மெர்ரி கிறிஸ்துமஸ்,Merry Christmas

மெர்ரி கிறிஸ்துமஸ் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - டிப்ஸ் பிலிம்ஸ், மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் - ஸ்ரீராம் ராகவன்
இசை - ப்ரிதம், டேனியல் பி ஜார்ஜ்
நடிப்பு - விஜய் சேதுபதி, காத்ரினா கைப், ராதிகா
வெளியான தேதி - 12 ஜனவரி 2024
நேரம் - 2 மணி நேரம் 24 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

கிரைம் திரில்லர் வகைப் படங்களை இப்படியும் கூட எடுக்கலாமா என ஆச்சரியப்பட வைத்திருக்கும் ஒரு படம். அதிகமான கதாபாத்திரங்கள் இல்லாமல், அடிக்கடி வரும் பரபரப்புகள் இல்லாமல் உணர்வு சார்ந்த ஒரு படமாக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.

ஹிந்தியில் 'அந்தாதுன், பட்லபூர், ஏஜன்ட் வினோத்' உள்ளிட்ட சில படங்களை இயக்கிய தமிழர். இந்த 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தை ஹிந்தி, தமிழில் இயக்கியதன் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஒரே ஒரு வீட்டிற்குள் அதிகமான காட்சிகள் நகரும் ஒரு கிரைம் திரில்லர் கதை. திருமணமாகி ஒரு மகளுக்குத் தாயாக இருப்பவர் காத்ரினா கைப். பொறுப்பற்ற கணவரால் சில பல இன்னல்களுக்கு ஆளானவர். கிறிஸ்துமஸ் நாட்களில் ஒரு ரெஸ்ட்டாரென்டில் விஜய் சேதுபதியை சந்தித்து அவருடன் தன் வீட்டிற்குச் செல்கிறார் காத்ரினா. இருவரும் வீட்டில் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, பின் வெளியில் சென்று மீண்டும் வீட்டிற்கு வரும் போது காத்ரினா கைப்பின் கணவர் கையில் துப்பாக்கியுடன் நெஞ்சில் குண்டு பாய்ந்து இறந்து கிடக்கிறார். தன்னைப் பற்றிய ஒரு உண்மையைச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார் விஜய் சேதுபதி. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நான்கைந்து கதாபாத்திரங்கள், காத்ரினா கைப்பின் வீடு, மும்பை மாநகரம், பம்பாய் ஆக இருந்த காலத்தில் நடக்கும் கதை என நம்மை வேறு ஒரு உலகத்திற்குள் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். காட்சிகளுக்கான நேர்த்தி, கதாபாத்திர வடிவமைப்பு, நடிகர்களின் நடிப்பு அனைத்தும் தமிழ் சினிமாவுக்கும் கொஞ்சம் புதியது. படத்தின் கடைசி அரை மணி நேரம் உற்று கவனித்தால் மட்டுமே புரியும்.

இது போன்ற கதாபாத்திரங்கள் விஜய் சேதுபதிக்கு 'கேக் சாப்பிடுவது போல. காதலியை கொலை செய்துவிட்டு ஏழு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு மும்பை திரும்பும் ஒரு கதாபாத்திரம். காத்ரினாவுடன் யதேச்சையாக நிகழும் ஒரு சந்திப்பு, அவருடன் சேர்ந்து செல்ல வைத்து, கடைசியில் அவருக்காக ஒரு தியாகத்தையும் செய்ய வைக்கிறது. இதற்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரங்களுக்கும், இந்த 'மெர்ரி கிறிஸ்துமஸ்' ஆல்பர்ட் கதாபாத்திரத்திற்கும் நிறைய மாற்றம் தெரிகிறது.

ஹிந்தியில் காத்ரினா கைப் உச்சத்தில் இருந்த போது தமிழில் நடிக்க மாட்டாரா என ஏங்கிய ரசிகர்கள் பலர். நீண்ட தாமதத்திற்குப் பிறகு தமிழில் அறிமுகமானாலும் தரமான நடிப்பில் ரசிகர்களை தடுமாற வைக்கிறார். வாய் பேச வராத குழந்தை, இன்னல்களைத் தரும் கணவர் இவர்களுக்கிடையில் மன நிம்மதி இழந்து தவிக்கும் ஒரு கதாபாத்திரம். விஜய் சேதுபதியைப் பார்த்ததும் கொஞ்சம் நெருக்கம் காட்டுகிறார். கடைசியில் அதிலும் அவருக்கு மிஞ்சுவது ஏமாற்றமே. குடும்ப வாழ்வில் நிம்மதி இல்லாமல் தவிக்கும் பெண்ணின் உணர்வுகளை இயல்பாய் வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் ஆரம்பத்தில் குடும்ப நண்பராக ராஜேஷ், கிளைமாக்ஸ் முன்பாக ராதிகா சரத்குமார், சண்முக ராஜன், கவின் ஜே பாபு என சில கதாபாத்திரங்கள். மும்பையில் நடக்கும் கதை என்பதால் நமக்குக் கொஞ்சம் அந்நியமாக இருக்கிறது.

காத்ரினாவின் வீட்டிற்கான உள் அரங்க அமைப்பு, மது நீலகண்டன் ஒளிப்பதிவு குறிப்பிட வேண்டியவை. டேனியல்பி ஜார்ஜ் பின்னணி இசை சிறப்பு.

படம் மிக மெதுவாய் நகர்வது பொறுமையை சோதிக்கிறது. கடைசி அரை மணி நேரப் படத்தின் பரபரப்புக்காக அமைதியாக இருக்க வேண்டும். ஆங்காங்கே சில வசனங்கள் ரசனையாகவும், சுவாரசியமாகவும் எழுதப்பட்டுள்ளன. இம்மாதிரியான படங்கள் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

மெர்ரி கிறிஸ்துமஸ் - கடைசியில் 'மெர்சி'யாய்…

 

மெர்ரி கிறிஸ்துமஸ் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மெர்ரி கிறிஸ்துமஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