விமர்சனம்
தயாரிப்பு - மேட் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - வெங்கடேஷ்வராஜ்
இசை - ராம் கணேஷ்
நடிப்பு - கஜராஜ், ஜீவா ரவி, வினோத், பௌசி ஹிதயா
வெளியான தேதி - 20 ஏப்ரல் 2024
நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
புதுப் புது இயக்குனர்கள் பலர் பிரபல நட்சத்திரங்கள் என யாரும் இல்லாமல், படங்களைக் கொடுக்க முயற்சிக்கிறார்கள். ஒரு பக்கம் இவை வரவேற்கப்பட வேண்டியவை என்றாலும், ஏதாவது ஒரு நடிகராவது பிரபலமாக இருந்தால்தான் தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைக்க முடியும் என்பதையும் அவர்கள் யோசிக்க வேண்டும்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் ஒரு க்ரைம் திரில்லராகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். எதிர்பாராத திருப்பங்களுடன் திரைக்கதையை அமைத்து ரசிக்கும்படியாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ்வரராஜ்.
ஒரு அபார்ட்டிமென்ட்டில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கு விசாரணையை இன்ஸ்பெக்டரான வினோத் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதனிடையே, எம்எல்ஏ ஜீவா ரவியின் மகன் சில நாட்களாக காணாமல் போகிறார். அடுத்து ஜீவா ரவியும், அவரது வக்கீல் கஜராஜின் உதவியாளர் ஒருவரும் கொல்லப்படுகிறார்கள். கஜராஜாவையும் யாரோ கொல்ல முயல அவர்களிடமிருந்து தப்பித்து இன்ஸ்பெக்டர் வினோத்திடம் புகார் சொல்கிறார் கஜராஜ். அடுத்தடுத்து நடந்த சில கொலைகளின் கொலையாளி யார் என்பதை இன்ஸ்பெக்டர் வினோத் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நடந்த கொலைகளுக்கும் அவற்றை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் வினோத்தின் தங்கை மரணத்திற்கும், கஜராஜை சிலர் கொல்ல முயல்வதற்கும் திரைக்கதையில் ஒரு தொடர்பு இருக்கிறது. அவையெல்லாம் என்ன என்பதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியாகவும் பிளாஷ்பேக்கில் சொல்கிறார் இயக்குனர்.
கதையின் நாயகர்களாக வக்கீல் கஜராஜ், இன்ஸ்பெக்டர் வினோத் நடித்திருக்கிறார்கள். கஜராஜின் கதாபாத்திரம் என்ன என்பதைச் சொன்னால் படத்தின் மொத்த சுவாரசியமுமே போய்விடும். கொலையாளியை எப்படியவது கண்டுபிடிக்க வேண்டும் என நிறையவே முயற்சிக்கிறார் வினோத்.
இரண்டாம் பாதியில் வரும் சில பிளாஷ்பேக் காட்சிகள் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகளாக அதிர்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளன. ஆசிரியைகளிடமே அத்து மீறும் பள்ளி மாணவர்களைப் பற்றிய கதையாக அவை அமைந்துள்ளன. பணமும், வசதியும், அதிகார பலமுமே சிறு வயதிலேயே சிலரைக் குற்றவாளியாக்குகிறது என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். பள்ளி ஆசிரியையாக பௌசி ஹிதயா இயல்பாக நடித்திருக்கிறார். இளம் குற்றவாளியாக பள்ளி மாணவராக பாலாஜி அதிர்ச்சியளிக்கிறார்.
பொறுப்பில்லாத மகனைப் பெற்றுத் தவிக்கும் அரசியல்வாதியாக ஜீவா ரவி, கிளைமாக்சில் மட்டுமே வரும் அனந்த் நாக் ஆகியோரும் குறிப்பிட வேண்டியவர்கள்.
சினிமாவுக்கான ஒளிப்பதிவும், லைட்டிங்கும் வேறு என்பதை ஒளிப்பதிவாளர் சேட்டை சிக்கந்தர் புரிந்து செய்திருக்க வேண்டும். ராம் கணேஷின் பின்னணி இசை பரவாயில்லை.
திரைக்கதை யுக்தியால் கவர வைத்த இயக்குனர், படத்தின் உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும். பல காட்சிகள் ஒரு குறும்படம் பார்க்கும் உணர்வையே தருகிறது.
சிறகன் - சிக்கனமாய்…
பட குழுவினர்
சிறகன்
- இயக்குனர்