கோழிப்பண்ணை செல்லதுரை
விமர்சனம்
தயாரிப்பு - விஷன் சினிமா அவுஸ்
இயக்கம் - சீனு ராமசாமி
இசை - என்ஆர் ரகுநந்தன்
நடிப்பு - ஏகன், சத்யா தேவி, பிரிகிடா
வெளியான தேதி - 20 செப்டம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
அண்ணன், தங்கை பாசக் கதைகளில் மற்றுமொரு பாசக் கதை. சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட அண்ணன், தங்கை எப்படி வளர்ந்து ஆளாகி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள போராடுகிறார்கள் என்பதை கொஞ்சமே கொஞ்சம் உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
மனைவியின் கள்ளக் காதலைப் பற்றித் தெரிந்து கொண்ட கணவன், அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கிறார். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவிடுகிறது கள்ளக் காதல் ஜோடி. மனைவி மீது ஏற்பட்ட வெறுப்பால் தனது சிறு வயது மகன், மகளை அம்மாவிடம் விட்டுவிட்டு போகிறார் கணவன். அந்த சிறு வயது மகன்தான் வளர்ந்து இளைஞனான ஏகன், அவரது தங்கை சத்யா தேவி. கோழிப்பண்ணை நடித்தி வந்த யோகிபாபுவின் ஆதரவால் வளர்ந்து நிற்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் சத்யாவுக்கு ஒருவர் மீது காதல் வருகிறது. அதைத் தெரிந்த அண்ணன் ஏகன், தங்கை மீது கோபம் கொண்டு பேசாமல் இருக்கிறார். இந்த நிலையில் அண்ணன், தங்கை பாசம் என்ன ஆனது, தங்கையின் காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அண்ணன், தங்கை வாழ்க்கை, அவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவுக் கரம், அவர்களிடம் புதிதாக வரும் உறவுகள், மீண்டும் வரும் பழைய உறவுகள் என ஒரு குடும்பத்தின் உணர்வுபூர்மான கதை. ஆனால், அந்த உணர்வுபூர்வமான காட்சிகளை இடைவேளைக்குப் பின்தான் வைத்திருக்கிறார் இயக்குனர்.
இதற்கு முன்பு 'ஜோ' படத்தில் கதாநாயகனின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்த ஏகன், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கிராமத்துக் கதை, கதாபாத்திரங்கள் என்பதால் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு மேக்கப் இல்லாமல் நடிக்க வைத்திருக்கிறார்கள். செல்லதுரை கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார் ஏகன். உணர்வுபூர்வமான காட்சிகளில் நடிப்பதுதான் அறிமுக நாயகனுக்குரிய சவால். அந்த விதத்தில் அதைச் சரியாகவே செய்திருக்கிறார். இந்தப் படம், கதாபாத்திரத்தைப் பொறுத்தவரையில் பாஸ்மார்க் வாங்கிவிட்டார்.
ஏகன் தங்கையாக நடித்திருக்கும் சத்யா தேவி சினிமாத்தனமில்லாத முகம். தன் மீது அண்ணன் கோபம் கொண்டு பேசாமல் இருக்கும் போதான காட்சிகளில் அழுது தீர்த்து அனுதாபத்தைப் பெற்றுவிடுகிறார். கதாநாயகனைத் துரத்தித் துரத்தி காதலிப்பவராக பிரிகிடா. இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படிப் பார்க்கப் போகிறோமோ?.
யோகிபாபு நடித்திருக்கும் படம், அதனால் காமெடிக் காட்சிகள் அதிகமிருக்கும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும். இந்தப் படத்தில் படம் முழுவதும் அவர் வந்தாலும் குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். தன்னால், அப்படியும் நடிக்க முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் புரிய வைத்திருக்கிறார்.
என்ஆர் ரகுநந்தன் பின்னணி இசையில் சில உணர்வுபூர்வமான காட்சிகள் உருக வைக்கிறது. சிறப்பான பாடல்களுக்கான வாய்ப்புகள் இருந்தும் மிஸ் செய்துள்ளார்.
படத்தின் இடைவேளை வரை திரைக்கதை எதை நோக்கிப் போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. அதற்கடுத்து பிரச்னைகள் வந்தாலும் அவை அடுத்த சில காட்சிகளிலேயே தீர்க்கவும்படுகிறது. கதையாகப் பார்ப்பதை விட ஒரு குடும்பத்தின் வாழ்வியலாக எழுதுவோம் என சீனு எழுதியிருக்கிறார் போலிருக்கிறது. அவரது முந்தைய படங்களில் உள்ள அழுத்தம், ரசனை இந்தப் படத்தில் எங்கோ ஓரிடத்தில் மட்டுமே எட்டிப் பார்த்துச் செல்கிறது.
கோழிப்பண்ணை செல்லதுரை - கைநழுவிப் போன கோழி…