"தங்கள், டி.ஆர்.பி ரேட்டிங்கை ஏற்றிக் கொண்டு, நம்பர்-ஒன் சேனல் எனும் மார்கெட்டை பிடிப்பதற்காக பல கொலையும் செய்வார்கள் சில தனியார் டி.வி சேனல் முதலாளிகள்... என டி.வி மீடியாக்களின் சமூக அக்கறை - முகத்திரையை கிழிக்க முயன்றிருக்கிறது இயக்குனர் கே.வி.ஆனந்த் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் தயாரித்து வழங்கியிருக்கும் "கவண்".
விஜய் சேதுபதியுடன் மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர், விக்ராந்த், சாந்தினி தமிழரசன், ஆர்.பாண்டியராஜன், செம்புலி ஜெகன், போஸ் வெங்கட், ஆகாஷ் தீப் சாய்கல்... என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படக் கதைப்படி, பிலிம் இன்ஸ்டிடீயூட்டில் படித்த விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், ஜெகன்... உள்ளிட்டோர் சேர்ந்து ஒரு சில குறும்படங்களை இயக்கிப் பார்த்து எதுவும் சரியாக வராததால் எப்படி, எப்படியோ பிரிந்து போய் பிறகு பிரபல "சென் டி.வி"-யின் அடுத்தடுத்து வேலைக்கு சேர்ந்ததின் மூலம் ஒன்றாகிறார்கள். இதில், சேதுபதியை உயிருக்கு உயிராய் காதலித்த மடோனா, சேதுவின் ஆம்பள புத்தியால் அவரை விலகி இருக்கும் முயற்சியிலும் இருக்கிறார்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டி, அயோக்கிய தனங்கள் பல செய்து அரசியல்வாதியாகி பெரும் புள்ளியான போஸ் வெங்கட்டின் போலி முகத்தை, விஜய் சேதுபதி ரகசியமாக ஷூட் செய்ய, அதை தங்கள் டி.வியில் போட்டுக் காட்டி, வெங்கட்டின் புகழை போட்டுத் தாக்கும் சென் டி.வி., ஒரு கட்டத்தில், அவரோடு செம கட்டிங் பேசி, அவரை அப்துல் கலாமுக்கு நிகராக போற்றி பாடிட முயற்சிக்கிறது. அதுவும் விஜய் சேதுபதி வாயாலேயே அதை செய்ய நினைக்கும் டி.வி. நிர்வாகத்தை எதிர்த்து மடோனா செபாஸ்டியன், ஜெகன்... உள்ளிட்ட தன் சகாக்களுடன் வெளியேறும் விஜய்சேதுபதி, நீதி , நேர்மை பேசிக் கொண்டு முத்தமிழ் டி.வி எனும் பெயரில் போனியாகாத டி.வி சேனல் நடத்திக் கொண்டு, சைடில் மூலிகை மருத்து வியாபாரம் செய்து வரும் விஜய டி.ராஜேந்தரோடு இணைகிறார்.
அதன்பின் சென் டி.வி-அரசியல்வாதி போஸ் வெங்கட் கூட்டணியின் அயோக்கியதனங்களை டி.ஆரின் டிவி வாயிலாக ஏர்-ல் ஏற்றி முத்தமிழ் டி.வியை எப்படி? முக்கிய டி.வி ஆக்குகிறார் சேதுபதி என்பதும், அதற்கு சென் டி.வி முதலாளி ஆகாஷ் தீப், அரசியல் புள்ளி போஸ் வெங்கட்டின் எதிர்ப்பு எப்படி இருக்கிறது..? இறுதி வெற்றி யாருக்கு என்பதும் தான்... "கவண்" படத்தின் கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம். இது கூடவே விஜய் சேதுபதி - மடோனா செபாஸ்டியனின் காதல், ஊடல் - கூடல்களையும் கலந்து கட்டி, கலவரஃபுல் "கவணை" கலர்புல் ஆக்கியிருக்கின்றனர்.
கதாநாயகராக டி.வி.நிருபர் கம் வீடியோ கிராபராக, நேர்முகம் காண்பவராக பன்முகம் கொண்ட திலக்காக விஜய் சேதுபதி, தன் பாத்திரத்தின் கனத்தை அலேக்காக தூக்கி சாப்பிட்டு அசத்தலாக நடித்திருக்கிறார். பலே, பலே. ஆரம்ப காட்சியில் குறும்பட படப்பிடிப்பில் காதலி மடோனா கட், கட் சொன்னதை கட்டி கட்டி பிடி... என சொல்லியதாக கருதி உடன் நடித்த சாந்தினி தமிழரசனை கட்டிபிடித்தபடியே காதலி கண் எதிரில் கனவில் மூழ்குவதில் செபாஸ்டியனின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டு அவரோடு ஊடல் கொள்வதில் தொடங்கி, "நீ என் சேனல்ல ஒரு கறுப்பு ஆட்டை தான் விட்டிருக்கிறாய்... நான் கறுப்பு ஆட்டு மந்தையையே உன் சேனல்ல... மேயவிட்டிருக்கேன் பாரு... என க்ளைமாக்ஸில் சென் டி.வி முதலாளியை வெறுப்பேற்றுவது வரை... விஜய்சேதுபதி தன் பாணி தனி நடிப்பில் வெளுத்துகட்டியிருக்கிறார். சபாஷ்!
