தினமலர் விமர்சனம் » ரெளத்திரம்
தினமலர் விமர்சனம்
அநியாத்தை கண்டால், அந்த இடத்திலேயே பொங்கி எழும் கேரக்டர் ஹீரோ சிவா எனும் ஜீவாவினுடையது. இந்த கேரக்டரே அவருக்கு எண்ணற்ற வில்லன்களையும், எண்ணி, அள்ளி மகிழ ஒரே ஒரு கதாநாயகியையும் பெற்று தருவது தான் "ரெளத்திரம்" படத்தின் மொத்த கதையும்!
சின்ன வயதில் தாத்தா வீட்டில் வளரும் பேரன் ஜீவா, தாத்தா பாணியில் (பிரகாஷ் ராஜ்) பாணியில் கெட்டதை கண்டால் சட்டென விலகாமல், பட்டென கைநீட்டும் கேரக்டரில் சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். நாம் நல்லவங்களுக்கு சப்போர்ட்டா களத்திலே இறங்கினோமுன்னா, அதனால் அவங்க முகத்துல கிடைக்கிற சந்தோஷமும், மனசுக்கும் கிடைக்கும் நிம்மதியும், நம்மை காலம்பூரா வாழவைக்கும் எனும் தாத்தாவின் வார்த்தையை வேதவாக்காக கொண்டு வாழும் ஜீவா, படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் நம்மால் அப்படி முடியாதா...? என ஏங்க வைக்கிறார். அனல் பறக்கும் ஆக்ஷ்ன் காட்சிகளில், எதிராளிகளை அடித்து தூள் பறத்தும் ஜீவா, குறிப்பாக ரசிகைகளை கட்டி போட்டு விடுவதுதான் "ரெளத்திரம்" படத்தின் பெரிய ப்ளஸ்!
கதாநாயகி ஸ்ரேயாவின் நடிப்பில் வழக்கமான துறுதுறுப்புடன், கூடுதல் விறுவிறுப்பு சேர்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், ஜீவா, இவர் இணைந்து நடித்த நாயகர்களில் ரொம்பவும் இளசு என்பது காரணமாக இருக்கலாம். வாவ், காதல் காட்சிகளில், ஜீவாவுடன் என்னமாய் நெருக்கமாய் இணைந்து நடித்திருக்கிறார் அம்மணி! அதற்காக ஆக்ரோஷ ஜீவாவை ஒரு அடிதடி அதிரடி காட்சியில் பார்த்ததும், பெரிய போலீஸ் அபிஸர் மகள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவியான ஸ்ரேயாவுக்கு காதல் பொத்துக் கொண்டு வருவது சற்றே நெருடுகிறது. மற்றபடி ஸ்ரேயா டபுள் ஓ.கே.,
மகன் ஜீவாவுக்கு தன் தந்தையின் பெயரை வைத்துவிட்டு முரட்டு சுபாவத்திலும், பிறருக்கு உதவும் குணத்திலும், தன் அப்பவையே பிரதிபலிக்கும் மகனை, அவரு இவரு... என வளர்த்தபடி, ஊரோடு ஒத்து வாழ் என்று மகனை உத்தரவு இடமுடியாமல் தவிக்கும் அப்பா கேரக்டர் ஜெயபிரகாஷ் செம கச்சிதம்! ஜீவாவின் அண்ணன் அசோக்காக வரும் ஸ்ரீநாத்தும், தங்கச்சி மாப்பிள்ளை பி.ராமனுஜமாக வரும் சத்யனும் செம காமெடி! அப்பாவித்தனமாக இருந்து கொண்டு அசட்டுத்தனமாக அலட்டுவது சத்யனுக்கு மட்டுமே சாத்தியப்படும் சமாச்சாரம்! மனிதர், அதை சரியாக செய்து சாபஷ் வாங்கி விடுகிறார் பேஷ் பேஷ்!!
வில்லன்களாக கிட்டு பாத்திரத்தில் வடஇந்திய டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யாவையும், கெளரி பாத்திரத்தில் "பொல்லாதவன்" படத்தில் பைக் திருடும் பலே ஆசாமியையும் போட்டு, கெளரி ஜெயிலில் இருந்து வரட்டும், வரட்டுமென்று பில்-டப் புகளிலேயே பிய்த்து டெலலெடுத்திருப்பது இயக்குநரின் எக்கு தப்பான (சரியான...) துணிச்சலுக்கு சான்று! அதேநேரம் க்ளைமாக்ஸில் ஸ்ரேயாவிற்கு நேரும் முடிவு, நெருடலாக இருப்பதை சற்றே தவிர்த்திருக்கலாம் இயக்குநர் நினைத்திருந்தால்... என்பதும் நிஜம்!!
சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சியும் ஒருவித ஓவியமாக மிளிர்கிறது என்றால், பிரகாஷ் நித்தியின் இசையில், பாடல்கள் ஒவ்வொரு ரகம். அதிலும் மோகன் ஜி என்பவரது ஆக்கத்திலும், இசையிலும் உருவான "வேடிக்கை பார்க்கும் பாவிகள் முன்னாலே...." எனத் தொடங்கி தொடரும் க்ளைமாக்ஸ் பாடல், உயிரில் புகுந்து உணர்வில் ஏதேதோ செய்வது உண்மை! முதல்படத்திலேயே நகரத்தின் தாதா கலாச்சாரத்தை, பளிச்சென படமாக்கி இருக்கும் இயக்குநர் கோகுலுக்கு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்!
மொத்தத்தில் "ரெளத்திரம்" - "நல்வீரியம்!"
-----------------------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
"துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்று பதறுகிறவர்களுக்கு மத்தியில், முஷ்டியை முறுக்கி துவம்சம் பண்ணச் சொல்வதுதான் "ரௌத்ரம்.
தற்காப்புக் கலையில் கில்லாடியான தாத்தா, தனது கோபத்தையும் வித்தையையும் பேரனுக்குத் தந்துவிட்டுச் செல்கிறார். அதை அப்படியே பின்பற்றும் பேரன் பின்னாட்களில் சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. குடும்பத்தினரே எட்டி நின்று பேசக்கூடிய கோபக்காரப் பையனாக ஜீவா. சதா அனல் பறக்கும் பார்வையும் நிதானமும் கலந்த ஜீவாவின் ஆக்ஷன் வெகு இயல்பு.
ஷ்ரேயாவின் நடிப்பில் அதே துறுதுறு. பாடல் காட்சிகளில் அதே தாராளம். ஸ்ரேயா ஜீவாவின் சமூகக் கோபத்தைப் பார்த்த அந்த விநாடியே காதலில் விழுவது நெருடுகிறது. அதைத் தொடரும் சின்னச் சின்ன கலாட்டாக்களுக்குப் புன்னகைக்க மட்டுமே முடிகிறது. அதிரடி தாத்தாவாக ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், பிரகாஷ்ராஜ் அடித்திருப்பது சிக்ஸர்.
மகனான ஜீவாவை அப்பாவின் பிம்பமாகவே பார்த்து மதிப்புடன் நடத்துகிற கேரக்டரை ஜெயப்பிரகாஷ் ரசித்துச் செய்திருக்கிறார். மூக்கு நுனியில் கோபத்தை வைத்துக்கொண்டு அலையும் ஜீவாவிடமே "சார், நான் கொஞ்சம் ஷார்ட் டெம்பர் ஆளு என்று அலட்டுவது சத்யனால் மட்டுமே முடிகிற காமெடி.
ஜீவாவின் ஒவ்வொரு அடிதடியிலும் "கௌரி வரட்டும், பார்த்துக்கலாம் என ரவுடிகளை விலகிப்போக வைத்துவிட்டு, கடைசியில் படு ஒடிசலான ஒரு ஆளை கௌரியாக இறக்கியிருப்பது இயக்குநரின் மகா தைரியம். அந்த கௌரி எகத்தாளமான முகபாவங்களை வைத்தே பட்டையைக் கிளப்பி விடுகிறார்.
ஜீவாவின் ரௌத்ரத்தை குடும்பம் கட்டாயமாக அடக்கிவைக்கிற க்ளைமாக்ஸ் முடிவில் கொஞ்சம் ஏமாற்றம். ஆனால் நெத்தியடி.
சென்னையின் தாதா கலாசாரத்தை இன்னும் பக்கத்தில் போய் பதிவு செய்திருக்கும் அறிமுக இயக்குநர் கோகுலைத் தட்டிக் கொடுக்கலாம்.
ரௌத்ரம் - கம்பீரம்
குமுதம் ரேட்டிங் - ஓகே