Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

நீர்ப்பறவை

நீர்ப்பறவை,Neerparavai
12 டிச, 2012 - 16:52 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நீர்ப்பறவை

 

தினமலர் விமர்சனம்



தமிழக மீனவர்கள், இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் தாத்தா செய்த தவறுகளுக்கு, பிராயசித்தம் தேடிக்கொள்ளும் முகமாக "நீர்ப்பறவை" படத்தை தயாரித்திருப்பாரோ பேரன் உதயநிதி ஸ்டாலின்? என எண்ணும் அளவிற்கு அமைதியாக அரசியலும் பேசி ஆர்ப்பரிக்கிறது இப்படம் என்பதுதான் ஹைலைட்!

கதைப்படி இலங்கையிலிருந்து அகதியாகவும், அப்பா, அம்மாவை இழந்து அநாதையாகவும் நடுக்கடலில் தவிக்கும் நாயகர் விஷ்ணு, குழந்தை வரம் வேண்டி தவிக்கும் மீனவர் தம்பதி "பூ" ராம் - சரண்யா பொன்வண்ணன் ஜோடியால் தத்துபிள்ளையாக வளர்க்கப்படுகிறார். தத்துப்பிள்ளை என்பதால் செல்லப்பிள்ளையாகவும் வளரும் விஷ்ணு, குடிக்கு அடிமையாக வேலை வெட்டி எதுவும் இல்லாமல் ஊர் சுற்றித்திரிகிறார். அவரது வாழ்வில் தென்றலாக நுழைந்து அவரை புயலாக புரட்டி போடுகிறார் நாயகி சுனைனா! கன்னியாஸ்திரி ஒருவரின் வளர்ப்பு மகளான சுனைனாவால், சுனைனாவின் காதலால் மது அடிமைத்தனத்திலிருந்து மீண்டு, மறுவாழ்வு பெறும் விஷ்ணு, சொந்தமாக மீன்பிடி படகு வாங்கி, தனி ஆளாக கடலுக்கு மீன் பிடிக்கவும் போகிறார். அப்புறம்? அப்புறந்தான் கதையே...! சுனைனாவுக்கும் - விஷ்ணுவுக்கும் திருமணம் நடக்கிறது., குழந்தை பிறக்கிறது. ஒதுக்கி தள்ளி‌ய ஊரே மெச்சும்படி மீனவராக வாழ ஆரம்பிக்கும் விஷ்ணுவை, அவர் தனி ஆளாக மீன்பிடிக்க சென்ற ஓர் இரவில் இலங்கை ராணுவம் சுட்டுதள்ளிவிட, "பூ" ராம் மூலம் விஷ்ணுவின் உயிரற்ற உடலும் கிடைத்துவிட, மொத்த குடும்பமும் அவரது உடலை வீட்டிற்குள்ளேயே புதைத்து, விஷ்ணு இறந்ததை மறைத்து 25 வருடங்களுக்கு முன் கடலுக்கு போனவர் கரை திரும்பவில்லை... என்றே கதை கட்டுகிறது. அது ஏன்? எதற்கு...? என்பதில் போதிய அரசியலை புதைத்து, புதிய அத்தியாயம் படைத்திருப்பதில் இயக்குனர் சீனு ராமசாமி இக்கடற்கரையோர கதை மூலம் நம் கண் கரையோரங்களில் நீர் குவளைகளை எட்டிபார்க்க வைத்திருப்பது படத்தின் பெரும்பலம்!

அருளப்பசாமியாக விஷ்ணு மீனவ இளைஞன் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். மொடாக்குடிகாரனாக, சாராயக்கடையே கதி எனக்கிடக்கும் போதும் சரி, அது சாக்கடை... என அக்கடையை உடைக்கும் போதும் சரி, விஷ்ணு சபாஷ் போட வைக்கிறார். கைகால் நடுக்கத்தினை போக்க குடிக்காக ஊரில் கையேந்தி அப்பாவிடம் அடி, அம்மாவிடம் ஆறுதல் தேடும் இடங்களாகட்டும், தேவாலயத்திற்கு காசு வசூலித்து ஊழியம் செய்யும் சுனைனாவிடமே ஊழல், ஊறல் செய்து காசு வசூலித்து குடிப்பதிலாகட்டும் விஷ்ணு மீனவர் அருப்பசாமியாகவே வாழ்ந்து படத்திற்கு ‌பலம் சேர்த்திருக்கிறார். பலே! பலே!!

