனப் பார்த்தால் குண்டடிபட்டு கீழே விழுகிறார். அப்புறம் அந்த இடத்தை விட்டு எப்போது, எங்கே, எப்படி சென்றார் என்பது தெரியவேயில்லை. கிளைமாக்சில் கூட ஆளைக் காணோம்.

ஒளிப்பதிவாளருக்கு மட்டும் நிறைய வேலை, வளைத்து வளைத்து, சுற்றிச் சற்றி, ஓடியோடி, காட்சிகளை எடுத்துத் தள்ளியிருக்கிறார்.

ரொம்ப போரடிக்குது, ஏதோ ஒரு படம் போகணும்னு நினைக்கிறவங்க வேணா படத்துக்குப் போகலாம். யோகி பாபுவும், கருணாவும் கொஞ்சம் கருணை காட்டுகிறார்கள் கலகலப்புக்கு.

ட்ரிப் - ரீபெயின்ட் வண்டியில்...

 

ட்ரிப் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ட்ரிப்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