நாயகியாக மடோனா செபாஸ்டியன், மலர் எனும் பெண் பாத்திரத்தில் விஜய் சேதுபதியின் காதலியாக வந்தாலும், அழகியாக நின்றாலும், இளம்பெண் நிருபர்களுக்கே உரிய ஆண் மிடுக்கோடு அழகாக அசத்தியிருக்கிறார். "எல்லா ஆம்பள பொறுக்கிகளும் இப்படித்தான்..." என தன் கண்முன் சாந்தினியுடன் சந்தர்ப்ப சூழலால் குறும்பு செய்ய முற்படும் சேதுபதியை கடிந்து கொள்ள முற்படுவதில் தொடங்கி பின் அவரோடு இணைந்து தன் டி.வி. முதலாளியை எதிர்ப்பது வரை... தன் பாத்திரமறிந்து சரியாக செய்திருக்கிறார்.
முத்தமிழ் டி.வி ஓனராக டி.வி சேனல்லை சென்ஸை வைத்துக் கொண்டு, வருமானத்திற்காக மூலிகை மருந்து விற்பன்னராக வரும் டி.ராஜேந்தர் செம ஹாசம். ஒரு காட்சியில் அரசியல் புள்ளி போஸ் வெங்கட், தான், தீரன் மணியரசன், என போன் போட்டு மிரட்ட ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நான், வீரன் மயில்வாகனன்... என ரைமிங் கவுண்ட்டர் கொடுப்பதில் தொடங்கி, இது என்ன சேனலா, இல்ல பைவ் ஸ்டார் ஹோட்டலா? என சென் டிவி அலுவலகத்தை பார்த்து வியந்தபடி, அதான் நீ நான் அவ்வளவு கூப்பிட்டும் நம்ம டிவிக்கு வர மாட்டேங்கறீயா? என ஆர்.பாண்டியராஜனைப் பார்த்து அப்பாவியாக கேட்பது, சென் டிவி முதலாளியிடம், "நான் கிள்ளிவிட்ட பிள்ளை உனக்கு கொடுக்குதா தெரல்லை..., இது தான் என் நாக் அவுட் உன் டி.வி உன் கையாலேயே பிளாக் அவுட்டு" என்று க்ளைமாக்ஸில் கிண்டல் அடிப்பது வரை... தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒவ்வொன்றினும் "முத்தமிழ் டி.வி" மயில்வாகனமாக டி.ஆர் நடிக்கவில்லை, தன் பாணியில் வாழ்ந்திருக்கிறார். வாவ்.
சென் டி.வி செய்தி ஆசிரியராக ஆர்.பாண்டியராஜன், சமூக சேவகர் அப்துலாக விக்ராந்த், சேதுபதி நடிக்க மடோனா இயக்கும் குறும்பட கிளுகிளுப்பு நாயகியாக சாந்தினி தமிழரசன், கண்டதையும் காமெடியாக காமநெடி தொணிக்க பேசும் ஜெகன், மாறுவேட போலீஸ் கமிஷ்னராக நேர்மையான நாசர், சென் டி.வி உரிமையாளராக வில்லனாக ஆகாஷ் தீப் சாய்கல், அயோக்கிய அரசியல்வாதி போஸ் வெங்கட் உள்ளிட்டோரின் பாத்திரங்களில் போஸ் வெங்கட்டுக்கு மட்டும் அந்த சொட்டை கெட்-அப் ஒட்ட வேயில்லை., அந்த பாத்திரத்திற்கும் அவர், பெரிதாக பொருந்தவேயில்லை என்பது சற்றே பலவீனம்.
டி.ஆர்.கே.கிரணின் கலை இயக்கம் பிரமாண்ட கலர்புல் கச்சிதம். ஆண்டனியின் கத்தரி பின்பாதி படத்தில் இன்னும் ஷார்ப்பாக செயல்பட்டிருக்கலாம்.
ஹிப் ஆப் தமிழாவின் இசையில் "ஆக்ஸிஜன் தந்தாலே முன்னொரு பொழுதினிலே..." உள்ளிட்ட பாடல்களும் அதற்கு அபி நந்தன் இராமானுஜத்தின் இயற்கை எழில் கொஞ்சும் ஒளிப்பதிவும் செம கச்சிதம். அதேமாதிரி கதைக்கேற்ற மிரட்டல் பின்னணி இசையும், பிற காட்சிகளுக்கான பிரமாத ஒளிப்பதிவும் கூட படத்திற்கு பெரும் பலம்.