கன்னியாஸ்திரியின் வளர்ப்புமகள் எஸ்தராக அக்கடற்கரையோர கிராமத்திற்கு வந்து "சாத்தானே கிட்ட வராதே போ..." என விஷ்ணுவை விரட்டுவதும், பின் அவர் திருந்தி செய்யும் நற்காரியங்கள் பார்த்து அவரையே தேவதூதனாக தனது தேவனாக ஏற்றுக் கொள்வதுமாக சுனைனா பிரமாதம்! சுனைனாவின் ஓல்டு கெட்-அப்பாக ப்ளாஷ் பேக்கில், பெண் போலீஸ் அதிகாரியிடம் தன் காதலையும், கதையையும் தன் புருஷனை தானே கொன்று புதைத்துவிட்டதாக புலம்பும் பாத்திரத்தில் நந்திதா தாஸூம் "நச்" "டச்" தேர்வு! பல ரசிகர்களுக்கு அது சுனைனாவா? நந்திதாவா...? என புரியாதததும், குழப்பத்தை தருவதும் படத்தின் பெரும் பலங்களில் ஒன்றாகும்!

விஷ்ணுவின் வளர்ப்புதாய் மேரியாக வரும் சரண்யா பொன்வண்ணன், மகனின் கைகால் நடுக்கத்தை பார்த்து அவர் குடிப்பதற்கு காசு தருவதும், விஷ்ணுவை குடி மறுவாழ்வு மையத்தில் சேர்த்தப்பிறகும் அவருக்கு அவ்வப்போது சரக்கு வாங்கி தரச்சொல்லி "மெல்ல திருத்துங்க..." என அங்குள்ள ஊழியரிடம் காசு கொடுத்து வருவதிலும் சரண்யா மிளிர்கிறார் என்றால், சுனைனாவிடம் "இந்த காலத்து பசங்க நாங்க சொன்ன எங்க கேட்குறாங்க, உன்ன மாதிரி வயசு பொண்ணுங்க ‌சொன்னாத்தான் உடனே கேட்குறாங்க..." என்று பேசும்போதும், ஊரே இலங்கை அகதியான விஷ்ணு கடலுக்குள் மீன் பிடிக்க போகக்கூடாது என தேவாலயத்தின் வாசலில் பஞ்சாயத்தை கூட்டும் போது, "அவன் எங்கள் வளர்ப்பு மகன் தான், மீனவன் அல்ல என்று உங்களால் நிரூபிக்க முடியுமா...?" எனக் கேட்கும் இடங்களிலும் ஜொலிக்கிறார்.

விஷ்ணுவின் வளர்ப்பு அப்பாவாக - லூர்து சாமியாக வரும் "பூ" ராம், சிலுவையாக வரும் அருஸ்தாஸ், அடாவடி ஆப்ரகாம், "யோகி" தேவராஜ், பாதிரியார் அழகம்பெருமாள், ஜோசப்பாரதி - தம்பிராமையா, விஷ்ணுவின் நண்பன் அந்தோணியாக வரும் பிளாக் பாண்டி, சாராயக்கடை எபினேசராக வரும் வடிவுக்கரசி எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்! பேஷ்! பேஷ்!!

முன்பாதியில் விறுவிறுப்பு கம்மி உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும், பாலசுப்ரமணியத்தின் பிரம்மாண்ட ஒளிப்பதிவும், என்.ஆர்.ரகுநந்தனின் யதார்த்த இசை, வைரமுத்துவின் வாழ்வியல் வரிகள் எல்லாமும் சேர்ந்து சீனு ராமசாமியின் எழுத்து - இயக்கத்தில் "நீர்ப்பறவை"யை "பேர் சொல்லும் பறவை" ஆக்கியுள்ளன என்றால் மிகையல்ல!

மொத்தத்தில் "நீர்ப்பறவை" - "பேர் சொல்லும் பறவை"! "இனப்போர் செய்யும் பறவை"யும் கூட!!




-------------------------------------------------------


குமுதம் விமர்சனம்



கடல், அலைகள், மீன்கள், மீனவர்கள், உப்புக்காற்று, மணல் என்று முழுக்க முழுக்க ஒரு மீனவ கிராமத்துக்குள் இருக்கும் ஒருவராக ஆகிவிட்ட உணர்வை நமக்குத் தந்திருக்கிறார் சீனு ராமசாமி.

