ஒரு நொடி,Oru Nodi

ஒரு நொடி - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மதுரை அழகர் மூவிஸ், ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ்
இயக்கம் - மணிவர்மன்
இசை - சஞ்சய் மாணிக்கம்
நடிப்பு - தமன்குமார், எம்எஸ் பாஸ்கர், வேலராமமூர்த்தி
வெளியான தேதி - 26 ஏப்ரல் 2024
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

கிரைம் கதைகளுக்கென்று எப்போதுமே தனி ரசிகர் கூட்டம் உண்டு. முன்னணி நடிகர்கள்தான் அம்மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும் என்று இல்லை. வளரும் நடிகர்களும், புதுமுக நடிகர்களும் நடித்தாலும் கதையும், திரைக்கதையும் சுவாரசியமாக இருந்தால் அந்தப் படம் வரவேற்பைப் பெறும். குறிப்பாக இன்றைய ஓடிடி யுகத்தில் இம்மாதிரியான படங்களைத்தான் அவர்கள் மிகவும் விரும்பி வாங்குகிறார்கள். அந்த விதத்தில் இந்தப் படத்தின் இயக்குனர் மணிவர்மன் ஒரு சுவாரசியமான படத்தைக் கொடுத்திருக்கிறார்.

அலங்காநல்லூரில் நடக்கும் கதை. ஸ்டுடியோ நடத்தி வரும் எம்எஸ் பாஸ்கர் மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனுக்காக, வேல ராமமூர்த்தி அவரிடம் உள்ள ஒரு இடத்தின் பத்திரத்தை வாங்கிவிடுகிறார். அந்தப் பத்திரத்தை மீட்க எட்டு லட்ச ரூபாய் பணத்துடன் சென்ற எம்எஸ் பாஸ்கர் காணாமல் போகிறார். அது பற்றிய விசாரணையை இன்ஸ்பெக்டர் தமன்குமார் நடத்த ஆரம்பிக்கிறார். சந்தேகத்தின் பேரில் வேலராமமூர்த்தியைக் கைது செய்கிறார். அதற்கடுத்து ஒரு இளம் பெண்ணும் கொல்லப்படுகிறார். அடுத்தடுத்து இரண்டு கொலைகளின் விசாரணையில் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கிறது. இரண்டு கொலைகளின் குற்றவாளியை இன்ஸ்பெக்டர் தமன்குமார் எப்படி கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் கதை.

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்குரிய மிடுக்குடன் இருக்கிறார் தமன்குமார். காக்கி உடை அணியாமலேயே அவரது தோற்றமும், உடல்மொழியும் காவல்துறை அதிகாரிக்குரிய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறது. நேர்மையான இன்ஸ்பெக்டராக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதனால், உள்ளூர் எம்எல்ஏ மிரட்டலுக்கும், அவரது ஆளான வேலராமமூர்த்தி மிரட்டலுக்கும் அடிபணிய மறுக்கிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு தமன் நடித்து வெளிவந்துள்ள படம். ஒரு நொடி அவருக்கான அடுத்த படிகளைத் திறக்க வாய்ப்புள்ளது.

படத்தில் கதாநாயகி என்று யாருமில்லை. சில முக்கிய பெண் கதாபாத்திரங்கள் மட்டுமே படத்தில் இருக்கிறார்கள். எம்எஸ் பாஸ்கர் மனைவியாக ஸ்ரீ ரஞ்சனி, அநியாயமாகக் கொல்லப்படும் இளம் பெண்ணாக நிகிதா, இவரது அம்மா தீபா சங்கர் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

வேலராமமூர்த்தி வழக்கம் போல பேச்சிலேயே மிரட்டுகிறார். எம்எல்ஏவாக நடித்திருக்கும் பழ கருப்பையா நாடகத்தில் நடிப்பது போல நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கம் அருண் கார்த்திக், விக்னேஷ் ஆதித்யா, கஜராஜ், கருப்பு நம்பியார் குறைவாக வந்தாலும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.

சஞ்சய் மாணிக்கம் பின்னணி இசை, ரத்தீஷ் ஒளிப்பதிவு, குரு சூர்யா படத்தொகுப்பு ஒரு நொடிக்கு நாடியாய் அமைந்துள்ளது.

இடைவேளைக்கு முன்பு வரை விசாரணை நடப்பது விறுவிறுப்பாக நகர்கிறது. இடைவேளைக்குப் பின் திரைக்கதை கொஞ்சம் தடுமாறி ஆரம்பக் கதையிலிருந்து கொஞ்சம் விலகிப் போகிறது. இரண்டாவது கொலைக்கும், முதல் கொலைக்கும் தொடர்பு இருக்கும் என்பதை நம்மாலும் யூகிக்க முடிகிறது. சமீப காலங்களில் வந்த கிரைம் திரில்லர் படங்களில் குறிப்பிடும்படியான ஒரு படமாக இருக்கிறது.

ஒரு நொடி - உயிர்நாடி…

 

ஒரு நொடி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஒரு நொடி

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