ரஜினியின் தர்மதுரை டைட்டிலுடன் மீண்டும் வந்திருக்கும் தமிழ் படம், விஜய் சேதுபதி - தமன்னா ஜோடி முதன்முதலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம். விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகம் செய்த சீனு ராமசாமியின் இயக்கத்தில், விஜய் மீண்டும் நடித்து வெளிவந்திருக்கும்படம். ஸ்டியோ 9 - ஆர்.கே. சுரேஷின் தயாரிப்பில் வந்திருக்கும் தரமான திரைப்படம்... என ஏகப்பட்ட பின்னணி பெருமைகளுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "தர்மதுரை".
தேனி மாவட்ட கிராமத்தில் இருந்து வந்து மதுரை மருத்துவ கல்லூரியில் தமன்னா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்டவர்களுடன் எம்பிபிஎஸ் படித்து முடித்து டாக்டராகும் விஜய் சேதுபதி, என்ன காரணத்தினாலோ குடி நோயாளியாகி, குடும்பமானத்தை அடிக்கடி கப்பலேற்றுகிறார். அதனால் அவரை கொல்லவும் துணிகிறது குடும்பம்.
அண்ணன், தம்பிகளிடமிருந்து அவர்கள் சீட்டு பிடித்த எட்டு லட்சம் பணத்தோடு, அம்மா ராதிகாவின் பாசத்தால் எஸ்கேப் ஆகும் தர்மதுரை - விஜய் சேதுபதி, அவ்வாறு குடிநோயாளி ஆகக் காரணம் என்ன? குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாரா.? இல்லையா.? தமன்னா - சிருஷ்டி டாங்கே இருவருக்கும் விஜய் சேதுபதிக்குமான உறவு என்ன..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக விடையளிக்கிறது தர்மதுரை படத்தின் மீதிக்கதை. அது இன்னும் சற்றே விறுவிறுப்பாக விடையளித்திருந்ததென்றால் தர்மதுரை சகல தரப்பினராலும் மேலும், கொண்டாடபட்டிருக்கலாம்.
விஜய் சேதுபதி - தர்மதுரையாக, குடிஅடிமை நோயாளியாக, எம்பிபிஎஸ் படித்த டாக்டராக, வழக்கம் போலவே வாழ்ந்திருக்கிறார். யார் சொன்னது உங்களை தப்டாட்டம் என்று.... நீங்க தான்சரியான ஆட்டம்.... என ஊர் பெரிசு சீயான் சாவில், டான்ஸ் ஆட வந்தவர்களை கலாய்த்து, பச்சக்குழந்தை முகம்.... என அவர்கள் பாடும் போது, தான் போட்டிருக்கும் கஞ்சா கருப்புபாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து கொண்டாடுவதில் தொடங்கி, குடிநோயாளியாக., அடிக்கடி, தன்னிலை மறப்பது வரை... சகலத்திலும் சரியாக பொருந்தி நடித்திருக்கிறார். பழ கோஷ்டி மாணவர்களாக இவரும் தமன்னா, சிருஷ்டி உள்ளிட்டோர் பண்ணும் மருத்துவ கல்லூரி அலப்பறைகளும் அசத்தல்.
தமன்னா, மருத்துவக் கல்லூரி மாணவி சுபாஷினியாக கச்சிதம். நடை, உடை, பாவனைகளிலும் நல் மருத்துவராக கவருகிறார். கவர்ச்சி விஷயத்தில் சற்றே ஏமாற்றம்.
சிருஷ்டி டாங்கே - ஸ்டெல்லாவாக விஜய்க்கு ஆர்ட்டின் வரைந்து கொடுத்து ஒன் சைடாக லவ் பண்ணும் பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கிராமத்து மின்னலாக மிரட்டியிருக்கிறார். டாக்டர் எழுத்து கோழி கிறுக்கல் என கலாய்ப்பது ஹாசம், ஹாஸ்யம்.
சேதுபதி சகோதரர்களின் பாசக்காரத் தாயாக ராதிகா சரத், கிழக்கு சீமையிலே படத்திற்குப் பின் கவனிக்க வைத்திருக்கிறார்.
ஹெச் ஓடி காமராஜாக ராஜேஷின் பெயர் காரணம் அவர் நடிப்பு மாதிரியே உருக்கம்.