இலங்கை ராணுவத்தின் கோரத் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைக்கும் ஒரு சிறுவனை தத்து எடுத்துக் கொள்கிறார்கள் சரண்யா, ராம் தம்பதி. குடிகாரனாகத் திரியும் அவனுக்கு சர்ச்சில் பணிபுரியும் சுனைனா மீது காதல். குடியிலிருந்து மீண்டு ஒரு படகுக்குச் சொந்தக்காரனாக ஆகி, சுனைனாவைக் கைப்பிடித்து ஒரு குழந்தையும் பிறந்த பிறகு தனியாக மீன்பிடிக்கப் போகும் விஷ்ணுவை இலங்கை ராணுவம் கொன்றுவிடுகிறது. இதுதான் கதை.

குடிகாரனாகவும், திருந்தி ஜெயிப்பவனாகவும், விஷ்ணு வாழ்ந்திருக்கிறார். கொஞ்சமும் மிகைப்படுத்தாமல் நடித்திருப்பது நன்று.

மேக்கப்பே இல்லாவிட்டாலும் பாவாடை சட்டையுடன் பளிச்சென்று சுனைனா. நல்ல போதையுடன் விஷ்ணு தன் காதலைச் சொல்ல நெருங்கும் போது, சுனைனா அலறி, “சாத்தானே அப்பால் போ’ என்று மிரண்டு எகிறிக் குதித்து ஓடுவது செம கலாட்டா. தியேட்டரில் சிரிப்பலை.

ஓர் இரண்டும்கெட்டான் மகனுக்கு அம்மாவாக நடிக்க சரண்யாவை விட்டால் ஆளில்லை. “நல்ல சரக்கா வாங்கிக் குடிடா’ என்று மகனுக்குக் காசு தருவதாகட்டும், “என்ன மருந்தைக் குடுத்தாங்களோ’ என்று மறுவாழ்வு மையத்தைப் பார்த்து புலம்புவதாகட்டும் சிறந்த வாழ்நாள் அன்னை விருதை பொன்வண்ணனின் சம்சாரத்திற்கு உடனே தந்துவிடலாம்! அவரது கணவனாக வரும் பூ ராம், வெகு இயல்பாக ஸ்கோர் செய்கிறார்.

சுனைனாவை 45 வயதுப் பெண்ணாக மாற்றக் கூடாதா? அதற்கு எதற்கு அந்த வேடத்துக்கு நந்திதா தாஸை புகுத்தியிருக்கிறார்கள்? தேவையில்லாத குழப்பம்!

ரொம்ப நல்லவர் வேடத்திற்கு சமுத்திரகனி.

கடற்கரையோர கிராமத்தை பாலசுப்ரமணியெமின் கேமரா, காதல் செய்திருக்கிறது. அதுவும் மக்களின் மன நிலைக்கு ஏற்ப கடலில் வண்ணம் மாறுவது கவிதை.

ரகுநந்தனின் இசையில் “மீனுக்கு’ பாடல் துள்ளிவிளையாடுகிறது. “பரபர’வும் பக்கா.

அந்த உப்பளக்காரியாக வரும் ஜிங்லி யாருங்க? ஹிஹி!

எல்லாம் சரி, குண்டடி பட்டு இறந்த விஷ்ணுவை ஊருக்கே தெரியாமல் ரகசியமாகக் குடும்பத்தார் ஏன் புதைக்க வேண்டும்? போஸ்ட் மார்ட்டத்தில் கூறு போடுவார்கள், வீட்டுக்காக உழைத்தவன் இங்கேயே இருக்க வேண்டும் என்று அதற்குச் சொல்லும் காரணங்கள் எல்லாமே வெறுப்படிக்கிறது. “நான்தான் கொலை செய்தேன்’ என்று நந்திதா தாஸ் சொல்வது ஒரு சஸ்பென்ஸாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி யோசித்து க்ளைமாக்ஸில் பெரிதாய் ஏமாற்றியிருக்க வேண்டாம்.

நீர்ப்பறவை - மீனவ நண்பன்!

ஆஹா: விஷ்ணு, சுனைனா, சரண்யா, காமிரா

ச்சே: க்ளைமாக்ஸ்

குமுதம் ரேட்டிங்: ஓகே



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

நீர்ப்பறவை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in