கண்ணே கலைமானே
விமர்சனம்
நடிப்பு - உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர்
இயக்கம் - சீனு ராமசாமி
இசை - யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பு - ரெட் ஜெயன்ட் மூவீஸ்
வெளியான தேதி - 22 பிப்ரவரி 2019
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
ஒரு திரைப்படம் என்றால் அதில் ஒரு கதை இருக்க வேண்டும், கதாபாத்திரங்கள் அழுத்தமாக வடிவமைக்கப்பட வேண்டும், படத்தில் ஒரு முடிச்சு வர வேண்டும், அது எப்படி தீர்க்கப்பட உள்ளது என்ற திரைக்கதை வேண்டும். இப்படி சில விஷயங்களாவது இருந்தால்தான் அந்தப் படம் ரசிகர்களால் ரசிக்கப்படும்.
ஆனால், கண்ணே கலைமானே படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தைப் பற்றிப் படக்குழுவினர் அனைவருமே பலமான பில்ட்-அப் கொடுத்தார்கள். அதில் பத்து சதவீதம் கூட படத்தில் இல்லை என்பதுதான் உண்மை.
கிராமியக் கதை, இயற்கை விவசாயத்தின் பெருமையைச் சொன்னது ஆகிய இரண்டு விஷயங்களுக்காக மட்டுமே இயக்குனர் சீனு ராமசாமியைப் பாராட்டலாம். மற்ற எந்த இடத்திலும் ஒரு இயக்குனருக்கான பணியை கண்ணைத் துடைத்துத் துடைத்துப் பார்த்தாலும் அது மாயமானாகத்தான் தெரிகிறது.
கிராமத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திக் கொண்டு இயற்கை விவசாயியாக இருக்கிறார் விவசாயம் படித்த உதயநிதி ஸ்டாலின். கிராம வங்கியில் மேலாளர் ஆக வந்து சேர்கிறார் தமன்னா. உதயநிதியின் நல்ல எண்ணத்தைப் பார்த்ததும் அவர் மீது காதல் கொள்கிறார் தமன்னா. அப்பா, பாட்டி உதயநிதியின் காதலை எதிர்க்க, பத்து நாள் பட்டினி கிடந்து காதலி தமன்னாவைத் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பின் உதயநிதி பொண்டாட்டி தாசனாகவே மாறிவிட்டார் என பாட்டி வடிவுக்கரசி சந்தேகப்பட்டு, பேரன் உதயநிதியை தமன்னாவிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார். ஆனால், அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துக் கிடக்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
முதல் முறையாக கிராமத்து இளைஞராக உதயநிதி ஸ்டாலின். பிஎஸ்சி விவாசயம் படித்தவராக, இயற்கை விவசாயத்தை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவராக, கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு வங்கியில் கடன் வாங்கிக் கொடுப்பவராக இந்தக் காலத்தில் அநியாயத்திற்கு மிக மிக நல்லவராக இருக்கும் கமலக்கண்ணன் கதாபாத்திரத்தில் கண்ணும் கருத்துமாக நடித்திருக்கிறார். அதோடு கலைமானாக இருக்கும் தமன்னாவையும் கண்ணுக்குக் கண்ணாக காதலித்து காப்பாற்றுகிறார். வசனம் பேசாமலேயே ரியாக்ஷனில் கூட உதயநிதி தன் நடிப்பைக் காட்டுவதெல்லாம் இந்தப் படத்தில்தான் நடந்தேறியிருக்கிறது.
கிராம வங்கி மேலாளர் ஆக தமன்னா. காட்டன் புடவை, காலர் வைத்த ஜாக்கெட், அழுத்தி வாரப்பட்ட மல்லிகைப் பூ சூடிய தலை என தமிழ் சினிமாவில் ஒரு புது கதாபாத்திரம். ஒரு வட இந்திய நடிகை, இப்படிப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பது சிறப்பு. தமன்னா சொந்தக் குரலில் பேசி நடித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் அவர் மீது பரிதாபம் வரும்படியான ஒரு மாற்றம். கண்களில் லேசாக கண்ணீரை வரவழைக்கிறார் தமன்னா.
உதயநிதியின் நண்பர்களில் தீப்பெட்டி கணேசன் தான் ஆங்காங்கே பன்ச் காமெடி வசனம் பேசி கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். உதயநிதியின் அப்பா பூ ராமு, பாட்டி வடிவுக்கரசி, அவர் மீது அதிகமான பாசத்தை வைத்திருப்பவர்கள். தாங்கள் கண்டிப்பானவர்கள் என ஒரு சில காட்சிகளில் மட்டும் காட்டுகிறார்கள். வசுந்தரா, உதயநிதியின் பள்ளித் தோழியாம். வில்லன் நாகேந்திரனிடம் உதயநிதி அடி வாங்கும் போது மட்டும் தோழியாக வந்து காப்பாற்றுகிறார். அத்துடன் அவர் வேலை முடிகிறது.
யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசைக்கென பெரிதாகக் காட்சிகள் எதுவுமில்லை. ஜலேந்தர் வாசன் ஒளிப்பதிவில் சோழவந்தான் விவசாய பூமியின் அழகைக் காட்டுவதில் வியக்க வைக்கிறது.
உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, பூ ராமு, வசுந்தரா, நாகேந்திரன் என அவர்களுக்காக கதாபாத்திரம் எல்லாம் ஓகே. ஆனால், அந்தக் கதாபாத்திரங்கள் ஏதோ தாங்களும் படத்தில் இருக்கிறோம் என்ற ரீதியிலேயே வந்து போவது போலத்தான் உள்ளது.
கிளைமாக்சுக்கு முன்பாக மட்டும் உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி ஆகியோருக்கு மொத்த படத்திலும் ஒரே ஒரு அழுத்தமான காட்சியை வைத்து படத்தை முடிக்கிறார் இயக்குனர். இடைவேளை விட்டேயாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதோ ஒரு காட்சியில் இடைவேளை. தர்மதுரை படத்தைக் கொடுத்த சீனு ராமசாமியின் அடுத்த படமா இது என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கண்ணே கலைமானே - என கொஞ்ச முடியவில்லை.
கண்ணே கலைமானே தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கண்ணே கலைமானே
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
உதயநிதி ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் எனும் அடையாளத்தோடு ஒரு தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். குருவி, ஆதவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த உதயநிதி, ராஜேஷ்.எம் இயக்கிய, ''ஒரு கல் ஒரு கண்ணாடி'' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் வெற்றி பெறவே தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா படங்களில் நடித்தார். தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் எனும் மூன்று அடையாளங்களோடு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.