எவிடன்ஸாக வரும் கஞ்சா கருப்பு மற்ற படங்களைக் காட்டிலும் அடக்கி வாசித்து அசத்தியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், சகோதரன் சவுந்திரபாண்டியன், அண்ணன் அருள்தாஸ், ஏட்டு சித்தப்பாவாக ஈ.ராமதாஸ், அன்பு செல்வி ஐஸ்வர்யா ராஜேஷின் தோழியாக வரும் ஓய்.ஜி.மதுவந்தி.. உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
சுகுமாரின் ஒளிப்பதிவு, வழக்கம் போலவே ஒவியப்பதிவு. யுவன்சங்கர் ராஜாவின் இசையில், மக்க கலங்குதப்பா ...., போய் வாடா யேன் பொலி காட்டு ராஜா... , நான் காற்றிலே அலைகிற... , ஆண்டிப்பட்டி கனவாய் காத்து... பாடல்கள் சுப ராகம். பின்னணி இசையும் கதையோடு கலந்து கலக்குகிறது. காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பில் பெரிதாக குறையில்லை .
சீனு இராமசாமியின் எழுத்து, இயக்கத்தில் செகண்ட் இயர் சின்ட்ரோம், உடல்தானம், ரேகிங்... உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்கள் எடுத்தாளப்பட்டிருந்தாலும் படம் ஆமை வேகத்தில் நகர்ந்திருந்தால் கூட பரவாயில்லை... நத்தை வேகத்தில் நகர்கிறது என சொல்லும் அளவிற்கு ஸ்லோவாக நகர்வது பலவீனம். மற்றபடி, "தர்மதுரையில் இல்லை... பெரிய குறை!"
ஆக மொத்தத்தில், "தர்மதுரை, மருத்துவத்துறை படம் என்றார்கள்... அவ்வாறு, இல்லாதது சற்றே குறை. மற்றபடி, எல்லாம் நிறை!"
-----------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
சீனுராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் மீண்டும் ஒரு கிராமத்து மண் சார்ந்த படம் தர்மதுரை. மருத்துவர்கள் கிராமங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற விதையை இதன் மூலம் விதைக்க முயற்சித்த இயக்குநரைப் பாராட்டலாம்.
'தர்மதுரை' பாத்திரத்தைத் தாங்கி நடிப்பில் வியப்படைய வைக்கிறார் விஜய் சேதுபதி. போதையில் செய்யும் அலப்பரை. சாவு வீட்டில் குத்து டான்ஸ் தமன்னா, சிருஷ்டியுடனான நட்பில் காட்டும் உணர்ச்சி என்று பின்னியெடுக்கிறது விஜய்சேதுபதியின் நடிப்பு.
சிருஷ்டிடாங்கே கொஞ்ச நேரம் என்றாலும் மனதில் நிற்கிறார். தமன்னா கதைக்குப் பெரும்பலம். நோ கவர்ச்சி ப்ளஸ். ஐஸ்வர்யா ராஜேஷூம் மனதில் ஒட்டிக் கொள்கிறார்.
ராதிகா கிராமத்து தாய்க்கான வார்ப்பு கஞ்சா கருப்பு, அருள்தாஸ் வந்து போகிறார்கள். பேராசிரியராக ராஜேஷிடம் அந்த தேரணை மிஸ்ஸிங்.
தேனி, ஆண்டிபட்டி கிராமத்து வசனத்தை, குளுமையை ஒளிப்பதிவில் உணரவைக்கிறார். ஒளிப்பதிவாளர் 'மக்கா கலங்குதப்பா' 'ஆண்டிப்பட்டி காத்தே' என்று பாடல் இசையும் பின்னணியும் ரகளை.
விஜய்சேதுபதி பணத்துடன் ஊரை விட்டுப் போனபிறகு அந்த குடும்பம் படும் அவஸ்தையை கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் என்றாலும் எல்லாவற்றையும் 'விஜய்சேதுபதி' என்ற ஒற்றை சுமைதாங்கி மேல் ஏற்றிவைத்து, அவரும் நம்மை ஏமாற்றாமல் தாங்கிச் செல்வது சபாஷ்.
தர்மதுரை: செயல்துரை
குமுதம் ரேட்டிங்: ஓகே
-----------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
வரதட்சணைப் பிரச்னையில் ஏற்படும் பெண்ணின் தற்கொலை, ஆணின் குடிப்பழக்கம், மறு வாழ்வு என்று எதார்த்த கதை. படம் ஆரம்பித்து அரைமணி நேரம் வரை ஒரு கிராமத்தையும் அதில் உள்ள விஜய்சேதுபதி குடும்பத்தையும் அழுத்தமாக மனத்தில் பதியவைப்பது அபாரம்.
