2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விஜய் சேதுபதி, சாயிஷா, யோகி பாபு, மடோனா செபாஸ்டியன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர்.
இயக்கம் - கோகுல்
இசை - சித்தார்த் விபின்
தயாரிப்பு - விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ், ஏ அன்ட் பி குரூப்ஸ்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் அட, இப்படியும் ஒரு காதல் படத்தை, நகைச்சுவைப் படத்தை, சமூக சிந்தனை (கடைசியிலாவது) கொண்ட படத்தைக் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்தவர்கள் விஜய் சேதுபதி, இயக்குனர் கோகுல்.

குமுதா, ஹேப்பி அண்ணாச்சி என அந்த ஒரு வசனத்தை இன்றும் ரசிகர்கள் பல மீம்ஸ்களில் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த குமுதா கிளைமாக்சிலாவது ஹேப்பியாக மாறினார், ஆனால், இந்த ஜுங்கா அவ்வப்போது மட்டும் ரசிகர்களை ஹேப்பி ஆக வைத்திருக்கிறார்.

டான் லிங்கா-வின் பேரனும், டான் ரங்காவின் மகனுமான ஜுங்கா-வை அந்த டான் பற்றிய வாசமே வரக் கூடாதென சிறு வயதிலேயே சென்னையை விட்டு கோவைக்கு அருகில் ஒரு கிராமத்தில் வைத்து வளர்க்கிறார் அம்மா. ஆனால், ஒரு கட்டத்தில் ஜுங்காவுக்கு தான் ஒரு டான் வாரிசு என்பது தெரிய வருகிறது. தங்களது பூர்வீக சொத்தான தியேட்டரை ஒரு செட்டியாரிடமிருந்து மீண்டும் வாங்கவும் சென்னைக்கே சென்று டான் ஆக முடிவு செய்கிறார் ஜுங்கா. சென்னை சென்று டான் ஆகி விடுகிறார், ஆனால், அவரால் தியேட்டரை மீட்க முடிந்ததா இல்லையா என்பது தான் இந்த ஜுங்கா.

ஜுங்காவாக விஜய் சேதுபதி. காமெடி டான் ஆக அவரை மாற்றிக் கொள்ள பெரிதும் சிரமப்படவில்லை. அவருக்கு அந்த நகைச்சுவையும் இயல்பாகவே வந்துவிடுகிறது. ஆனாலும், சூப்பர் டீலக்ஸ் படத்தின் படப்பிடிப்பிலிருந்து அப்படியே வந்திருப்பால் போலிருக்கிறது. படம் முழுவதும் அவருக்கு வைத்திருக்கும் ஒட்டு மீசை தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கண்களில் எதற்கு மை வைத்திருக்கிறார் என்றும் தெரியவில்லை. கதாபாத்திரத்திற்காக தன்னை மாற்றிக் கொள்பவர் விஜய் சேதுபதி என பெயரெடுத்தவர். இருப்பினும், இந்தப் படத்தில் ஏதோ ஒரு அவசரத்திற்கு நடித்துக் கொடுத்தது போலவே நடித்திருக்கிறார். ஒய் விஜய் சேதுபதி...ஒய்...?.

ஏறக்குறைய இடைவேளைக்கு கொஞ்சம் முன்னதாகத்தான் வருகிறார் நாயகி சாயிஷா. அழகாக இருக்கிறார், அழகாக ஆடை அணிகிறார், அழகாக நடிக்கிறார், அழகாக நடனம் ஆடுகிறார். ஆனால், அருமையாக நடிக்கிறார் என அடுத்த சில படங்களுக்குப் பிறகாவது எழுதிவிடுவோம் என நாம் நம்புவோம்.

படத்தின் ஆரம்பத்தில் எதற்கு அந்த தெலுங்குப் பெண் மடோனா கதாபாத்திரம். படத்திற்கு அந்தக் கதாபாத்திரம் எதற்கும் பெரிதாகப் பயன்படவில்லை. மடோனாவின் காதலை வேண்டாமென சொல்லிவிட்டு விஜய் சேதுபதி ஓடும் காரணம் மட்டும் சிம்ப்ளி சூப்பர்ப். அந்த 365 புடவை, ஹெலிகாப்டர், டிவி விவாத நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தி விடுகிறது.

யோகி பாபு வரவர வசனம் பேசவில்லை என்றால் கூட ரியாக்ஷனில் சிரிக்க வைத்துவிடுகிறார். இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் காமெடியில் களத் தாண்டவம் ஆட பல வாய்ப்புகள் காட்சிகளில் தெரிகின்றன. ஆனால், சிக்சர் அடிக்க வேண்டிய பல இடங்களில் இருவரும் சிங்கிள் அடிக்கிறார்கள்.

படத்தில் விஜய் சேதுபதியின் அம்மா சரண்யாவும், அவருடைய பாட்டியாக நடித்திருப்பவரும் அவருடைய நடிப்பையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார்கள். சரண்யா விஜய் சேதுபதியிடம் பிளாஷ்பேக்கை சொல்லும் விதமும், போனில் பேசும் விதமும் தனி மிரட்டல் என்றால், பாட்டி சுரேஷ் மேனன் வீட்டில் பேசுவதும் தனி மிரட்டல்.

தனுஷ் மீது இயக்குனர் கோகுலுக்கு என்ன கோபமோ?. படத்தில் 'போயட் தினேஷ்' என்ற ஒரு கதாபாத்திரத்தை வைத்து கிண்டலடித்திருக்கிறார்.


ஒரு சில காட்சிகள் என்றாலும் ராதாரவியிடம் அவரின் அனுபவம் வெளிப்படுகிறது. சுரேஷ் மேனனிடம் அந்த 2400 கோடிக்கான அதிபதி தோற்றம் தெரிகிறது.


சித்தார்த் விபின் பாடல்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். அவ்வளவு பெரிய கோடீஸ்வரியான சாயிஷா, பாரீஸ் வீதிகளில் இறங்கி ஒரு கானா பாட்டிற்காக டான்ஸ் ஆடுகிறார் என்றால் அந்தப் பாடல் எப்படி இருக்க வேண்டும் ?.

பாரீஸ் மாநகரை பாரீர் பாரீர் என பளிச்சென எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் டட்லி. எடிட்டிர் சாபு ஜோசப்பிற்கு இயக்குனர் இன்னும் சுதந்திரம் கொடுத்து காட்சிகளை கட் செய்ய வைத்திருக்கலாம்.

விஜய் சேதுபதி எப்படி நடித்தாலும் பார்ப்பேன் எனச் சொல்லும் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம். ஆனால், விஜய் சேதுபதியிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது இன்னும் நிறைய.....

ஜுங்கா - இன்னும் ஸ்ட்ராங்கா இருந்திருக்கலாம்...

 

பட குழுவினர்

ஜூங்கா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