இயக்குனர் கே.வி.ஆனந்த், எழுத்தாள இரட்டையர்கள் சுபா, கபிலன் வைரமுத்துவின் கதை, திரைக்கதை வசனத்தில், "என்னை நாசம் பண்ணின மூணு பேர் கூட, கெட்டவங்களா வந்துட்டு கெட்டது பண்ணிட்டு போனாங்க. ஆனா, நீங்க நல்லவனா வந்துட்டு எனக்கு இப்படி கெட்டது பண்ணிட்ங்களே..", "நிருபர்களில், கேள்வி தான் முக்கியம்னு நினைக்கிறவன் கத்தி கத்தி கேட்பான், பதில் தான் முக்கியமுன்னு நினைக்கிறவன் அமைதியா அசத்தலா கேள்வி கேட்பான்...", "ஆம்பள ஆயிரம் வித்த காட்டினாலும், போட்டி நிகழ்ச்சிகளில் ஒரு பொம்பளை இடுப்பை காட்டினா தான் மவுசு...", "கன்னி கழியாம புள்ள பெத்த பெண்ணும் இல்ல..., யோக்கியமான அரசியல்வாதின்னு எவனும் இல்ல..." என்பது உள்ளிட்ட வசன "பன்ச்" கள் மூலமும், அதிரடி டி.வி மீடியாக்களின் சுயநலக்காட்சிகள் மூலமும் ரசிகனை வசீகரிக்கும் "கவண்", இடைவேளைக்கு முந்தைய நடுரோட்டு குடி இரவு காட்சிகளில், முகம் சுழிக்க, சுளிக்கவும் வைக்கிறான்.
பொறுப்பான மீடியா நிருபர்கள் பொம்பளபிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போகும் போது, என்ன தான் வேலை போன விரக்தி என்றாலும், நடுரோட்டில் இப்படியா? நடந்து கொள்வார்கள்...? என ரசிகன் கேட்கத் தூண்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இது மாதிரி ஒரு சில குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஒரு சில சுயநல டி.வி.சேனல் முதலாளிகள், அயோக்கிய அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கும் கே.வி.ஆனந்தின், "கவண் பெரிய அளவில், தமிழ் சினிமா ரசிகனை கவருவான்!"
ஆக மொத்தத்தில், "கவண் - ஜாம்பவான்!"
----------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
டி.ஆர்.பிக்காக மீடியாக்களில் நடக்கும் தில்லுமுல்லுவை தோலுரித்துக் காட்டும் படம் கவண், கோ வெற்றியைத் தொடர்ந்து, கே.வி. ஆனந்த், சுபா கூட்டணி, விஜய் சேதுபதி, கபிலன் வைரமுத்துவுடன் கலந்து கட்டி பாய்கிறார்கள்.
ஜென் ஒன் என்ற தனியார் டி.வி.யில் வேலைக்குச் சேர்ந்து அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் இளைஞன் விஜய் சேதுபதி, வில்லன் போஸ் வெங்கட்டின் தொழிற்சாலைக் கழிவை எதிர்த்துப் போராடும் விக்ராந்த், அவரோடு சேர்ந்து போராடும் அவரது காதலியை வில்லன்கள் கற்பழித்து, சேனல் உதவியுடன் கதையை மாற்றுகிறார்கள். இதை எதிர்த்து டி.ராஜேந்தரின் ஒரு சின்ன சேனலில் சேர்ந்து பழைய சேனலை வீழ்த்துவதுதான் கதை.
விஜய் சேதுபதி படத்திற்குப் படம் வித்தியாசம் காட்டுகிறார். இதில் கலகல மாணவர், மடோனாவின் காதலர், சமூகப் பொறுப்புள்ள மீடியாக்காரர் என்று எல்லாவற்றிலும் ஏ ஒன் நடிப்பு.
டி.ராஜேந்திரர் படத்தின் பெரிய ப்ளஸ். அடுக்கு மொழியில் கொல்லவும் செய்கிறார். மனதைக் கொள்ளை கொள்ளவும் செய்கிறார். ஹீரோயின் மடோனா விஜய் சேதுபதியின் காதலியாக, உடன்பணிபுரியும் மீடியாக்காரராக அசத்துகிறார்.
பாண்டியராஜன், விக்ராந்த், சேனல் முதலாளி ஆகாஷ் தீப், வில்லன் போஸ் வெங்கட், ஜெகன், நாசர் என்று எல்லோருமே காட்சிக்கு காட்சி கச்சிதமாக நடிப்பு.
இசை சுமார் ரகம், ஒளிப்பதிவு அந்த குறையை போக்குகிறது. வசனம் படத்தின் இன்னொரு பக்க பலம்.
கோ படத்தின் பல காட்சிகளை, திரும்ப பார்த்த உணர்வு. அரசியலவாதிகள்.. ரௌடிகள் கலாட்டா... சேனலில் கருப்பு ஆடுகள் என்று பல காட்சிகள்.
மீடியா செய்யும் தப்பை தட்டிக் கேட்பதுடன் சேனல்களின் இன்னொரு இருட்டு முகத்தை தோலுரித்துக் காட்டும் முயற்சிக்காகவும் இயக்குனர் கே.வி. ஆனந்துக்குப் பாராட்டுக்கள்.
கவண்: சேனல்களின் மறுபக்கம்.
குமுதம் ரேட்டிங்: ஓக