என்னதான் மீசையை எடுத்துவிட்டாலும், விஜய் சேதுபதியைக் கல்லூரி மாணவனாகக் காண்பித்திருப்பது முதலில் 'கெதக்' என்றாகிவிடுகிறது. ஆனால் இவரைவிட 'இளம்' கதாநாயகர்களைப் பார்த்துப் பழகிப் போயிருப்பதால் மனம் சமாதானமாகிவிடுகிறது. ஒளிப்பதிவும், படப்பிடிப்புக்குத் தேர்வு செய்திருக்கும் இடங்களும் அபாரம். கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்போல் இருக்கிறது.
இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள்! அதிலும் ஸ்ருஷ்டி டாங்கேவையும் அவரது ஸ்ருங்காரக் கன்னக் குழியையும் சரியாகவே பயன்படுத்தவில்லை. 'கல்லூரி' திரைப்படத்துக்குப் பின்னர் தமன்னா பெயர் ஸ்கோர் பண்ணும் படம் இது. சின்னப் பகுதியில் வந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் அழுத்தமான பாத்திரம், நடிப்பு.
'கயல்' பெரேராவின் யதார்த்தமான நடிப்பு அருமை. ஆரம்பக் காட்சியே டாஸ்மாக்தான். அதன் பின்னர் பல இடங்களிலும் மது தொடர்கிறது. மன வேதனைக்கு மது ஒன்றே மாற்றுவழி என்ற தவறான கற்பிதம் வலியுறுத்தப்படுகிறது. கண்டனங்கள்!
விஜய் சேதுபதி மென்மையான உணர்ச்சிகளைப் பல காட்சிகளிலும் நுணுக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் காட்சிகள் பிரமாதம்.
கிராமத்துக் காவல்காரராக வரும் பாஸ்கரும், அவரது மகள் ஐஸ்வர்யா ராஜேஷூம் பாத்திரமாகவே ஒன்றிப் போய்விட்டனர். ஹாட்ஸ் ஆஃப்! ராதிகா இயல்பான கிராமத்துத் தாயாக அசத்துகிறார்.
'அண்ணா' என்ற வாய்க்கு வாய் கூப்பிட்டவரையே திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கும்போது கதாநாயகிக்கு மட்டும் அல்ல... நமக்கும் நெருடலாகத் தான் இருக்கிறது.
பேராசிரியர் ராஜேஷ் நடிப்பில் மின்னுகிறார். வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளை, தனக்கு ஏற்படும் அவமதிப்புகளை அனுசரித்துப்போவது புன்னகை பூக்க வைக்கிற கஞ்சா கருப்பு பாத்திரம் சிரிப்புக்குப் பதில் எரிச்சலையே கிளப்புகிறது.
தமன்னாவின் கருக்கலைப்பு, ஸ்ருஷ்டியின் செகண்ட் இயர் சிண்ட்ரோம், முனியாண்டி பெயர்க் காரணம் என்று சின்னச் சின்ன நகாசு வேலைகள் நறுக். லட்சக்கணக்கான ரூபாய் பணத்தோடு அலையும் கதாநாயகன் அந்தப் பணத்தைப் பார்க்காமலே பல நாட்கள் இருப்பது அபத்தம். நல்லவேளை அந்த பணம் தமன்னாவின் கண்ணில் பட்டதால் படம் முடிவுக்கு வருகிறது.
விறுவிறுவென ஓடும் இன்றைய திரைப்படங்கள் நடுவே, மிக மெதுவாக, அவசரமே இல்லாமல் 'தர்மதுரை' நகர்கிறது. ஒவ்வொரு பாத்திரத்தையும், மன உணர்வுகளையும் வெளிப்படுத்த சீனு ராமசாமி மெனக்கெடுவது தெரிகிறது. தியேட்டரை விட்டு வெளியே வரும்போது மனம் கணக்கிறது.
தர்மதுரை மென்சோகக் கவிதை!
திரையரங்கில் ரசிகர் வந்தவாசி பாஸ்கர் கருத்து: 'நான் விஜய் சேதுபதி ரசிகன். அவரையும் லொகேஷன்களையும் தவிர வேற எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்ல'